ஓயாத அலைகள் – பாகம் 4

Wednesday, November 6th, 2013 @ 10:01PM

கச்ச(ட்சி)த் தீவு அரசியல் – 3

கடந்த மாதம் 1974ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அனைத்து சட்டப்பிரிவு கூறுகளையும் பார்த்தோம்.

karu1

இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா கையெழுத்திடும் முன், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டிருந்ததாகவும்,  ‘கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தம், அதனை இலங்கைக்கு கொடுக்க கூடாது’ என அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சந்தித்தும், கடிதம் எழுதியும் வலியுறுத்தியதாக சில செய்திகள் சொல்கிறது.

கருணாநிதி கடிதம்

“தமிழ்நாட்டுக்கே உரியது கச்சத்தீவு” ஆதாரங்களுடன் இந்திராவுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்

“கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்” என்று ஆதாரங்களுடன் பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதினார். கச்சத்தீவு பற்றி இந்திரா காந்தியும், திருமதி பண்டாரநாயகாவும் பேச்சு நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்திலேயே, கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே உரியது என்பதை வலியுறுத்தி, இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார்.

“கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதை தொடர்ந்து எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1776 அன்று ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762 அன்று ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை. 1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் (“மேப்”) கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென் இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கச்சத்தீவு செல்லும் பாதையிலும் கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.

இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும் பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல” என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.

இந்தக் கடிதத்துக்கு பதில் ஏதும் வரவில்லை. கச்சத்தீவு தானம் குறித்து, இந்திரா காந்தியும் திருமதி பண்டாரநாயகவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

ஸ்வரன் சிங் அறிக்கை

ஒப்பந்தம் கையெழுத்தான அதே தினம், அப்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஸ்வரன் சிங் பாராளுமன்றத்தில் வாசித்த அறிக்கையில், “சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளாக இந்த மன்றத்தில் கச்சத்தீவு குறித்த கலந்துரையாடல்களும், கேள்விகளும் தொடர்ந்து இருந்து வருகிறது. நீண்ட காலமாக இருந்து வரும் இப்பிரச்சனைக்கு மத்திய அரசாங்கம் பற்றோடும், அதீத அக்கறையோடும் கூடிய விரைவில் நட்பிணக்கமான ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்கு ஏற்றார் போல், இரு நாட்டு பிரதம மந்திரிகளுக்கும் இடையில் ஜூன் 28 ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற செய்தியை பகிர மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

அதே அறிக்கையில் “கச்சத்தீவு பாக் ஜலசந்தியில் இருக்கும் 3.75 சதுர மைல் பரப்பளவுள்ள தீவு. இலங்கையின் வெகு அருகாமையில் இருக்கும் நிலப்பரப்பிலிருந்து 10.5 மைல் தூரத்திலும், இந்தியாவின் வெகு அருகாமையில் இருக்கும் இந்திய கடற்கரையில் இருந்து 12 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. கச்சத்தீவிற்காக இந்தியா மற்றும் இலங்கையின் வாதங்கள் இந்திய இலங்கைக்கு பாக் ஜலசந்தியில் இருக்கும் எல்லைகோட்டை உறுதிப்படுத்துதலுடன் மிகுந்த தொடர்புடையவை. இலங்கையுடன் நமக்கு ஏற்பட்டு வரும் நட்புணர்வின் பரந்த சூழலோடு இரு நாடுகளுக்கும் இருக்கும் கோரிக்கைகள், வரலாற்று ஆவணங்கள், சட்ட வழக்கம் மற்றும் முன்னுதாரணங்கள் கொண்டு பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள வரலாற்று நீர்ப்பரப்பு எல்லைக்கோடு பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.” மேலும் கச்சத்தீவில் எப்பொழுதும் யாரும் வசித்ததில்லை எனவும் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ அங்கு நிரந்தர இருப்பிடம் இருந்ததில்லை எனவும் கூறினார்.

“ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த நீண்ட நெடிய காலத்தில், கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமா இல்லை இலங்கைக்கு சொந்தமா என்ற கலங்துரையாடல்கள், கோரிக்கைகள், மறுப்புகள் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. கச்சத்தீவு குறித்து வரலாற்று மற்றும் இதர ஆவணங்களின் மீதும்; தமிழகம், பம்பாய் (இப்பொழுதைய மும்பாய்), கோவா ஆகிய இந்திய பகுதிகளிலும், இங்கிலாந்து மற்றும் டட்ச் பகுதிகளிலும் இருக்கும் ஆவணங்களை தொகுத்து வைக்கும் அனைத்து அலுவலகங்களிலுமிருந்து இருக்கும் அனைத்து சான்றுகளும் மீதும், முழுமையான ஆராய்ச்சி நம் வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்டது.”

“வரலாற்று ஆவணங்களின் மற்றும் இதர சான்றுகள் மீது உணர்ச்சிக்கு இடங்கொடாத, நடுநிலையான ஆராய்ச்சி செய்ததின் அடிப்படையிலும், நம்முடைய நீதி நெறிகள், கொள்கைகள், பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்கும் பண்பு ஆகியவற்றை மனதில் கொண்டு பார்க்கும்பொழுது, பாக் ஜலசந்தியில் வகுக்கப்பட்டுள்ள எல்லைக்கோட்டிற்கான ஒப்பந்தம் பாரபட்சமற்ற, நியாயமான, நடுநிலையான என்று நான உறுதியான நம்புகிறேன்.” என்று அறிக்கை வாசித்தார். மேலும், “இந்த ஒப்பந்தம் இந்தியா இலங்கைக்கு இடையேயான நட்பை இது மேலும் வலுவாக்கும்” என்றார்.

‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என மேன்மேலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

1974 ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், இந்திரா காந்தி அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்திய அமைச்சரின் இங்க அறிக்கைக்கு பிறகும் கச்சத்தீவு பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது, அல்லது அவ்வாறு நம்பப்பட்டது.

–    அலைகள் மோதும்.

– ஜெகதீஸ்வரன்

Categories: Article, August 2013, Whistle
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: