அரசியலில் என் பயணம் இதுவரை, இனி….

Saturday, February 22nd, 2014 @ 1:56PM

இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே நாளில்தான் என் வேலையை ராஜினாமா செய்தேன். சுமார் 8 வருடங்கள் இரண்டு கணிப்பொறி பணிபுரிந்ததற்கு பிறகு 2012 ஜனவரி 5 வெள்ளிக்கிழமை பணியின் கடைசி நாளாக அமைந்தது.

மக்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் கல்லூரி நாள் தொட்டே இருந்து வந்தது. அதே நேரம் நான் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து முடித்து, குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டு, அந்த வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்திய பின் மக்கள் பணிக்கு வர வேண்டும் என்றே முடிவு செய்தேன். இவையெல்லாம் நடக்க பணம் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். நான் படித்த இயந்தரவியல் துறையில் (Mechanical Engineering) நான் நினைத்த அளவு சம்பளம் பெற நிச்சயம் நாளாகும். அதற்கு ஒரே மாற்று கணிப்பொறி நிறுவனம். படித்து முடித்து ஒன்பது மாத காலத்திற்கு வேலை கிடைக்கவில்லை. சரி எம்.பி.ஏ. முயற்சிக்கலாம் என ‘டைம்’ பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தயார் செய்து கொண்டிருந்தேன். BIMல் இடம் கிடைத்தது. அதே நேரம் TCSல் வேலையும் கிடைத்தது.

வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் நான் உறுதி செய்யப்பட்ட(Confirmation) அன்று சாயங்காலமே நான் ஒரு வீடு வாங்குவதற்கு என் தேடலை துவக்கினேன். மிகுந்த தேடலுக்கு பிறகு ஒரு வருடம் கழித்து வீடு வாங்கினேன். வீட்டுக்கடனை விரைவாக அடைக்க வேண்டும். அதற்கான வழி ‘வெளிநாடு பயணம்’. நான் நினைத்தது போன்ற ஆன்சைட் வாய்ப்பு அமைந்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு மட்டும். ஹவாய் தீவிற்கு சோகமாக சென்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். ஆனால் அங்கு நீண்ட நாட்கள் பணி செய்ய வேண்டிய நண்பர் இங்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட, நான் அங்கு நீண்ட காலம் தங்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. சிறுக சிறுக சேமித்தேன். நிறுவனங்களுக்கு உள் இருக்கும் தீய அரசியல் என்னை வேறு நிறுவனத்திற்கு தள்ளியது. அங்கேயே CTSல் அமெரிக்க பணியாளனாக இணைந்தேன். கனெக்டிகட் மாகாணம் சென்றேன்.

இதற்கு நடுவில் இரண்டு சாகசங்களை நானும் நண்பர்களும் துவக்கினோம். ‘சிவா மெமோரியல்’ குழந்தைகள் சிலரின் இருதய அறுவை சிகிச்சைக்கும், குழந்தைகள் சிலரின் படிப்பிற்கும் உதவியது. ‘மாற்றம் சமூகம்’ மக்கள் அரசாங்கம் மாற்றிக் கொள்ள வேண்டிய சில விசயங்களை பற்றி பேசியது. அமெரிக்காவில் இருந்தபோது தினம் ஒரு மணி நேரம் இந்தியாவில் இருக்கும் (குறிப்பாக நந்தா, சிவா) நண்பர்களுடன் பேசி, பேசி பல மாற்றங்களை குறித்து விவாதித்தோம். அவற்றை ஆவணப்படுத்தினோம். கனெக்டிகட் மாகாணத்தின் மேல்சபை, சட்டசபைக்கு சென்று பல பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசாங்கம், அவர்களின் ஆட்சி குறித்து பேசினேன். மேயருடன் பல மணி நேரம் பேசும் வாய்ப்பும் கிட்டியது. அமெரிக்க சட்டசபையிலும் பேசும் வாய்ப்பும் கிட்டியது.

இரண்டரை வருடத்தில் வீட்டுக்கடன் முழுவதும் அடைந்தது. இனி மக்களை நோக்கிய என் பயணம் வெகு விரைவில் இருக்கும் என்பதை எண்ணி மகிழ்ந்தேன். ஆனால் என்னை இந்தியா அனுப்புவதற்கு என் நிறுவனம் சம்மதிக்கவில்லை. சண்டையிட்டு இந்தியா திரும்பினேன். என்னை முழுவதும் புரிந்த, என் மேல் அன்பு செலுத்துபவளை மணந்து கொண்டேன்.

வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்தல் ஒரு வரம். அந்த வரத்தை எனக்கு சாத்தியப்படுத்தியது என் மனைவி.

இந்த சங்கங்கள் இரண்டுமே என்னை அரசியலை நோக்கியே இட்டு சென்றது. தமிழ்நாட்டில் மேல்சபைக்கான தேர்தல் நடக்கும் என திமுக அறிவித்தது. பட்டதாரிகளுக்கான தொகுதியில் நாம் போட்டியிட்டால் சரியாக இருக்கும் என Jagadhees-2முடிவு செய்து, வாக்காளர்களாக மேல்சபைக்கு பதிந்த பட்டாதரிகள் பலருக்கு கடிதம் எழுதினேன். நந்தாவின் தூண்டுதலின் பேரில் லோக் சத்தா கட்சி மக்கள் பிரதிநிதிகளை சைதாப்பேட்டை சென்று சந்தித்தேன். செந்தில், இளங்கோ அவர்களின் அலைவரிசையோடு என் அலைவரிசை ஒத்துப்போனது. வேறு சில அமைப்பினரைப் பற்றிக் கேட்டு, ‘ஏன் அவர்கள் உங்களுடன் இணைய வில்லை’ என்ற கேள்விக்கு இளங்கோவின், ‘தீயவர்கள் எளிமையாக அரசியலில் இணைந்து விடுவார்கள். ஆனால் நல்லவர்கள் இணைவதில் ஈகோ உள்ளது’ என்பதை கேட்ட மறு நிமிடம் அந்த கட்சியில் இணைவது என முடிவு செய்தேன். இரண்டு தேர்தல்கள், சில சந்திப்புகள், சில பயணங்கள் என மெதுவாக நகர்ந்தோம்.

கட்சியின் வேகமான வளJagadhees-3ர்ச்சிக்கு நான் முன்பு முடிவுசெய்திருந்த ‘முழு நேரம்’ தேவைப்படுவதாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. வேலையை ராஜினாமா செய்தேன். ‘மக்கள் சக்தி’ என்னும் பெயரில் இருந்த குழப்பங்கள் நீங்கி லோக்சத்தாவாக மட்டும் அடையாளப்படுத்த துவங்கினோம். நான் மாநிலத்தலைவர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டேன். முதல் வருடம் அணிக்குள் நிறைய நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைத்தது. அமைப்பு ரீதியான கற்றல் இருந்தாலும், களப்பணி குறைவாகவே எனக்கு இருந்தது.

அதை உடைத்தது 2013ம் ஆண்டு. 2013 முழுவதும் எனக்கு வாய்த்த கற்றலை பல பக்கங்கள் எழுதலாம். தமிழகத்தின் பல பிரச்சனைகளை பற்றி அறிந்தும், அதற்கான தீர்வுகள் பற்றி சொல்லும் அளவுக்கு லோக்சத்தாவின் சொத்தான ‘அறிவு’ எனக்கு வளர்ந்துள்ளது. இரண்டு வருடங்களில் நான் ஒரு பக்குவப்பட்ட மனிதனாக உணர்கிறேன். மக்கள் குறைகளை போக்கும் பொழுதும், கள ஆய்வுகள் செய்யும் பொழுது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எண்ணற்ற தொடர்புகள், என் மீது அன்பு செலுத்தும் எத்தனையோ நல்லுள்ளங்கள், ஊடக நண்பர்கள் என நான் இரண்டு வருடத்தில் கடந்து வந்த பாதை சில சமயம் பிரமிப்பாகவும், சில சமயம் பல பொறுப்புகளை என் மீது வழங்கியுள்ளதையும் என்னால் உணர முடிகிறது.

என்னுடைய தேவைகளுJagadhees-4க்கு அவர்களாகவே முன்வந்து எனக்கு நன்கொடை அளிக்கும் சில நல்லுள்ளங்களுக்கு நன்றி சொல்லும் வேளை இது.

ஆனால் இவையாவும் ஆரம்பம் மட்டுமே என எனக்குத் தோன்றியது. சென்னையைத் தாண்டி தமிழகத்தில் இருக்கும் எல்லா மாவட்ட மக்களையும் முடிந்த வரை படிக்க வேண்டும், பல ஊர் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கடந்த 3 மாதங்களாக உதித்தது. அதே சமயம் ‘சேவை பெறும் உரிமைக்காக’ நம் போராட்டத்தையும் பல ஊர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு நேர்மையான உந்துதலும் இருந்தது. இவை இரண்டையும் இணைத்து செல்லும் பயணம் நான் என் பணியை துறந்து முழுநேர அரசியலுக்கு வந்த அதே தினம் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதுவும் ஒரு துவக்கமே. ஒரு முழுநேர அரசியல்வாதியை இந்த பயணம் முழுமை அடையச்செய்யும் என்ற நம்பிக்கையுடன்…

– தெ.ஜெகதீஸ்வரன் –

Categories: Article, January 2014, Whistle
Tags: , ,

4 Comments to "அரசியலில் என் பயணம் இதுவரை, இனி...." add comment
Manoj T
February 22, 2014 at 2:38 pm

Keep up your good work Sir !

Palani
February 22, 2014 at 3:01 pm

Congrats and best wishes Jagadees

Narayanan
February 22, 2014 at 11:08 pm

Best wishes Jags! You are a great leader..

kalvi
March 29, 2015 at 12:38 pm

congrats

Leave a Reply

%d bloggers like this: