வீரபாண்டிய கட்டபொம்மன்

Tuesday, December 3rd, 2013 @ 10:15AM

இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் பேசினால், சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

veerapandiya_kattabomman_memorial_statue_-_kayatharu

பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 ம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.

வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரிட்டீஷ் அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்று ஆங்கிலேய அரசு குற்றம் சுமத்தியது.தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். இது போன்ற ஆயிரக்கணக்கான தளபதிகளும் இலட்சக்கணக்கான மக்களும் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தயும் துறந்து பெற்றதுதான் நம் நாட்டின் சுதந்திரம். அப்படிப்பட்ட சுதந்திர நாட்டை பேணி பாதுகாத்து மேன்மையடையச்செய்வதுதான் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நாம் கொடுக்கும் நன்றியாகும்.

வாழ்க பாரதம்                                            வாழ்க தமிழகம்                            வாழ்க வளமுடன்

–    ஜி.பி –

Categories: Article, October 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: