காமன்வெல்த் மாநாடு – மத்திய அரசு முடிவு சரியா

Friday, December 13th, 2013 @ 9:30AM

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை அனைத்து கட்சியினரும்,பல்வேறு தமிழ் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும் இந்தியா சார்பில் எவரும்  இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என  சட்டசபையில் இரண்டு முறை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.இவை எதையும் பொருட்படுத்தாமல் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷி கலந்து கொண்டார். இது இன்று தமிழ் நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு கொடுக்க வில்லை என அனைத்து தரப்பினரும் கருதினாலும் , தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துதான் நமது பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை சற்று ஆராய்வோம்.

காமன்வெல்த் நாடுகள் 

இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை, பங்களாதேஸ்,லண்டன், ஆஸ்திரேலியா,கனடா, சிங்கப்பூர், உள்ளிட்ட 53 நாடுகளின் கூட்டமைப்புதான் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகிறது.இங்கிலாந்து அரசின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைபெற்ற மேற்படி நாடுகள் தங்களுக்குள் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை கூடிப் பேசி விவாதித்து தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் செயல்பட முடிவெடுத்து 1971 ஆம் ஆண்டு,  முதல் முதலாக சிங்கப்பூரில் கூடினர்.அன்று முதல்  இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.மனித உரிமைகள் உறுதியாக காப்பாற்றப்படவேண்டும் என்பது தான் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான தீர்மானம் ஆகும்.மனித உரிமைகள் மீறப்படும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.அதன்படி பாகிஸ்தான்,நைகீரியா,பிஜீ ,ஜிம்பாவே போன்ற நாடுகள் எல்லாம் மனித உரிமை மீறலுக்காக இந்த  கூட்டமைப்பில் இருந்து தற்காலிக நீக்கம் செயப்பட்டுள்ளன.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு 

2009இல் இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகளுடனான போரில் , இலங்கை அரசின் இரசாயன குண்டுகள் வீச்சினால் , பள்ளிக்கூடங்களிலும்,கோவில்களிலும் தஞ்சமடைந்திருந்த அப்பாவி தமிழ்  மக்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் கை கால்கள் கட்டப்பட்டு கற்பழிக்கப்பட்டு, குத்திக் கொல்லப்பட்டுள்ளார்கள். சிறுவர்கள் குழந்தைகள் என்று எவரையும் விட்டுவைக்காமல் போர் விதிமுறைகளை மீறி சுட்டுக் கொன்று குவித்துள்ளார்கள். இத்தகைய போர் குற்றங்கள் புரிந்த இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவதே தவறு எனவும் , இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அமைதி பிரச்சாரகர்,ஆர்ச் பிஷப்  டெச்மாண்டுட்டு , உலகத்தலைவர்கள் இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர்  கேமரூன்  , காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்த போவதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் முடிவு சரியா?

இத்தகைய சூழ்நிலையில் இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது முறையா என்பதுதான் இன்றைய தலையாய கேள்வி. இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் போர் முடிந்துவிட்ட நிலையில் , இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கும் ,அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைப்பதற்கும், இந்திய மீனவர்கள் கடலில் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கும், இந்திய அரசு சார்பில் இலங்கையுடன் பேசுவதற்கு இந்த மாநாடு ஒரு வாய்ப்பாகும் எனவும் , அண்டை நாடுகளுடன் பகைமையின்றி நட்புணர்வுடன் நடந்துகொள்ள உதவும் எனவும் கூறுகிறார். மேலும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர் முதல்வராக உள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு புணரமைப்பு உதவிகள் செய்யவும்,50000 வீடுகள் ,சாலைகள் சீரமைப்பு, நகர கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற காரியங்கள் இந்திய அரசு சார்பில் செய்ய வேண்டியது இருப்பதால் ஒட்டு மொத்தமாக இந்த மாநாட்டை புறக்கணிக்க முடியவில்லை என்பது இவரது கருத்தாக உள்ளது. மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு சட்டப்படியும், இந்திய – இலங்கை  உடன்பாட்டின் படியும் ,கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் முறையாக கிடைக்கப்பெற செய்வது  இந்தியாவின்  கடமையாகும். எனவே இலங்கையில் நடைபெறும் இந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது அவசியமான ஒன்றாகும் என கூறுகிறார்.

தமிழகத்தின் நிலை

மத்திய அரசின் இந்த முடிவு என்னவோ தேசிய கண்ணோட்டத்தில் சரி என பட்டாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை இங்குள்ள கட்சிகள் எல்லாம் மத்திய அரசு தமிழகத்திற்கு பெரிய துரோகம் இழைத்துவிட்டதாக பிரச்சாரம் செய்துவருகின்றன. அதுவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது வேடிக்கையாக உள்ளது. மனித உரிமை மீறல் கூடாது என்ற காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பே ,போர்குற்றம் புரிந்த  இலங்கையில் இந்த மாநாடு  நடைபெற ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இலங்கை அதிபரே இந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் தேர்ந்தேடுக்கப்படவுள்ளதாகவும் வரும் செய்திகள் மேலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இலங்கை அதிபர் போர்குற்றவாளி என்று நிரூபிக்கப்படவேண்டும். அப்போதுதான் நமது போராட்டங்களுக்கு எல்லாம் முடிவு கிடைக்கும்.அதற்கு உறுதியான நிலையான அரசு மத்தியில் வேண்டும்.அது அமையும்வரை , மனித உரிமை மீறல்களை தட்டிகேட்க எவருக்கும் தைரியம் வராது.

– தினகரன் போஸ்

Categories: Article, November 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: