இபிகோ

Monday, February 10th, 2014 @ 10:51AM

அண்மையில் நடந்த இ.பி.கோ. 377 தொடர்பான சர்ச்சை நினைவிருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சனையாக மட்டும் தெரியலாம். ஆனால் இது அனைத்து மக்களையும் பாதிக்கின்ற அரசின் பல தூண்களின் உண்மை நிலயை காட்டும் ஒரு கண்ணாடி.

ஓரின சேர்க்கை வாழ்க்கையை யாரும் தெரிவு செய்வதில்லை. அது இயற்கையாக அவர்களுக்கு அமைந்த நிலை. அதற்காக அவர்களை தண்டிப்பது சரியல்ல.

மேலும் இரண்டு இசைவளிக்கும் வயது வந்த நபர்களுள் நடைபெறும் தனிப்பட்ட விவகாரங்களை சட்ட விரோதமாக்குவது தவறு. இப்படியான சட்டங்கள், நமது அரசியல் சாசனத்தால் அளிக்கப்பட்ட தனிமனித அந்தரங்கம், சுதந்திரம், கௌரவம் ஆகிய உரிமைகளை பறிப்பவையாக உள்ளன.

இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டால் அவற்றை நீக்கி அரசியல் சாசன உரிமைகளை நிலை நாட்டுவது உச்ச நீதிமன்றத்திற்கு அரசியல் சாசனம் அளித்துள்ள தலையாய கடமை. இல்லாவிடில் பெரும்பான்மை கொடுங்கோன்மைக்கு இந்த நாடு உள்ளாக நேரிடும். ஆனால் இந்த விவகாரத்தில் இதை நிலைநாட்ட நீதிமன்றம் தவறிவிட்டது.

வாகனங்களில் சுழல் விளக்கு பொருத்தும் உரிமை போன்ற அரசின் கொள்கை முடிவுகளில் எல்லாம் கூட தலையிடும் உச்சநீதிமன்றம் அதன் முதல் கடமையை செய்யாமல் பாராளுமன்றத்தின் முடிவை மதிப்போம் என சாக்கு சொல்வது சரியல்ல. இச்சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அரசியல் சாசன நீதிமன்றங்களே எல்லா மக்களாட்சிகளிலும் பெரும்பான்மை கொடுங்கோன்மையை நீக்கி சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்குவதோடன்றி நாட்டினை, பாராளுமன்றத்தினை முற்போக்கு பாதையில் நகர்த்தியுள்ளன.

நமது நாட்டிலும் நீதியரசர் ஹன்ஸ்ராஜ் கண்ணா முதல் பல சிறந்த நீதிபதிகளினாலேயே எழுபதுகளில் நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீண்டு எழுந்தது. மீண்டும் அவ்வாறு சிறப்பாக செயல்பட லோக் சத்தா பலமுறை கோரி வரும் நீதித்துறை சீர்த்திருத்தம் அவசியம்.

இச்சட்டம் 1860களில் ஆங்கிலேய அரசால் ஒரு காலனியை அடக்கி ஆளும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட கிரிமினல் சட்டங்களின் ஒரு அங்கமாகும். காலனியாதிக்க சட்டங்களை இன்னும் வைத்துக் கொண்டு நாம் விடுதலை அடைந்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. Prison’s Act (1984) கைதிகளுக்கு 30 கசையடிகள் வரை அளிக்கலாம் என்கிறது. கட்சி உறுப்பினர்கள் இருவர் அல்லது மூவராக சென்று தெருக்களில் மக்களுக்கு துண்டு பிரசுரம் அளிக்கக் கூட காவல்துறை அனுமதி வேண்டும். ஒரு துணை ஆய்வாளர் சாத்விகமான முறையில் நடந்து செல்லும் ஒருவரை கூட தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெற்றவராய் இருக்கிறார் (CrPC 129); CrPC 144 ஐ பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் மாதக் கணக்கில் ஒரு இடத்துக்கு செல்லாமல் தடுக்க முடிகிறது.

மதுவுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வரும் மாணவியை ஊருக்கு உள்ளே நுழையக்கூட முடியாமல் விரட்டியடிக்கும் அதிகாரம் காவல் துறைக்கு. இதுவா சுதந்திரம்? இதுவா மக்களாட்சி? மக்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை இருக்கிறதே தவிர சுதந்திரம் இல்லை. ஆட்சியாளர்களுக்கு அவர்கள் பதவியில் உள்ள வரை ஒரு காலனியில் இருப்பதை போல் வானளாவிய அதிகாரங்கள் உள்ளன. என்று இவை பாராளுமன்றத்தால் நீக்கப்படுகின்றனவோ அன்றுதான் நமக்கு உண்மையான விடுதலை பிறக்கும். அதை செய்யாமல் இதுவரை நாட்டை ஆண்டு வந்துள்ள கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.

அகிலன்

Categories: Article, January 2014, Whistle
Tags: , , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: