ஓயாத அலைகள் – பாகம் 7

Tuesday, January 28th, 2014 @ 3:08PM

கச்ச(ட்சி)த் தீர்வு அரசியல் – 6

1920களில் இருந்தே கச்சத்தீவு பிரச்னை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இருந்து வந்ததை நாம் பார்த்தோம். 1974ம் ஆண்டு மற்றும் 1976ம்ஆண்டு ஒப்பந்தங்களையும் விரிவாகப் பார்த்தோம். பல வருடங்களாக இந்தப் பிரச்னை இருந்து வந்த போதிலும் 1976ம் ஆண்டோடு இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அந்த குறிப்பிட்ட வருடங்களின் கட்டாயம் என்னவாக இருந்தது? நாம் கீழே தரும் தகவல்கள்யாவும் வெவ்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. உறுதிப்படுத்த முடியாத தகவல்களாக இவை உள்ளன.

ஏன் தாரை வார்க்கப்பட்டது கச்சத்தீவு? சில காரணங்கள்

1) ஜே.வி.பி. காரணமா?
ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) (தமிழில் மக்கள் விடுதலை முன்னணி) இலங்கையின் அரசியல் கட்சிகளுள் ஒன்று. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இரண்டு தடவைஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது. அதில் முதல் கிளர்ச்சியான 1971ம் ஆண்டு ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி தெரிந்து ஜே.வி.பி.யின் தலைவர் கைது செய்யப்பட, ஜே.வி.பி.யினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியை முறியடிக்க இலங்கை சர்வதேச உதவியை கோர, உதவிக்கு விரைந்தது இந்தியா. ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வாரத்தில் முறியடிக்கப்பட்டது. ஜே.வி.பி. இலங்கையில் தடை செய்யப்பட்டது. இந்தியா ஜே.வி.பி.க்கு எதிரியானது. எதிரியாக மாறிய ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது என சொல்லப்படுகிறது.

2) அணுகுண்டு சோதனை காரணமா?
சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்பது இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை குறிப்பதற்கான குறிச்சொல். இந்த சோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974ம் ஆண்டு மே 18 நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் 5 நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தன. அவையில் இந்த 5 நாடுகள் தவிர நிரந்தரமில்லாத இரண்டாண்டுகள் செயலாற்ற மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் 10 உறுப்பு நாடுகளும் உண்டு. அணுகுண்டு சோதனை செய்த காலத்தில், இந்தியாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக்குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக் கடனாக இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க முடிவு செய்தது எனவும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

3) இந்தியாவின் சமாதான சுகவாழ்வு கொள்கை காரணமா?
அண்டை நாடுகளுடன் சண்டை வேண்டாம். சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற முடிவு காரணமாக இருக்கலாம். 1973ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா இலங்கை சென்றார். பின் இரு நாட்டு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974ல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியா வந்தார். கச்சத்தீவு கைமாறியது என்றும் சொல்லப்படுகிறது.

4) சரியான நேரத்தில் உரிமை கோரப்படவில்லை
1971 முதல் 1974 வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கையின் முப்படைகளும் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத்தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க்கப்பல் ‘கலோகு’ கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தன் படையையோ, அதிகாரியையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையும் இல்லை. ‘கொக்கோ தீவு’ பர்மாவிற்கு தாரைவார்க்கப்பட்டது போல கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்ற கூற்றும் முன் வைக்கப்படுகிறது.

5) சோவியத் ரஷ்யா – அமெரிக்க உறவு முறை
இலங்கைக்கு சொந்தமான திகாவிட்டோ தீவில் அமெரிக்காவின் இராணுவம் வந்திறங்கியது. இந்தியா சோவியத் ரஷ்யாவுடன் நட்பாக இருந்த காலகட்டம் அது. அமெரிக்கா இந்தியாவை தாக்கக் கூடும் என்ற எண்ணத்தில் இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கி அமெரிக்காவை வெளியேறச் செய்தது இந்தியா என்ற இராஜ தந்திர நடவடிக்கையாகச் சொல்லப்படுகிறது.

6) கொடுத்து பெறுதல் கொள்கை
1974ம் ஆண்டு இந்திரா காந்தி இந்தியாவில் இருக்கும் அண்டை நாடுகள். அந்த நாடுகளுடன் கொடுத்து பெறுதல் என்னும் ஒரு முடிவு நடக்கிறது. அண்டை நாடுகளுக்கு தேவையான ஒன்றை வழங்கி நமக்குத் தேவையான ஒன்றை பெறுவதுதான் அது. அப்படித்தான் இலங்கைக்கு தேவையான கச்சத்தீவை கொடுத்து, அந்தமான்- நிகோபரில் இலங்கைக்கு சொந்தமான ஒரு தீவை பெற்றார்கள் எனவும் ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது.

7) பாகிஸ்தான் காரணமா?
இந்தியா – சீனா போரின் போதும் சரி, பாகிஸ்தானுடனான போரின் போதும் சரி. இலங்கை இந்தியாவின் பகை நாடுகளின் சார்பாகவே செயல்பட்டது. குறிப்பாக 1971 வங்கதேச விடுதலை பேரின் போது பாகிஸ்தானுக்கு இலங்கை அளித்த ஆதரவுக்காக, பாகிஸ்தான் இலங்கைக்கு 2 வானூர்திகளை பரிசாக அளித்தது. 1971 போருக்கு பின்னர் இலங்கையில் தனது விமானதளத்தை அமைத்துக் கொள்ள பாகிஸ்தான் இலங்கையிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது. இந்திரா பாகிஸ்தானுக்கு இடம் அளிக்கக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார். இந்த ஒப்புதலுக்கு செவிசாய்க்க இலங்கைக்கு ‘கச்சத்தீவு’ தரப்பட வேண்டும் என பண்டாரநாயகா பேரம் பேசினார். பேரம் படிந்தது எனவும் சொல்லப்படுகிறது.

8) இந்திரா – பண்டாரநாயகா நட்பு, பண்டாரநாயகாவின் அரசியல் வீழ்ச்சி காரணமா?
நேருவின் குடும்பமும், பண்டாரநாயகாவின் குடும்பமும் நெருங்கிய நட்புறவு பூண்ட குடும்பங்கள். பண்டாரநாயகா உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெரும்புகழ் பெற்றவர். நேரு பண்டார நாயகாவுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். நேருவின் மரணத்திற்கு பிறகும் இந்திரா காந்தி, பண்டாரநாயகாவுடன் தங்கள் குடும்ப நட்பை பேணிக்காத்து வந்தார். திருமதி.பண்டாரநாயகா உலக அரங்கில் புகழ் பெற்ற போதிலும் நாளடைவில் உள்நாட்டில் அவர் புகழ் சரியத் தொடங்கியது. உள்நாட்டில் சரிந்த தன் புகழை, தன் கட்சியின் சரிவை சரிகட்ட குடும்ப நட்பை பயன்படுத்தி கச்சத்தீவை இந்திராவிடமிருந்து பரிசாக பெற்றார் எனவும் ஒரு பார்வை உள்ளது.

Categories: Article, December 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: