தகவல் உரிமை சட்ட போராளிகள் மீது பொய் வழக்கு மற்றும் கைது – லோக் சத்தா கட்சி கண்டனம்

Thursday, December 19th, 2013 @ 6:42PM

லோக் சத்தா கட்சியின் கோவை மாவட்ட செய்தித்தொடர்பாளரும் தகவல் உரிமை சட்ட போராளியுமான திரு. மனோஜ் மற்றும் லோக் சத்தா கட்சியின் முக்கிய தலைவர் திரு. தண்டபாணி அவர்களும் தாக்கப்பட்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை லோக் சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மனோஜ்

மனோஜ்

திரு. மனோஜ் அவர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்துள்ளார், மற்றும் பல சமூகப் பிரச்சனைகளை தீர்த்துள்ளார். முன்னரே பல ஊழல்வாத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பகையை சம்பாதித்த அவர், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் ஊழலுக்கு எதிரான தன் போராட்டத்தில் உறுதியாக உள்ளவர்.

திரு. தண்டபாணி அவர்கள் பல சமூக பிரச்சனைகளை தீர்த்து வைப்பதன் மூலம் ‘நிழல் எம்.எல்.ஏ’ என்ற அடைமொழியை பெறும் அளவுக்கு பிரபலமாக உள்ளவர்.

திரு. மனோஜ் மற்றும் திரு. தண்டபாணி ஆகிய இருவரும் கோயம்பத்தூர் மாநகராட்சி குறை கூடங்களில் கலந்து கொண்டு மாநகராட்சியில் உள்ள ஊழல்களை பற்றி கேள்விகள் கேட்டு அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பொது சுகாதாராம் பற்றிய கேள்விகளை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோவை மாநகர மேயர் அவர்களின் உதவியாளரும் பிற கவுன்சிலர்களும் திரு. மனோஜ் மற்றும் திரு. தண்டபாணி ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இது மாநகர மேயர் மற்றும் மாநகராட்சி இணை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நடந்தும் ஒருவரும் இவர்களை மீட்க வரவில்லை. திரு. மனோஜ் மற்றும் திரு. தண்டபாணி ஆகியோரை காவல்துறை கைது செய்து பொய் வழக்கும் போட்டுள்ளது.

கோவை மாநகர மேயர் அவர்களின் உதவியாளர் திரு. மனோஜ் மற்றும் திரு. தண்டபாணி ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக ஊடகங்களுக்கு தவறான செய்திகளை பரப்பியுள்ளார். அவர்களின் மீது ஊடகவியலாளர்களை போல ஆள்மாறாட்டம் செய்தது மற்றும் மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இவை இரண்டும் பொய் வழக்குகள் என தெளிவாக தெரிகிறது. குறைதீர்ப்பு கூட்டங்களில் பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், வரைமுறை ஏதும் கிடையாது. அப்படி இருக்க, இவர்கள் ஊடகவியலாளர்களை போல ஆள்மாறாட்டம் செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அதே போல் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருக்கும் ஒரு கூட்டத்தில் மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பதும் நம்பும்படியாக இல்லை. இந்த செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கும் லோக் சத்தா சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பி, அவதூறு கட்டுரைகளை திரும்பப்பெறவும் கோரப்படும்.

நேர்மையான போராளிகள் மீது காவல்துறையை பொய் வழக்கு போடத்தூண்டி, அவர்களைப் பற்றி அவதூறு பரப்பிய கோவை மாநகர மேயர் அவர்களின் அலுவலகத்தை லோக் சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஊழலை வெளிக்கொனருவோரை பாதுகாக்க அரசு வலிமையான சட்டங்களை இயற்ற வேண்டும். திரு. மனோஜ் மற்றும் திரு. தண்டபாணி ஆகியோரை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக் சத்தா கட்சி கோருகிறது.

திரு. மனோஜ் மற்றும் திரு. தண்டபாணி ஆகியோருக்கு உரிய நீதி கிடைக்க ஊடகங்கள், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை லோக் சத்தா கட்சி கோருகிறது.

தொடர்புக்கு – திரு. சண்முகானந்தம் (+91 8220077838)

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: