சேவை பெறும் உரிமை – குடிமக்களை அரசானாக்க உறுதி ஏற்போம்

Tuesday, November 12th, 2013 @ 8:30PM

அரசு ஊழியர் அல்லது “கவர்மென்ட செர்வன்ட்” ஆகிய வார்த்தைகளை நாம் எந்த இடத்தில் கேட்டாலும், அந்த இடம் அரசாங்க அலுவலகம் என்றும், ஒரு அரசு ஊழியருக்கும், பொது மக்களுக்கும் ஏதாவது ஒரு வாக்குவாதம் அங்கே நடக்கிறது எனவும் புரிந்துகொள்வோம். பெரும்பாலான நேரங்களில் அந்த வாக்குவாதம் ஒரு விசயத்தை சுற்றி மட்டுமே இருக்கும் – “இன்னும் எத்தனை தடவை நான் இப்படி நடக்கிறது? எவ்வளவு நாள் ஆகும்னாவது சரியா சொல்லுங்க”. அதன் பெயர் காலதாமதம். அரசு செய்ய வேண்டிய சேவையில் (குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், புகார் மீது நடவடிக்கை, இன்ன பிற..) உள்ள குறைபாடு குறித்த காலதாமதம்.

கால நிர்ணய சேவைகள் :

இது போன்ற காலதாமதத்தை குறைக்க அரசு சேவைகளில் ‘கால நிர்ணயம்’ (Time-Bound) இல்லையா? இல்லாமல் இல்லை. நிறைய அரசு சேவைகளில் கால நிர்ணயம் செய்யப்பட்ட ‘குடிமக்கள் சாசனம்’ உள்ளது. ஒருவர் ‘குடும்ப அட்டை’ விண்ணப்பித்த பின், அவருக்கு வழங்கப்படும் ஒப்புகை ரசீதில் மிகத் தெளிவாக குடும்ப அட்டை தொடர்பான ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு கால நிர்ணயம் என தெளிவாக இருக்கும். ஆனால் அவை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதே கேள்வி.

கால நிர்ணய சேவை இல்லாததால் ஒவ்வொரு சேவையையும் மூடி மறைத்து மக்களுக்கும், அரசு அலுவலகத்திற்கும் இடையிலான தூரம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது.

RTS-Pic

லஞ்சம், லஞ்சம், லஞ்சம் :

கால நிர்ணயம் இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லை. ஆனாலும் அரசு சேவை வேண்டுமா..? அது சாத்தியம். அரசு ஊழியர்கள் தங்களுடைய பணியை செய்ய ‘லஞ்சம்’ தந்தால் எவ்வளவு சீக்கிரம் வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த சேவைகளை பெறலாம்.இதற்கு விதி விலக்காக சிலர் இருந்தாலும், அரசு அலுவலகம் என்றாலே மக்களுக்கு பயமே மிஞ்சி நிற்கிறது.

பல நேரங்களில் நம் சேவைக்காக நாம் போக வேண்டிய அரசு அலுவலகத்திற்கு செல்லாமலே ‘கொடுக்க வேண்டியதை’ சரியான நபரிடம் கொடுத்தால் நம் சேவை வீடு தேடி வரும்.

கால நிர்ணயம் இல்லாத சேவைகள்:

காவல் நிலையத்தில் ஒருவர் புகார் தந்தால் அவருக்கு உடனே புகார் மனு ரசீது (CSR) தரப்படவேண்டும். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் ஒரு புகாரை காவல் துறையை வாங்கவைப்பதே சிரமமான காரியமாக உள்ளது. இவற்றிற்கு கால நிர்ணயம் செய்தால்தான் இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு, உண்மையான சட்டத்தின் ஆட்சி நடக்கும். இது போன்ற பல சேவைகளுக்கு கால நிர்ணயம் தேவை.

கால நிர்ணயம் – செயல்படுத்துவது எப்படி?

தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் எல்லோரும் இதை கடந்து வருவார்கள். ஒருவருக்கு வழங்கப்பட்ட பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் சரியாக செய்யாதபட்சத்தில், அவரின் மேலதிகாரி அவரை கேள்விக்கு உட்படுத்துவார். தேவை ஏற்பட்டால் அவரின் சம்பளம் குறைக்கப்படும்.

அரசு சேவையை பொறுத்தவரை இந்த கண்காணிப்பு அறவே இல்லை என்றே சொல்லவேண்டும். 60 நாட்களாகி விண்ணப்பித்த குடும்ப அட்டை வராவிட்டால், விண்ணப்பித்தவருக்கு, மறுபடியும் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள் என்ற பதிலை தவிர வேறு பதில்கள் தரப்படுவதில்லை. அவர் புகார் செய்ய முற்பட்டால், அந்த புகாருக்கு உண்டான பதிலோ, அந்த சேவை குறைபாட்டிற்கு ஏதாவது நிவாரணமோ அவருக்கு இல்லை.

மேற் சொன்ன அதே உதாரணத்தில், விண்ணபித்த 60 நாட்களாகி குடும்ப அட்டை கிடைக்காத பட்சத்தில் விண்ணப்பித்தவர் முறையிட, அந்த சேவை குறைப்பாட்டை குறிப்பிட்ட நாட்களுக்குள் (7 நாள்) விசாரித்து எழுத்துப் பூர்வ பதில் தரும் ஒரு மேல் முறையீட்டு அலுவலர் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். ஒரு வேலை அந்த மேல் முறையீட்டு அலுவலரும் சரியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்கள் இருவரையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் (7 நாள்) விசாரிக்கும் இரண்டாம் மேல் முறையீட்டு அலுவலர் இருந்தால் எப்படி இருக்கும். விசாரிக்கும் இரண்டாம் மேல் முறையீட்டு அலுவலர், விண்ணப்பித்தவருக்கு உண்மையிலேயே சேவை குறைபாடு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவருக்கான நிவாரணமாக ஒரு நாளைக்கு ரூபாய் 50 முதல் 5000 வரை சேவை சரியாக வழங்காத அலுவலர், விசாரணை சரியாக மேற்கொள்ளாத முதல் மேல் முறையீட்டு அலுவலர் ஆகிய இருவரின் சம்பளத்தில் இருந்து எடுத்து வழங்கினால் எப்படி இருக்கும். அப்படி ஒன்று நடக்க வாய்ப்புள்ளதா என்பதை ஒரு 2 நிமிடம் மறந்து, அப்படி ஒன்று நடந்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சிந்திப்போம்.

1)       வெளிப்படையான அரசு சேவை – விண்ணப்பித்த குடும்ப அட்டை, 3 ஆம் நாள் என்ன நிலைமையில் உள்ளது, 30 ஆம் நாம் என்ன நிலைமையில் உள்ளது என்பது வரை தெரிந்துகொள்ள வாய்ப்பு.

2)       லஞ்ச ஒழிப்பு – நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அரசு சேவை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்பொழுது லஞ்சத்திற்கான தேவையே இல்லாமல் போகும்.

3)       வீட்டில் இருந்தே அரசு சேவை – கால நிர்ணயம் என்ற ஒன்று வந்த பிறகு அரசு சேவைகள் யாவும் கணினிமயமாக்கப்பட்டு, எங்கு இருந்து வேண்டுமானாலும் அரசு சேவைக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்படும்.

இது சாத்தியமா..?

மேலே சொன்ன யாவும் நம் கற்பனையோ அல்லது மாயாஜாலமோ அல்ல. இந்தியாவில் 15 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிஜம். 2010ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில், பா.ஜ.க தலைமயிலான சிவ்ராஜ் சவுகான் அரசு முதன் முதலான தங்கள் மாநிலத்திற்கு “சேவை பெறும் உரிமை” சட்டத்தை அமுல்படுத்தி புரட்சி ஏற்படுத்தியது. இன்று வரை ஜார்காண்ட், உத்தரகாந்த் போன்ற சிறிய மாநிலம் முதல் நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் வரை இந்த சட்டம் அமுல்படுத்தபட்டு இது வரை பல கோடி மக்களுக்கு காலதாமதமில்லாத சேவையும், காலதாமதம் ஏற்பட்டால் அபராதமும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இந்த சேவை பெறும் உரிமை சட்டத்தை இனியும் காலதாமதமில்லாமல் கொண்டு வருவது தமிழக மக்களாகிய நம் ‘விரல்களில்’ மட்டுமே.

பெட்டிச் செய்தி :

ஆந்திர மாநிலத்தில் கால நிர்ணயம் கொண்ட 36 சேவைகள் கொண்டு வருவதற்காக திரு.ஜே.பி. அக்டோபர் 2,1998 ஆம் ஆண்டு அன்றைய ஆளுனரிடம் மனு வழங்கினார். அவரின் கோரிக்கையை ஏற்று சில சேவைகளுக்கு கால நிர்ணயமும் சில வருடங்களுக்கு செய்யப்பட்டது. சேவை பெறும் உரிமை சட்டத்தை மத்தியில் கொண்டு வருவதற்காக லோக் சத்தா கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு பாராளுமன்ற நிலைக்குழுவிடம் 2 முறை தன்னுடைய பரிந்துரைகளை சிறப்பாக விளக்கி வந்துள்ளது. கடந்த வருடம் சேவை பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வருவதற்காக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு லோக் சத்தா கட்சி 3 நாட்கள் உண்ணாநிலையும் மேற்கொண்டது.

–    தெ.ஜெகதீஸ்வரன்

Categories: Activities, Article, Right to Services, September 2013, Whistle
Tags: , ,

1 Comment to "சேவை பெறும் உரிமை - குடிமக்களை அரசானாக்க உறுதி ஏற்போம்" add comment
thangaraj
November 13, 2013 at 3:21 pm

I AM THANGARAJ FROM TIRUPUR.I AM HAPPY TO KNOW ABOUT THE ACTIVITIES AGAINST THE GOVERNMENT MALPRACTICES.BUT IN TAMILNADU THE GOVERNMENT USING ITS POWER HAD TAKEN ALL CABLETV BROADCASTING CENTRES INTO ITS CUSTODY THREATENING CABLETV OPERATORS TO COLLECT ONLY SEVENTY RUPEES AS MONTHLY SUBSCRITION WHICH IS AGAINST TRAI ACT OF 2004 .LOK SATTA PARTY IN TIRUPUR ALSO SUPPORTS THE STATE GOVERNMENTS DICTATORSHIP.WHAT THE POOR OPERATORS CAN DO?

Leave a Reply

%d bloggers like this: