எடுத்தோம் கவிழ்த்தோம்! கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு தடையில்லை உயர்நீதிமன்றம்

Tuesday, December 31st, 2013 @ 5:53PM

நீதிமன்றங்களால் குட்டு வாங்குவது ஒன்றும் இரண்டரை வருட தற்போதைய தமிழக அரசுக்கு புதிதல்ல. சமீபத்திய குட்டு கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் தொடர்பானது என்பதைவிட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மக்கள் நலனையும் வைத்து விளையாடிய விளையாட்டிற்கு கிடைத்த சவுக்கடி என்றுதான் சொல்ல வேண்டும். கெயில் திட்டம் சம்பந்தமாக நேரில் பாதிப்படைந்த மக்களை நேரில் சந்தித்து, கடந்த மார்ச் மாத விசிலில் அது குறித்தான தகவல்களை தெரிவித்திருந்தோம். கொச்சின் முதல் மங்களூரு வரையில் தமிழகம் வழியாக செல்லும் இந்த குழாய் திட்டத்தில் தமிழக அரசு எவ்வளவு மெத்தனமாக அக்கறையின்றி இருந்து வருகிறது என்று அப்போதே கூறியிருந்தோம். கடந்த நவம்பர் 25ம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் அதையே தான் கூறுகிறது. சென்ற 2012ம் ஆண்டு ஜுலை மாதம் இதே திட்டத்திற்கு மக்களிடையே இருந்த எதிர்ப்பைக் கூறி கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மீண்டுமொரு நந்திகிராம் உருவாக வேண் டாமென இதே உயர்நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தி தமிழக அரசை உடனே இது குறித்து செயல்பட ஆலோசனை கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டிலேயே இத்திட்டம் குறித்தான அனைத்து கோப்புகளும் ஒப்புதல்களும் தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கெயில் நிறுவனம் செயலில் இறங்கியது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத் திற்கு எந்தவித மதிப்பும் அளிக்காமல் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த அரசு திடீரென ஞானோதயம் பிறந்ததைப் போல இத்திட்டம் குறித்து விவசாயிகள் குறித்தும் பேசியது. பின்பு எந்த வித சரியான அணுகுமுறையும் இல்லாமல் தனது அமைச்சர்களை பந்தாடுவதைப் போல கெயில் எரிவாயுக் குழாய்த் திட்டத்தையும் பந்தாடியது. கெயில் திட்டத்திற்குத் தடை, தோண்டிய குழிகளை மூட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என அடுக்கிக்கொண்டே போனது. இங்கே என்ன மன்னராட்சியா நடக்கிறது? உண்மையில் நீதிமன்ற தீர்ப்பில் அரசின் இந்த எதேச்சை நடவடிக்கை குறித்து எந்தவித வார்த்தையும் இல்லாமல் போனது வருத்தம்தான்.

Gail

இந்த எரிவாயுக்குழாய் திட்டம் தமிழகம் மட்டு மில்லை, கேரளாவையும், கர்நாடகாவையும் தான் உள்ளடக்கியது. ஏன் அங்கு மட்டும் நீதிமன்றம் தலை யிடவில்லை? ஏன் அங்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்த மக்கள் போராட்டம் காணாமல் போனது? அரசு மக்களுக்காக இயங்க வேண்டும் எனும் மனப் பான்மை இருந்ததால்தான்.

கேரளாவில் இத்திட்டம் குறித்தான பேச்சு எழுந்ததுமே முதல் வேலையாக அம்மாநில முதல்வர், ஒப்பு தல் அளிக்க வேண்டுமானால் கேரளத்திற்கு கூடுதல் எரிவாயு பகிர்வு வேண்டுமென கோரிக்கை விடுத் தார். பல்வேறு தரப்பு எதிர்ப்பையும் கேட்டறிந்து, கேரள அரசு சார்பில் கூடுதல் இழப்பீடு, குழாய் வழித் தடத்தை மாற்றியமைப்பு, சில இடங்களில் நெடுஞ் சாலை வழியாக குழாய் வழித்தடம் என முழு அளவில் அனைத்து மக்களையும் இத்திட்டத்திற்கு சம்மதிக்க
வைத்தார். கர்நாடகாவிலும் இது போல மக்களுக்கு இத்திட்டத்தின் நன்மைகளை விளக்கி இழப்பீடுகளை உயர்த்தி பல்வேறு வழிகளில் மக்களை சம்மதிக்க வைத்து குழாய்கள் பதிக்கும் பணி வெற்றிகரமாக
முழு வேகத்தில் நடந்து வருகிறது.

கோவை உட்பட 7 மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து மாவட்ட ஆட்சியர் முகாம்களிலும் விவ சாயிகள் குறைதீர் முகாம்களிலும் 4 மாதங்களாக இது குறித்தான மனுக்கள் அளிக்கப்படும். மருந்துக்குக் கூட பதில் கொடுக்கப்படவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம், கெயில் அலுவலக முற்றுகை என கொண்டு போன பின்னர்தான் வெறும் ஓட்டு அரசியலுக்காக இத்திட்டத்திற்கு தடை விதிப்ப தாகவே தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்னரும், அதற்கு பின்னரும் கெயில் அதிகாரிகள் தமிழக அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் பலன் எதுவு மில்லாமல் போனது இன்னுமொரு பின்னடைவு. வேறு வழியின்றிதான், அந்நிறுவனமும் நீதிமன்றம் வரை சென்றது. ரூபாய் 2000 கோடி மதிப்பிலான திட்டத் தில் ரூபாய் 680 கோடி வரை இதுவரை முதலீடு
செய்யப்பட்டாகிவிட்டது என்பதுதான் அவ்வழக்கில் கெயில் தரப்பின் முக்கிய வாதம். முழுதாய் கட்டப்பட்ட அண்ணா நூலகமும், ஏறக்குறைய கட்டி முடிக்கப்பட்ட புதிய தலைமை செயலகத்தையே மூடியவர்கள்
ஆயிற்றே நம் ஆட்சியாளர்கள்.

இது போக மற்றொரு குழுவும் ஓட்டு அரசியலுக்கு உள்ளே நுழைந்திருக்கிறது இன்னுமொரு தலைவலி. வழக்கமான புராணமாம் ‘இது தமிழருக்கு எதிரான திட்டமென’ இந்த குழாய் திட்டத்தை குழாயடி சண் டையாக்க முயல்கிறது. கொச்சினில் இருந்து மங்களூருக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு கேரளாவில் சில நிறுவனங்களுக்கும், கர்நாடகாவில் சில நிறுவ னங்களுக்கும் போக பெங்களூர் நகரவாசிகளுக்கும், தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கும் வீட்டுக்கு வீடு
நேரடியாக எரிவாயு எடுத்துச் செல்வதுதான் இந்த திட்டம் என அறியாமல் பேசுகின்றனர் போலும். இன்னும் சொல்லப் போனால் இக்குழாய்கள் மூலம் செல்ல விருக்கும் மொத்த 9 எம்எம்எஸ்சிடி (ஒரு நாளிற்கு 9 மில்லியன் கன மீட்டர்) அளவிலான எரிவாயுவில் 60% அளவிற்கு தமிழகத்தின் பயன்பாட்டிற்கு வழங்கப்படவிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் இத்திட்டம் தமிழருக்கு எதிரான திட்டம் என அறிவித்ததை விவசாயிகள் அங்கேயே மறுத்து பேசி தங்களுக்கு பாரதமும் முக்கியம், தங்கள் பூமியும் முக்கியம் என தெளிவாக பேசியதை அவர்களே இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம். இத்திட்டம் தென்னிந்தியாவில் முதன்முதலாக கொண்டு வரப்படும் நிலத்தடி குழாய்த் திட்டம், பஞ்சாபிலோ, உத்திரபிரதேசத்திலோ, மகா ராஷ்டிராவிலோ எவ்வாறு செயல்படுத்தப்பட்டதோ அதே போல் இங்கேயும் செயல்படுத்தப்படவுள்ளது என்பதை அவர்கள் நினைவு கொள்வதே நலம்.

அப்படியென்றால் விவசாயிகளின் கோரிக்கை களுக்கான பதில்தான் என்ன…?ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் ஸ்டீல் தொழிற்சாலை நிறுவ அந்தப் பகுதியில் அப்போதைய ஆட்சியராக இருந்த டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எந்த மாதிரியான முயற்சிகள் மேற்கொண்டாரோ அதேதான் வழி.முதலில் இழப்பீடு மிகக் குறைவு, விவசாயிகளுக்கு எதிரான பெட்ரோலிய குழாய்கள் சட்டத்திலுள்ள கடுமைகள், நெடுஞ்சாலைகள் மூலம் திருப்பிவிடும் சாத்தியக்கூறுகள் பற்றியெல்லாம் தெளிவாக விவசாயிகள், கெயில் அதிகாரிகள், தமிழக அரசு என மும்முனை பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தெளிவான முடிவெடுத்த பின் செயல்படுவதே அறிவார்ந்த செயல்பாடாக இருக்கும். எம்முறையில் இம்மக்களை முழுத் திருப்தியுடன் ஒத்துழைக்க
வைக்க முடியுமோ அவ்வழியில் தமிழக அரசு முயற் சிக்க வேண்டும். ஆனால் மீண்டும் எடுத்தோம் வழக்கு, வாய்தா, தடை என உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. மீண்டும் தங்களுக்கு ஆட்சி நிர்வாகம் பற்றி எந்தவித புரிதலும் கிடையாது என நிரூபித்து வருகிறது. பாதிப்பு யாருக்கானது? ஆண்டுக்கு ரூபாய் 400 கோடி வரை வருமானம், வீட்டுக்கு வீடு எரிவாயு இணைப்பு, எரிவாயு மின் நிலையங்கள் எனும் எந்தவித தொலைதூர பார்வையும் இல்லாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்பட்டு வருகிறது. பார்ப்போம்… எப்போது எங்கள் நல்லரசு கனவு நனவாகும் என்று.

– எம்.எஸ்.ஆனந்தம்

 

Categories: Article, December 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: