விவாதத்திற்கு உள்ளான பாரத ரத்னா!

Friday, January 24th, 2014 @ 12:12PM

ஒவ்வொரு நாடும் அந்நாட்டின் தலைசிறந்த குடிமகன்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கும். இந்திய அரசு கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் தலைசிறந்த பொதுத் தொண்டு ஆற்றும் அறிஞர்களுக்கு பல கட்டமாக விருதுகள் வழங்குகிறது. பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் என்ற வரிசையில் உயர்ந்த விருது பாரத ரத்னா விருது. 1954ம் வருடம் இந்த விருது வழங்கும் முடிவு எடுக்கப்பட்ட போது உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் இத்தகைய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. பின்னர் 1955ல் இவ்விருது பெற தகுதியுடையவர்கள் அவர்கள் இறந்த பின்னரும் விருது பெறும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. 2011ல் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கி நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்களுக்கும் இவ்விருது பெற தகுதி உண்டு என சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

விருது பெற்றவர்கள் யார் யார்?
1954ல் முதன் முதலில் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர்.சி.வி.ராமன் மற்றும் ராஜாஜி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 2008 வரை மொத்தம் 41 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் பண்டித ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், கான்அப்துல் கபார்கான், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, காமராஜ், எம்.ஜி.ஆர்., மொரார்ஜி தேசாய், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதில் பெரிய வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்த நமது தேசப்பிதா மகாத்மா காந்திக்கு இதுவரை அவர் உருவாக்கிய காங்கிரஸ் அரசு இந்த உயரிய விருதினை வழங்க முன்வராததுதான்.

சர்ச்சைக்குள்ளான விருதுகள்
உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் இவ்விருது வழங்கப்படும் என்ற விதியின் அடிப்படையில் மகாத்மா காந்திக்கு இவ்விருது 1954ல் வழங்கப்படாவிட்டாலும், 1955ல் இறந்தவர்களுக்கும் இவ்விருது வழங்கலாம் என விதி திருத்தம் செய்யப்பட்ட பின்னரும் இன்று வரை இவ்விருது வழங்கப்படாதது பெரும் சர்ச்சைக்குரியதாகவே கருதப்படுகிறது. நேரு குடும்பத்தில் இதுவரை மூன்று பேருக்கு இவ்விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு 1992ல் வழங்கப்பட்ட இவ்விருது, அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திரும்பப் பெறப்பட்டது. அதே போன்று 1954ல் இந்தியாவின் முதல் கல்வி மந்திரி அப்துல் கலாம் ஆசாத் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்ட போது, விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த இவர் அவ்விருதை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் 1992ல் அவருக்கு மீண்டும் இவ்விருது வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 2013ல் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட உள்ள விருதும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா
சச்சின் டெண்டுல்கருக்கு இவ்விருது கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, இவ்விருது பெறும் தகுதிக்கான விதிகளை திருத்தி, விளையாட்டுத் துறையை சார்ந்த சச்சினுக்கு இவ்விருது வழங்கப்பட்டது என ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறது. இதில் என்ன சிறப்பு என்றால் இவர் ஏற்கனவே காங்கிரஸ் சார்பாக ராஜ்யசபா நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் நான்கு மாநில சட்டசபை தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் இவ்விருது அறிவிக்கப்பட்டது தேர்தல் விதிமுறைக்கு முரணானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்து இவ்விருதினை உறுதி செய்தது. ஆனாலும் 40 வயதே ஆன இவருக்கு அவசர அவசரமாக இவ்விருது அறிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. பாவம் இப்படியாவது நல்ல பெயர் எடுத்து ஒட்டுகள் வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கு போட்ட காங்கிரஸ் அரசுக்கு இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது.

தினகரன் போஸ்

Categories: Article, December 2013, Whistle
Tags: , ,

1 Comment to "விவாதத்திற்கு உள்ளான பாரத ரத்னா!" add comment
Siva Ramaswami
January 28, 2014 at 3:01 am

சச்சின் இந்த விருதின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இதை நிராகரித்திருந்தால் பாரத்ரத்னாவை விட அவர் புகழ் ஓங்கியிருக்கும்! வாய்ப்பை இழந்து விட்டார்.

Leave a Reply

%d bloggers like this: