நீதிபதிகள் நியமன ஆணையம் நீதித்துறையின் நம்பகத்தன்மை மற்றும் நாணயத்தை பாதுகாக்கும் வழி

Sunday, December 29th, 2013 @ 7:28PM

நமது ஜனநாயகத்தின் சமநிலையை உறுதி செய்வதில் நீதித்துறை மிக முக்கிய பங்காற்றுகின்றது. மக்களுடைய மனதில் இன்று அதிகமாக மதிக்கப்படும் துறையும் இதுவே. தாமதமான நீதி, மேல் முறையீட்டில் சரி செய்யப்படும் தீர்ப்புகள், நிலுவை யிலுள்ள வழக்குகள் போன்று மற்ற தூண்களை (நிர்வாகம், பிரதிநிதிகள்) போல தனது பங்கிற்கு குறைகள் இருந்தாலும், ஒரு சராசரி இந்தியனின் மனதில், மிகவும் உயரிய இடத்தில் இத்துறை உள்ளது. இது மிகவும் முக்கியமாகும். மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளான இட ஒதுக்கீடு, பாபர் மசூதி போன்ற உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனைகளில், அரசியல் தீர்வு காண்பது இன்று மிகவும் கடினம். இத்தகைய பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருப்பது நீதித்துறையே. பாபர் மசூதி தீர்ப்பு வருவதற்கு முன்பே அனைத்து தரப்பும், தீர்ப்பு என்னவாயினும் அதற்கு கட்டுப்படுவோம் என்று அறிவித்தன. நீதித்துறையின் இந்த மதிப்பை பாதுகாப்பது, இந்திய ஜனநாயகம் சீர்குலையாமல் இருப்பதற்கு மிகவும் முக்கியமானது.

chennai-high-court
நமது அரசியல் சாசனம், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்கின்றது. மற்ற நாடுகளுடன் ஒப் பிடும் பொழுது அதிக அதிகாரம் கொண்டது இந்திய நீதித்துறை. நமது அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து நியமிப்பார் என்று சொல்கின்றது. ஆனால் நமது அரசியல் சாசனத்தின் சமநிலையை பாதிக்கக்கூடிய மாற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இது 1993ம் ஆண்டு ஆரம்பித்தாலும், அதற்கு முன் 1974ல் உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தலைமை நீதிபதியின் ஒப்புதலோடு மட்டுமே நடத்தல் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின்னர் 1981ல் இந்த நிலையில் இருந்து பின்வாங்கி, ஜனாதிபதி தலைமை நீதிபதியின் பரிந்துரையை நிராகரிக்கலாம் என்றது.

ஆனால் 1993 முதல் நீதிபதிகள் நியமனத்தை படிப்படியாக தனக்கு கீழ் கொண்டு வந்தது. 1993ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையே இறுதியானது என்றும், ஜனாதிபதியின் முடிவு இதற்கு கட்டுப்பட்டது என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்த ஆலோசனைக் குழுவில் தலைமை நீதிபதியுடன், இரண்டு மூத்த நீதிபதிகள் இருப்பார்கள் என்று கூறியது.மேலும் 1998ல் இந்த தீர்ப்பை மீண்டும் நிலை நாட்டியது. இந்த தீர்ப்பில் குழுவில் இரண்டிற்கு பதிலாக நான்கு மூத்த நீதிபதிகள் என்றும் தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்களை தானே நியமித்து கொள்வது நமது அரசியல் சாசனத்திற்கு முரணானது. உலகில் எந்த ஜனநாயகத்திலும் இது போன்று நடப்பதில்லை. இது நீதித்துறையின் ஆதாரமற்ற நெருக்கடியே. இதனால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

நீதித்துறை இப்பொழுது, மக்கள் மாற்றங்கள் விரும்பினாலும் கூட அது முடியாதபடி தன்னை தனிமைப்படுத்தி கொண்டுவிட்டது என்றே சொல்ல
வேண்டும். நீதிபதிகளின் நியமனங்கள் வெளிப்படை தன்மையில்லாமல் போய்விட்டன.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பருச்சா ஐந்தில் ஒரு நீதிபதி ஊழல்வாதி என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் திறன்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இதுவரை உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு கூட எழுதாத நீதிபதி, உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்ற நிகழ்வும் நடந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணிநீக்கம் செளிணியும் தற்போதைய முறை வேலை செய்யவில்லை. இதுவரை ஒரு நீதிபதி கூட அவ்வாறு பாராளுமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை.

சமீபத்தில் தமிழ்நாடு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்காக சிபாரிசு செய்யப்பட்ட பொழுது,சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம், பிற
சமூக ஆர்வலர்கள் தங்களது ஆட்சேபங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பதிவு செய்தனர். தமிழக அரசும் அதிக பெயர்களின் மீது தனது நிறைவின்மையை தெரிவித்தது. உளவு பிரிவலிருந்தும் திருப்தியான அறிக்கை கொடுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்ற காலி பணியிடங்களை நிரப்புவதிலும், நீதித்துறை சரியாக செயல்படவில்லை. முப்பது சதவிகித பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

லோக் சத்தாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அப்பொழுது இருந்த மிக சிறந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான நீதிபதி வர்மா, நீதிபதி கிருஷ்ணா
அய்யர், நீதிபதி வெங்கடாச்சலையா ஒன்றாக கூடி ஆலோசித்து தேசிய நீதி ஆணையம் மற்றும் அதன் அடிப்படைகளையும் பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையிலேயே நீதிபதிகள் நியமன ஆணையம் அமைந்துள்ளது.

இந்த சட்டம் தற்பொழுது பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேறும் என்று நம்புவோம்.

குறிப்பு – நவம்பர் 13 அன்று இச்சட்டம் சம்பந்தமாக லோக் சத்தா சார்பில் ஒன்பது பேர் கொண்டகுழு டாக்டர் ஜே.பி. தலைமையில் பாராளுமன்ற
நிலைக்குழுவிடம் தனது கருத்துக்களை பதிவு செய்தது.

மகேஷ்குமார்

Categories: Article, December 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: