மதுவிற்கு எதிராக போராடியவர் சென்னைக்குள் அனுமதிக்கப்படவில்லை – காவல்துறைக்கு கண்டனம்

Friday, December 27th, 2013 @ 10:27PM

தமிழகத்தில் ‘தீவிர மதுக்கட்டுப்பாடு’ மற்றும் காவல்துறை சீர்திருத்தம் கோரல்

Nandini with her father

நந்தினி தனது தந்தையுடன்

தமிழகத்தில் மதுவிலக்கு கோரி மதுரையை சேர்ந்த நந்தினி என்ற சட்டக்கல்லூரி மாணவி சென்னையில் உண்ணாவிரதமிருப்பதை தடுப்பதற்காக, அவர்களை சென்னையில் நுழைய விடாமல் தடுத்து அவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியுள்ளது தமிழக காவல்துறை. மேலும் இவர்கள் மதுவிற்கு எதிராக தமிழகத்தில் எந்த ஊரிலும் உண்ணாவிரதம் இருக்க முடியாமல் தடுக்கவும் முற்படுகிறது காவல்துறை.

காவல்துறையின் இந்தப்போக்கை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது. இந்திய குடிமகன் ஒருவர் இந்தியாவின் எந்த பகுதிக்கும் எந்த ஒரு தடையுமின்றி செல்லலாம் என்று அரசியல் சாசனத்தால் நமக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாக காவல்துறையின் இந்த நடவடிக்கை அமைகிறது.

எந்த ஒரு ஜனநாயகத்திலும் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஒரு சில சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் அறவழி போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு சேர்ந்தால் அது பெரிய அளவில் உருவெடுத்து, அது அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து, மக்களின் வேண்டுகோளை பரிசீலிக்கத் தூண்டும். அறவழி போராட்டங்களே நாட்டு மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக அமைந்து அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டியாக அமையும். இதுவே ஜனநாயகத்தின் தத்துவமும் அதன் சிறப்பம்சமுமாகும். ஆனால் இதுபோன்ற அறப்போராட்டங்களை ஆரம்பக்கட்டத்திலேயே நசுக்குவது ஜனநாயக விரோதமாகவும் சர்வாதிகாரத்திற்கு அடித்தளமிடுவதாக அமைவதாகவும் லோக் சத்தா கட்சி கருதுகிறது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னர் காவல்துறை என்ற அமைப்பு ஆட்சியாளர்களின் ஏவலாக செயல்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் மக்கள் நலனுக்காக பாடுபட்டு அவர்களை பாதுகாக்கும் ஓர் அமைப்பாய் செயல்படுமாறு நம் தேசத்தை உருவாக்கிய தலைவர்கள் காவல்துறையை அமைத்தார்கள். ஆனால் இது போன்று காவல்துறை அது உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து பிழன்று செல்வது, அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் காவல்துறையை அமைக்க காவல்துறை சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது.

மேலும் மக்களின் எண்ணங்களை அறிந்து அவர்களின் நல்வாழ்விற்காக ‘தீவிர மதுக்கட்டுப்பாடு’ போன்ற கொள்கைகளை அரசாங்கமே செயல்படுத்தியிருந்தால் இவரைப்போன்ற சமூக ஆர்வலர்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது. இது போன்ற போராட்டங்கள் அரசாங்கத்தின் தோல்வியாகவே பார்க்கப்படும். மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘தீவிர மதுக்கட்டுப்பாடு’ கொண்டு வரவேண்டுமென்று தமிழக அரசை லோக் சத்தா கட்சி கோருகிறது.

மேலும் இது போன்ற மக்கள் நலனுக்காக நடத்தப்படும் அமைதியான போராட்டங்களை அனுமதித்து பொதுமக்களை பாதுகாக்க காவல்துறை முன்வர வேண்டுமென்றும், காவல்துறை சிறப்பாக செயல்பட லோக் சத்தா கட்சி பரிந்துரைக்கும் காவல் துறை சீர்திருத்தங்களை தமிழக அரசு செயல்படுத்தவேண்டுமேன்றும் லோக் சத்தா கட்சி கோருகிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: