என் சேவை! என் உரிமை!! – 1

Wednesday, January 29th, 2014 @ 10:57AM

புதிய தொடர்

சேவை பெறும் உரிமையின் அவசியத்தையம், மக்களுக்கு அரசு அலுவலகங்களில் அது விளைவிக்கும், விளைவிக்கப் போகும் நன்மைகளையும் லோக் சத்தா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ பற்றியும், அச்சட்டம் இந்தியாவில் எங்கெல்லாம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் தொடர்தான் இது. இந்த சட்டத்தை முதன் முதலில் அமுல்படுத்தியது மத்திய பிரதேச அரசாங்கம் தான். அங்கு இச்சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். இப்போது வரவிருக்கும் மாதங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதையும் மக்களுக்கு அது பயக்கும் பயன்களையும் விரிவாக பார்ப்போம்.

மத்திய பிரதேசம்
ஊழல் ஒரு நோய் போல எங்கும் பரவியுள்ளதாலும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் தராமல் எந்த காரியத்தையும் மக்களால் சாதிக்க முடியாத காரணத்தினாலும், மத்திய பிரதேச அரசாங்கம் பொது சேவை பெறும் உரிமை சட்டத்தை 2010ல் அமுல்படுத்தி, மக்களுக்கு கால தாமதமில்லாத அரசு சேவையை உறுதிப்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் பணியை நிர்ணயித்த காலத்திற்குள் செய்யத்தவறும் பட்சத்தில் அவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 250 முதல் ரூபாய் 5000 வரை அபராதம் செலுத்த வேண்டும். அந்த அபராதம் விண்ணப்பதாரருக்கு (பொது மக்களுக்கு) இழப்பீடாக வழங்கப்படும். இதை உரைத்தவர் ‘ட்ரான்ஸ்பிரன்ஸி இண்டர்நேஷனல்’ அமைப்பின் துணைத்தலைவர். எந்த ஒரு மாநிலமும், இது குறித்து சிந்திக்காத பொழுது, இந்த சேவை பெறும் உரிமை சட்டத்தை ‘லோக் சேவான் கே பிரதான் கி கியாரண்டி அதினியம்’ என்னும் பெயரில் 2010ம் ஆண்டு கொண்டுவந்து புரட்சி ஏற்படுத்தியவர், தற்பொழுது தொடர்ந்து 3வது முறையாக மத்திய பிரதேசத்தின் முதல்வரான சிவராஜ் சவுகான்.

செயல்பாடு
16 அரசு துறைகளில் 52 சேவைகளோடு துவங்கப்பட்டது மத்திய பிரதேசத்தின் சேவை பெறும் உரிமைச் சட்டம்.
சில சேவைகள் – மின் துறையில் மின் இணைப்புகள், தொழிலாளர் துறையில் பிரவச கால மற்றும் திருமண உதவி சேவை, வருவாய் துறை சேவைகள், பொது நிர்வாக முறையில் வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ், சமூக நலன் துறையில் முதியோர் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம். இதனை செயல்படுத்தவென பொதுச் சேவை நிர்வாகத் துறை துவங்கப்பட்டது.

இந்த துறைகளில் ஒருங்கிணைப்புக்குரிய அதிகாரிகள் (Nodal officers), இனம் காணப்படும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொதுச் சேவை நிர்வாக துறையை நியமித்தது.

அரசு அதிகாரி தான் வழங்க வேண்டிய சேவையை நிர்ணயித்துள்ள காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையேல் எழுத்துப்பூர்வமாக பதில்தர வேண்டும். இரண்டும் நடக்காத பட்சத்தில் விண்ணப்பதாரர் மேல்முறையீட்டு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். அவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் தர வேண்டும். அங்கும் சேவைகுறைபாடு ஏற்படும் பட்சத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு அலுவலருக்கு புகார் செய்யலாம். சேவை குறைபாடு உறுதியானால் அரசு அதிகாரியின் மீதும், முதல் மேல்முறையீட்டு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவருக்கும் ரூபாய் 500 முதல் ரூபாய் 5000 வரை அபராதம் விதிக்கலாம்.

இந்த சேவையை செம்மையாக செயல்படுத்த மத்திய பிரதேச அரசாங்கம் விண்ணப்ப நடைமுறைகளை எளிமையாக்கியுள்ளது. உதாரணமாக பல சேவைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகிகளும் அவருடைய உதவியாளரும் தர கட்டுப்பாடு மேற்கொள்கிறார்கள். சேவைகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மக்களை சென்றடைகிறதா என கண்காணிக்கிறார்கள்.

மக்களுக்கு சிறப்பு கிராம சபைகளின் மூலம் இச்சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
இந்த சேவைகளை தொழில்நுட்பத்தோடும் இணைத்திருக்கிறார்கள்.
மக்கள் தங்களுடைய விண்ணப்ப நிலைகளை, இணையத்தில் காணலாம். இணைய முகவரி – www.lokseva.gov.in

புரட்சி ஏற்படுத்தியவருக்கு பாராட்டு
நாட்டிலேயே முதன்முதலாக இந்த சட்டத்தை அமுல்படுத்திய சிவராஜ் சவுகானுக்கு ஐ.நா. 2012ம் ஆண்டு விருது வழங்கி கவுரவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘சேவை குறைபாட்டிற்கு, பொறுப்புணர்வை ஏற்படுத்தினோம். ஒரு அரசு அதிகாரி அவர் செய்யாத பணிக்கு அபராம் கட்டும் சூழ்நிலை ஏற்படும் பொழுது, அது தானாகவே அரசு சேவைகளில் கால தாமதத்தை ஒழித்து, அளவு கடந்த நிலுவைகளை நீக்குகிறது’ என்றார்.
இது வரை அரசிற்கு 1.11 கோடி புகார்கள் வந்ததாகவும், அதில் 1.10 கோடி புகார்கள் நிவர்த்திசெய்யப்பட்டதற்காகவும், 113 பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 49 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் கருத்து
இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும் மேல் முறையீடுகள் குறைவாக இருப்பதாகவும் மத்திய பிரதேச மாநில மக்கள் தெரிவிக்கின்றனர்.
– உரிமை போராட்டம் தொடரும்…

தெ.ஜெகதீஸ்வரன்

Categories: Article, December 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: