காவல் துறையினரின் அத்துமீறல்
Wednesday, February 12th, 2014 @ 11:44AM
சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் புஷ்பராஜாவால் சுடப்பட்ட சம்பவம் அதிர வைக்கிறது.
தமீம் அன்சாரி ஆறாம் வகுப்போடு படிப்பை கைவிட்டவர். சின்ன சின்ன திருட்டுச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பிருந்தது என்றும் காவல் துறையினரால் கூறப்படுகிறது. சமீபத்தில் அன்சாரியின் வீட்டருகே இருந்த கோயில் உண்டியல் பணம் திருடு போனது தொடர்பாக விசாரிக்க அன்சாரியைப் பிடித்து சென்ற போலீசார் திருட்டை ஒப்புக்கொள்ள அவரை நிர்பந்தித்திருக்கின்றனர். அவர் ஒப்புக் கொள்ளாத சூழலில் விசாரணையின் உச்சத்தில் நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் அன்சாரியின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டும் போது கழுத்தில் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் அன்சாரி.
தமிழகத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுவோர் எந்த மாதிரியெல்லாம் கொடூரமாக விசாரிக்கப்படுகின்றனர் என்பதற்கு ஓர் உதாரணம் இது. காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகள் திடீர் தற்கொலை அல்லது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எப்படிச் சாகிறார்கள் என்பதற்கான உள்விளக்கம் இந்தச் சம்பவத்தில் உண்டு.
காவல்துறை எப்படி இருக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்புதான் உயர் அதிகாரிகள் மாநாட்டில் வகுப்பு எடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. லட்சக்கணக்கான மக்களைக் கைது செய்யும் போது, இங்கும் அங்கும் போலீஸ் காவலில் ஒருவர் சாவதை எண்ணிக்கைப்படி புறந்தள்ளி விடலாம். ஆனால் அந்த தனி மனிதனின் உயிர் பிரிந்ததை, அவனால் நேசிக்கப்பட்ட மக்களால் ஒரு போதும் புறந்தள்ளிவிட முடியாது. வீடுகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியவர்கள் போலீஸார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், காவல் நிலையங்களில் மக்கள் மரணமடைவது, நீதியைக் கேலி செய்வதாகும்.
இங்கோ, மனித உரிமைகளா, அப்படி என்றால் என்ன? என்று கேள்வி கேட்கும் அளவுக்குச் செயல்பட்டிருக்கிறார் புஷ்பராஜ். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், கவனக் குறைவாக செயல்பட்டதாகவும் இந்திய தண்டனைச் சட்டம் 338வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவை எல்லாம் போதுமான நடவடிக்கைகளா? நடந்திருப்பது கிட்டத்தட்ட ஒரு கொலை முயற்சி, குறைந்தபட்சம் ஏன் கைது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை? மனித உரிமைகளைக் காவல் துறையினர் மதித்து நடக்க வேண்டும் என்று அரசு உண்மையாகவே நினைத்தால், அது இத்தகைய சந்தர்ப்பங்களின் போது எடுக்கும் நடவடிக்கைகளில் இருக்கிறது.
Categories: Article, January 2014, Whistle
Tags: atrocities, police, tameem ansari