ஆம் ஆத்மியின் எழுச்சி

Thursday, February 6th, 2014 @ 11:32AM

டெல்லி
தற்போதைய டெல்லி சட்டமன்றம் 1991ல் 69வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி அமைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்திற்கு முதல் தேர்தல் 1993ம் ஆண்டு நடந்தது. இதில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. ஆண்ட ஐந்து வருடங்களில் மூன்று முதல்வர்கள் மாறினர். 1998ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் ஆனார் ஷீலா தீட்சித். அதில் இருந்து தொடர்ந்து 3 முறை டெல்லியில் ஷீலா தலைமையில் அசைக்க முடியாத சக்தியாக காங்கிரஸ் இருந்தது.

ஆம் ஆத்மி கட்சி
லோக்பால் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் நடை பெற்ற போராட்டங்களின் போது தேசிய அளவில் பலருக்கு அறியப்பட்டவர் இன்னொரு சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால். இவர் தனது ஐஆர்எஸ் பணியை துறந்து பரிவர்தன் என்கிற சமூக தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல்வேறு சமூக செயல்களில் ஈடுபட்டார். தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வர போராடியவர்களில் இவரும் ஒருவர்.
தனது தொடர் போராட்டத்தின் மூலம் லோக்பால் கொண்டு வரப்படலாம் என நம்பினார் அன்னா ஹசாரே. ஆனால் அரசியலுக்கு வெளியில் இருந்து அதை நிறைவேற்ற முடியாது என்கிற பெரிய உண்மையை அப்போதுதான் உணர்ந்தார் அர்விந்த் கேஜ்ரிவால். தனியாக அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என முடிவு செய்தார். அவருடன் பலர் கை கோர்த்தனர்.

தேர்தல்
டெல்லி சட்டமன்றத்திற்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்த வாக்காளர்கள் 1.2 கோடி வாக்களித்தவர் சதவிகிதம் 66%. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பான்மை பெரும் என எதிர்பார்த்த பா.ஜ.க. 31 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் வெற்றி கண்டது. ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை வென்று சாதனை புரிந்தது. ஷிரோமணி அகாலி தள் (பா.ஜ.க. கூட்டணியில்) ஒரு தொகுதியையும், ஐக்கிய ஜனதா தள் ஒரு தொகுதியையும் மற்றும் சுயேச்சை ஒரு தொகுதியையும் வென்றனர்.

யாருக்கும் பெரும்பான்மை இல்லாத இந்த முடிவு தொங்கு சட்டசபையை உருவாக்கியது. அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியான பின்பு ஆட்சி அமைக்க வேண்டாம் என பா.ஜ.க. முடிவெடுத்தது.

இதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே பா.ஜ.க. மற்றும் காங்கிரசினர் இரண்டாது இடத்தைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என கூறி வந்தனர். ஆட்சி அமைக்காமல் ஒதுங்கினால் அது ஆம் ஆத்மி கட்சியின் கோழைத்தனத்தை காட்டும் என்றும், அவர்களுக்கு ஆட்சி செய்யும் அளவுக்கு திறமை இல்லை எனவும் பேசினர்.

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைப்பது குறித்து பேசுவதற்கே இடம் இல்லை என்றது ஆம் ஆத்மி கட்சி. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கும் என அறிவித்தது. காங்கிரஸின் ஒரே நோக்கம் பா.ஜ.க. ஆட்சி அமைக்ககக் கூடாது என்பது மட்டுமே. காங்கிரஸ் பல முறை இது போன்ற கொள்கை சார்பற்ற ஆதரவு (1979, 1990களில்) அளித்துள்ளது வரலாறு.
காங்கிரஸின் ஆதரவை பெற வேண்டாம் என்ற முடிவில் ஆம் ஆத்மி கட்சி இருந்தது. இந்த சூழலில் டெல்லியின் துணை ஆளுனர் நஜீப் சிங் அவர்கள் ஆட்சியமைப்பது குறித்து பேச ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் 18 கொள்கைகளில் பா.ஜ.க. மற்றும் காங்கிரசிடம் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிய கடிதம் எழுதினார் அர்விந்த் கேஜ்ரிவால். காங்கிரஸ் தனது பதிலில் 16 முடிவுகள் நிர்வாக ரீதியாக எடுக்ககூடியது என்றும் அதற்கு சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறினர். பா.ஜ.க. அதற்கு எந்த பதிலும் அனுப்பவில்லை.

இணையதளம், எஸ்.எம்.எஸ். மூலம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அது மட்டுமின்றி 280 இடங்களில் மக்கள் கூட்டம் நடத்தி கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் ஆம் ஆத்மி ஆட்சியமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். 280 மக்கள் கூட்டங்களில் 257 கூட்டங்களில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். எஸ்.எம்.எஸ். மற்றும் இணையதளம் மூலம் சுமார் 7 இலட்சம் கருத்துக்கள் வந்தன. அதில் 2.6 இலட்சம் டெல்லியில் இருந்து வந்தவை. அவற்றில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது ஆம் ஆத்மி கட்சி.

இதற்கு காத்திருந்த பா.ஜ.க. தொடங்கியது ஆம் ஆத்மி கட்சி மீது வார்த்தை தாக்குதலை. ஊழல் காங்கிரசுடன் கை கோர்த்துவிட்டது ஆம் ஆத்மி கட்சி என்று. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்தது ஆம் ஆத்மி கட்சி. ஊழலில் ஈடுபட்ட எந்த கட்சியினராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.

டிசம்பர் 28 அன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ராம் லீலா திடலில் பதவி ஏற்றார் அரவிந்த் கேஜ்ரிவால். ஜனவரி 3ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுனர் கோரியிருந்தார். முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் யாரும் தங்களது வாகனங்களில் சுழல் விளக்கு பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும், தேவை இல்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்படுதை தவிர்க்கவும் முடிவு செய்தனர்.

பதவியேற்ற 48 மணி நேரத்தில் டெல்லியில் தண்ணீர் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளுக்கும் தினம் 700 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என கூறியிருந்ததை போல அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். அடுத்து மின் கட்டணம் குறைக்கப்பட்டது. 400 யூனிட்டுக்குள் பயன்படுத்துவோரின் மின் கட்டணத்தில் பாதியை அரசே ஏற்கும் என அறிவித்த அரசு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை தணிக்கைக்கு உட்படுத்தியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் (8), ஐக்கிய ஜனதா தளம் (1) மற்றும் சுயேச்சை (1) ஆம் ஆத்மி கட்சியின் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் இந்த வெற்றி இந்திய அரசியலில் மிக முக்கிய நிகழ்வு என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்த மாற்று அரசியலுக்கான விதை 2006ம் ஆண்டு லோக் சத்தா கட்சியால் தூவப்பட்டது. 2009ம் ஆண்டு இந்த முதல் அறுவடையில் சிறிய பலன் கிட்டினாலும் அதை பெரிய அளவில் பயன் படுத்தினார் லோக் சத்தா கட்சியின் தேசியத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன். இந்த மாற்று அரசியல் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

யுவராஜ்

Categories: Article, January 2014, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: