ஓயாத அலைகள் – பாகம் 5

Sunday, November 10th, 2013 @ 6:33PM

கச்ச(ட்சி)த் தீவு அரசியல் – 4

சென்ற மாதம், 1974 ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்திரா காந்தி அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்திய ஸ்வரன் சிங்கின் அறிக்கைக்கு குறித்து விரிவாக பார்த்தோம். பிறகு கச்சத்தீவு பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததாக நம்பப்பட்டது.

பாராளுமன்ற விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திரு.கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்வரன் சிங், “கச்சத்தீவை சுற்றிய பகுதிகளிலும் மீனவர்கள் தாராளமாக மீன் பிடிக்கலாம் என்றும் தங்களுடைய வலையை கச்சத்தீவில் உலர்த்தலாம்” என்றார். மேலும் “கச்சத்தீவை உரிமை கோரும் இலங்கையின் இறையாண்மையை நாம் ஏற்றுக்கொண்டாலும், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளும், யாத்ரீகர்களின் புனிதப் பயணமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது” என்றார்.

1974 ஒப்பந்தத்தின் 5வது சட்டக்கூற்றை குறித்து இலங்கை வெளியுறவு அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களுக்கு வலையை உலர்த்தும் உரிமையும், தேவாலயத்திற்கு வந்து போகும் உரிமையும் மட்டுமே உள்ளது என்றும், அவர்களுக்கு மீன் பிடி உரிமை இல்லை எனவும் தெரிவித்தனர்.

MK_Indira1_1474652_1474652g

 

அனைத்து கட்சி கூட்டம்

கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தானம் செய்தது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் கருணாநிதி கூட்டினார்.

இந்த கூட்டம் 1974 ஜுன் 29-ந்தேதி நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-

1. பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்)
2. ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்கநாயகம் (அ.தி.மு.க.)
5. வெங்கடசாமி (சுதந்திரா)
6. ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)

மேல்-சபை

9. ம.பொ.சிவஞானம் (தமிழரசு)
10. ஜி.சாமிநாதன் (சுதந்திரா)
11. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
12. ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்)
13. சக்தி மோகன் (பா.பிளாக்)
14. ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது:
“இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.”
மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது:- “கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார். இ.காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்தத் தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது.” இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பத்திரிக்கையாளர் கேள்வி – பதில் :

நிருபர் கேள்வி:- கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்றால் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுபற்றி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரவேண்டும் என்று ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் கருத்து தெரிவித்து இருக்கிறாரே?

கருணாநிதி பதில்:- கோர்ட்டுக்கு போவது பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. சட்டசபையை கூட்டுவது பற்றி யோசிக்கலாம்.

கேள்வி:- மத்திய அரசு வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் உங்களைச் சந்தித்தபோதே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவதாக சொன்னாரா?

கருணாநிதி:- அப்போது அகதிகள் பிரச்சினை பற்றிதான் பேச வந்திருந்தார். இது முக்கியமாகப் பேசப்படவில்லை. அப்போதே தமிழர்கள் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் கூறி இருக்கிறேன்.

கேள்வி:- ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதே. இனிமேல் எதுவும் திருத்தம் செய்ய முடியுமா?

கருணாநிதி:- மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. செய்யலாம். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்திலோ அல்லது முந்தினநாளோ, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கலாம். இந்த மாநில அரசைக் கலந்து கொள்ளாவிட்டாலும், மிக முக்கியமான பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களையாவது அழைத்து பிரதம மந்திரி சர்வகட்சி கூட்டத்தை கூட்டி அவர்களது கருத்துக்களை அறிந்து இருக்கலாம். அப்படிச் செய்யாதது வருந்தத்தக்கது.

கேள்வி:- கச்சத்தீவு பிரச்சினைக்காக தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்களே?

கருணாநிதி:- கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்ட இந்திராவை ராஜினாமா செய்யும்படி சொல்ல தைரியம் இல்லாதவர்கள், எங்களைப் பார்த்து ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்.”

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

 

அடுத்து வந்தது 1976 ஒப்பந்தம்.

அவை சொன்னது என்ன? கச்சத்தீவு தாரைவார்க்கப்படதிற்கான காரணம் அல்லது காரணங்கள் என்ன?

–    அலைகள் மோதும்.

– ஜெகதீஸ்வரன்

Categories: Article, September 2013, Whistle
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: