தெலுங்கானா – தெளிந்த நீரோடையா ? கலங்கிய குட்டையா?

Sunday, November 10th, 2013 @ 9:38PM

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் உருவாக மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணி அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக எழுப்பபட்டுவந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துள்ளது. உண்மைதான். ஆனால் இந்த முடிவு தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவா அல்லது கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியா? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல் லாபத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என பொது நோக்காளர்கள் கருதுகின்றனர்.தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏன் ? பின்தங்கிய மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காகவா ? அல்லது வேறு பிற காரணங்களுக்காகவா? தெலுங்கானா வரலாற்றை ஆரம்பகாலத்தில் இருந்து ஆராய்ந்து பார்த்தால்தான் இந்த முடிவின் அர்த்தம் புரியும்.அர்த்தம் புரிந்ததினால் மட்டும் இது அவசியப்பட்டதா அல்லது வேறு காரணங்களுக்காக இது அவசியப்பட்டதா என்பதை அவரவர் ஆராய்ச்சிக்கு விட்டுவிடலாம்.

ஆந்திர மாநிலம் 

மௌரிய சாம்ராஜ்யத்திற்குப் பிறகு சத்தவாஹனா, வகடகாஸ், விஷ்ணுகுண்டினாஸ், சாளுக்கியாஸ், ராஷ்ட்ரகுட்டாஸ்  என பல்வேறு சாம்ராஜ்யங்கள்  ஆந்திராவை ஆட்சி செய்துவந்தாலும் காக்கத்தியா சாம்ராஜ்யத்தில்தான் தெலுங்கு பேசும் மக்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக உருவாக்கப்பட்டுள்ளது.அந்த சமயம்தான் கோல்கொண்டா கோட்டையும்   கனபதிதேவா என்ற காக்கத்திய மன்னரால் கட்டப்பட்டுள்ளது.13 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் என்ற முகலாய மன்னர் காக்கத்திய சாம்ராஜ்யத்தை கைப்பற்றி முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் ஆந்திராவை கொண்டு வந்தார்.17 ஆம் நூற்றாண்டுக்குப்பின் நிஷாம் ஆட்சியின் கீழ் ஆந்திரா பல வளர்ச்சிகளை கண்டது.1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் ஆந்திராவை இந்திய ஆட்சியின் கீழ் கொண்டுவர அப்போதைய நிஷாம்கள் ஒத்துவரவில்லை.ராணுவ நடவடிக்கை மூலம் ஆந்திராவை 1948 செப்டெம்பரில் இந்தியாவின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.1948 இல் மத்திய அரசாக்கம் எம் கே வெள்லோடி என்பவரை மாநிலத்தின் முதல் மந்திரியாக நியமித்தது.அதுசமயம் ஐதராபாத்தை சுற்றி 9 மாவட்டங்களிலும் ,சென்னை மாகாணத்தின் கீழ் 12 மாவட்டங்களிலும்,எனாமிலும் , ஆக 22 மாவட்டங்களில் தெலுங்குபேசும் மக்கள் வசித்து வந்தனர்.1952 இல் ஜனநாயக முறைப்படி டாக்டர் பர்குல ராமகிருஷ்ண ராவ் ஆந்திராவின் முதன் முதல்மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 இல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இந்த 22 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஆந்திரபிரதேசம் மாநிலம் உருவானது.

தெலுங்கானா 

ஆந்திர மாநிலம்  உருவாக்கப்பட்டபோது 9 மாவட்டங்களைச் சேர்ந்த தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் இணைந்து ஒரே மாநிலமாக உருவாக சம்மதிக்கவில்லை. தெலுங்கானா பகுதி மக்களுக்கு போதிய வசதிகள் ஆந்திராவிற்கு இணையாக கிடைக்காது என்று பல்வேறு அச்சப்பாடுகளை முன்வைத்து இணைப்பிற்கு மறுத்துவந்தனர்.அப்போதைய முதல்  அமைச்சர் பர்குல ராமகிருஷ்ண ராவ் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றுபட்ட ஆந்திராவை உருவாக்கினார்.அப்போதைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் இந்த இணைப்பை கணவன் மனைவி உறவைப் போன்று , மனம் ஒத்துப்போகாதபோது பிரிந்துசெல்ல தக்க வகையில்   அமைந்துள்ளதாக சமாதானம் கூறியுள்ளார். அன்று முதலே தெலிங்கான தனி மாநில கோரிக்கை அரும்புவிட ஆரம்பித்து விட்டது.

apmap1

தனித் தெலுங்கானா போராட்டங்கள் 

ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு அமைப்புகள் ஆந்திர மாநிலம் உருவான விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தாலும், 1969 இல், சென்னா ரெட்டியால் துவங்கப்பட்ட ஜெய் தெலுங்கானா இயக்கம் நடத்திய போராட்டம் தான் பெரும் கிளர்ச்சியில் முடிந்து 300 க்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டது.அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி எட்டு அம்ச திட்டம் கொண்டு வந்து அன்று போராட்டத்தை சமாதானப்படுத்தினார் .அதன் பின்னர் பல்வேறு வாக்குறுதிகள் மூலம் போராட்டக்காரர்களை காங்கிரஸ் அரசு சமாதானம் செய்து வந்தது.1997 இல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது.அந்நேரம் தோல்விகளை சந்தித்து வந்த காங்கிரஸ் அரசு தனித்தெலுங்கானா கோரிக்கையை ஆயுதமாக எடுத்துக்கொண்டு களத்தில் குதித்தது.2004 இல் மத்தியிலும் மாநிலத்திலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சந்திரசேகர ராவ் தனித் தெலிங்கான கோரிக்கையை முன்னிருத்தி புதிய  கட்சி ஆரம்பித்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மத்திய ஆட்சியில் பங்கும் வகித்தார். காங்கிரஸ் அரசு தெலுங்கானா பிரச்சனையில் தாமதம் செய்து வந்ததால் கூட்டணியில் இருந்தும் மந்திரி பதவியில் இருந்தும் விலகி தனி தெலுங்கானா போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.2009 இலும் தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவோம் என்று வாக்கு கொடுத்து காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சியை பிடித்தது.தொடர்ந்து இப்பிரச்சினையில் காலதாமதம் செய்ததால் ,தனித் தெலுங்கானா கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் தங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்து,கூட்டு போராட்டக் குழு அமைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.பல உயிர்களை பலிகொண்ட இப்போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் அரசு இப்போது 2013 ஜூலையில் தெலிங்கான தனி மாநிலம் அமைக்க முடிவிற்கு வந்துள்ளது.இப்போதும் வர இருக்கின்ற நாடாளுமற்ற தேர்தலை மனதில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு மாற்று கருத்து கூற மடியாது .

தெலுங்கானா மாநிலம் 

அடிலாபாத் ,கரிம்நகர்,கம்மம் ,மகபூப்நகர், மேடக் ,நல்கொண்டா ,நிசாமாபாத், ராஜமுந்திரி வாரங்கல் ஐதராபாத், ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலமாக தெலிங்கான மாநிலம் உருவாகுகிறது.பூர்வாங்க நடவடிக்கைகளுக்கு இன்னும் குறைந்தது 4 மாதங்களாவது ஆகும்.மாநிலத் தலைநகர் உருவாக மேலும் பல வருடங்கள் ஆகலாம் என்பதால் 10 வருடங்களுக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக செயல்படும் என்று அறிவித்துள்ளார்கள்.காங்கிரஸ் கட்சியின் இந்த வியூகம் வருகின்ற தேர்தலில் காங்கிரசுக்கு பயன் தருமா ? காங்கிரஸ் குழப்பியுள்ள இந்த குட்டையில் யார் அதிக மீன் பிடிக்கப் போகிறார்கள் என்பது ஒரு சில மாதங்களில் தெரிந்துவிடும்.

பெட்டிச்செய்தி

தெலுங்கானா உருவான கதை:

 • புதிதாக உருவாக்கப்படவுள்ள தெலுங்கானா மாநிலம், இந்தியா சுதந்திரம் பெற்ற போது, ஐதராபாத் சமஸ்தானத்தில் இடம்பெற்றிருந்தது.
 • 1948 செப்., 17 ல், இந்தியாவுடன் ஐதராபாத் சமஸ்தானம் இணைக்கப்பட்டது. இதன் முதல்வராக எம்.கே.வெல்லோடி பதவியேற்றார்.
 • 1952 ல் நடந்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனநாயக முறைப்படி ராமகிருஷ்ண ராவ் முதல்வரானார்.
 • 1953 ல், கர்னூலை தலைநகராக கொண்டு, ஆந்திரா உருவாக்கப்பட்டது.
 • ஐதராபாத் மாநிலத்தை, ஆந்திராவுடன் இணைக்க, அப்போதைய மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு ஐதராபாத்தில் இருந்த தெலுங்கானா பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
 • 1956 பிப்., 20: எதிர்ப்பை மீறி, ஆந்திராவுடன், தெலுங்கானாவை உள்ளடக்கிய ஐதராபாத் மாநிலம் இணைக்கப்பட்டது.
 • மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, தெலுங்கு பேசும் மக்கள்தொகை வாரியாக, சென்னை மாகாணத்தில் இருந்து, சில பகுதிகள், ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. இறுதியாக, 1956 நவ., 1 ல், ஒன்றுபட்ட ஆந்திரா உருவாக்கப்பட்டது. தலைநகராக ஐதராபாத் உருவாக்கப்பட்டது.
 • 1969ல் தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா பிரஜ்ஜா சமிதி என்ற அமைப்பின் மூலம் போராட்டம் தீவிரமானது.
 • 1972 : தெலுங்கானாவுக்கு எதிராக, ராயலசீமா-கடலோர ஆந்திராவை உள்ளடக்கிய பகுதியில், “ஜெய் ஆந்திரா’ என்ற கோஷம் எழுப்பப்பட்டது.
 • 1985 மற்றும் ராமாராவ் ஆட்சிக்காலத்தில், தெலுங்குதேச மக்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
 • 1999 வரை, தெலுங்கானா மாநில பிரிவினை கோரப்பட வில்லை.
 • 1999 ல், மாநிலத்தில் தொடர்ந்து சந்தித்த சட்டபை தேர்தல் தோல்விகளால் காங்., கட்சி, தெலுங்கானா கோரிக்கையை எழுப்பியது.
 • 2001: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்குதேச கட்சியில் இருந்து விலகிய சந்திரசேகர ராவ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
 • 2009 நவ., 29: சந்திரசேகர ராவ், உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இதையடுத்து டிச., 9 ல், மத்திய அரசு,
 • தெலுங்கானா அமைக்க உறுதி அளித்தது. இருப்பினும், டிச., 23 ல், இதனை கிடப்பில் போட்டது.
 • 2010 பிப்., 3: தெலுங்கானா அமைப்பது குறித்து, மக்களின் கருத்துகளை அறிய, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா
 • தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது. இது டிச., 30ல் அறிக்கையை சமர்பித்தது.
 • 2011 -12: எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.ஏ.,க்கள் தெலுங்கானாவை வலியுறுத்தி, பதவிகளை ராஜினாமா செய்தனர்.
 • 2012 டிச., 28: மத்திய அரசு, சர்வ கட்சி கூட்டத்தை நடத்தியது. முடிவு எட்டப்படவில்லை.
 • 2013 ஜூலை 30: தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

– தினகரன் போஸ்

Categories: August 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: