நோட்டா (NOTA)

Thursday, December 26th, 2013 @ 8:45AM

10.12.2001 அன்று தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் வாக்காளர்களின் எதிர்மறை வாக்குகளை தான் ஆதரிப்பதாக தெரிவித்தது. அதன் பிறகு பல விவாதங்கள் நடந்தன. பல கட்டங்கள் கடந்து சில வழக்குகளும் பதியப்பட்டு கடைசியாக 2013ம் ஆண்டு 27 செப்டம்பர் அன்று உச்சநீதி மன்றத்தால் தீர்ப்பளிக் கப்பட்டு, நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களிலும், 2 மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் நோட்டா (NOTA நோட்டா – None of the above) வாக்கு இயந்திரத்தில் தனக்கான கடைசி இடத்தை பிடித்துக் கொண்டது.

இதற்கு முன்னர் ‘49ஓ’ என்று இருந்தாலும், பெருவாரியானவர்கள் அறியப் படாததாக இருந்த இந்த எதிர்மறை வாக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிச்சயமாக இதுவரை யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாததால் வீட்டில் அடைந்து கிடந்தவர்களையும் வாக்குச்சாவடி நோக்கி வரவழைத்துள்ளது என்பது உண்மை.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும், தமிழ்நாடு உள்ளிட்ட 2 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் மொத்தம் பதிவான நோட்டா வாக்குகள் 16,88,908. அதிகப்படியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 3.15% (4,01,058) வாக்குகளும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 0.56% (3809) வாக்குகளும் பதிவாயின. தொகுதி வாரியாகப் பார்க்கும் பொழுது, அதிகப்படியாக சத்தீஸ்கரின் சித்ரகாட் தொகுதியில் 10,848 வாக்குகள் பதிவா யின. மிசோராமில் சில தொகுதிகளில் நோட்டாவிற்கு வாக்குகள் ஏதும் பதி வாகாமலும் இருந்தது.

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில், நோட்டாவிற்கு பதிவான வாக்குகள் 4431. ஏற்காட்டில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் சுயேச்சைகள் 9 பேரும் சேர்ந்து வாங்கிய மொத்த வாக்குகள் 2548 மட்டுமே. ‘எந்த வேட்பாளரும் சரியில்லை’ என்று நிராகரித்த இந்த லட்சக்கணக்கான மக்களில் எத்தனை பேர் களத்தில் இருந்த கட்சி சாராத வேட்பாளர்களை பற்றியும் தெரிந்து கொண்டு பின் நிராகரித்தார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. அதே சமயம் கட்சிகள், குறைந்தபட்ச மக்களிடம், தங்கள் நம்பிக் கையை இழப்பதும் தெளிவாகிறது. இந்த எதிர்மறை வாக்குகள் ஒரு முக்கியமான தேர்தல் சீர்திருத்தமாக இருந்தாலும் அதன் பயன் என்ன என்ற அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம் மக்களின் ஏற்புத் தன்மையை பொறுத்து, சட்டமியற்றுபவர்கள் சட்டத் திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி யுள்ளது. எப்பொழுது அனைத்து கட்சிகளும், நேர்மையான, நாணயமான, திறமையான வேட்பாளர்களை முன்னிறுத்துகின்றார்களோ, அப்போதுதான் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும். இதனை கட்சிகளுக்கு உணர்த்தும் துவக்கமாக நோட்டா அமைந்துள்ளது. முடிவு அரசியல் கட்சிகளின் கைகளில். அதுவரை நோட்டா தொடரும்…

Categories: Article, December 2013, Whistle, தலையங்கம்
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: