சகோதரா..! – கடிதம்

Thursday, February 13th, 2014 @ 12:04PM

நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டம் வெற்றி பெற்றாகிவிட்டது. ஊழலில் திளைத்து நிற்கும் நம் நாட்டில் இது ஒரு விடிவெள்ளியாக அமையும் என்று மக்களின் எதிர்பார்ப்பு. சகோதரா, நாடு சுதந்திரம் அடைந்தவுடன் நாம் ஆனந்த எக்காளமிட்டோம். இனி நம் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நினைத்தோம். ஆங்கில ஆட்சியில் பட்ட கொடுமைகள் நீங்கி இந்த பாரதம் பார் புகழ உயரும் என்று இறுமாப்பெய்தினோம். இந்தியாவில் கல்வி சாலைகள் பல திறந்து மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வழி செய்வோம், என்றும் நியாயமான, நேர்மையான சிந்தனை வளர்ந்தோங்கி எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் ஓர் குலம், நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஆவோம் என்றும், காட்டாட்சி எனும் அடிமை வாழ்வு அகன்று சுதந்திரம் எனும் நல்லாட்சியில் மகிழ்ந்து, இந்த நாட்டின் இயற்கை வளங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டு, ஜீவ நதிகள் ஒன்னோடு ஒன்று இணைக்கப்பட்டு, மிகுதியான வெள்ளம் தேவையான இடத்திற்கு திசை திருப்பப்பட்டு, வேளாண் வளர்ச்சி மிகுதியால் பாரத கண்டம் பசி எனும் அரக்கன் குடியேற முடியாத இரும்புக் கோட்டையில் ஒளிரும் என்று நம்பினோம்.

ஜனநாயகம் எனும் உயர்ந்த, மாட்சிமை பொருந்திய ஆட்சி முறை வாய்க்கப்பெற்று, பொது மக்கள் எனும் பெரும்சாரார் சர்வ அதிகார பலத்துடன் வாழ்ந்து, நமக்கு சேவை செய்ய தேர்ந்த, நல்ல, மனிதநேயமிக்க அரசியல் சேவகர்களை தேர்ந்து எடுத்து, தேர்தல் எனும் மிக்க ஜனநாயக உபகரணத்தால் மாட்சிமை பொருந்திய பாராளுமன்றம் செயல்படும் என்று நம்பினோம்.

உயர்ந்த நற்பண்புகள் நிறைந்த, மதிநுட்பம் மிக்கவர்கள் அதிகாரிகளாக மாறி, அரசாண்மையை செழுமைப்படுத்துவார்கள், திட்டம் தீட்டுவதில் மக்கள் பணம், மிகுந்த கவனமுடன் கையாளப்படும் என்றும், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் நாம் என்று அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஜாக்கிரதை உணர்வு கொண்டு இருப்பார்கள் என்றும் நம்பினோம்.

வெள்ளை அரசாங்கம் நமக்கு எதிராய் செய்த எல்லா மனித உரிமை மீறல்களும் இனி இருக்காது என்று உறுதியாய் பள்ளு பாடினோம். போதுமான சாலை வசதிகள், தரமான கல்வி, தடையில்லா மின்சாரம், குடிநீர் மேம்பாடு, ஊரக வளர்ச்சி, பெண் விடுதலை, (அல்லது சமநிலை), தொழில்மயம், விஞ்ஞான வளர்ச்சி, நோய் அற்ற சமுதாயம், உபரியான உள்நாட்டு வருமானம், மிகுதியாய் ஏற்றுமதி, ஏராளமான வேலை வாய்ப்புகள், இனி துன்பம் இல்லை என்னும் மனநிலை பெற்ற சமுதாயம் அமையும் என்று பாடி மகிழ்ந்தோம். வெள்ளையன் இருந்து நமை வாட்டி வதைத்து பிரித்தாளும் சூழ்ச்சி இனி பலிக்காது என்று நம்பினோம்.

சாதி, மதம், இனம், மொழி, பொருளாதார, கலாச்சார வேறுபாடுகள் இனி பெரிதுபடுத்தப்படாமல் நாம் எல்லாரும் இந்தியன் எனும் ஒற்றை சங்கிலியால் பிணைக்கப்பட்டு, வடக்கே காஷ்மீரத்தில் இருந்து தென்கோடி கடல் முனையில் கன்னியாகுமரி வரை ஒருவித ஆனந்த பிணைப்புடன் வாழ வழி கிடைக்கும் என நம்பி எத்தனையோ, நல் உள்ளங்கள் வீடு, குடும்பம், சொத்து, சுகம் மறந்து நல்லுயிர் ஈந்து ஏராளமான வலியுடன் இரண்டு நூறாண்டுகள் வெவ்வேறு வகையில் வெவ்வேறு தளங்களில் போராடி, போராடி விடுதலை எனும் நிலையை பெற்றோம். சகோதரா உண்மையில் பின் வந்த நாட்களில் வெளி நாட்டவன் செய்ததை போல பல மடங்கு இன்னல்களை நமக்கு நாமே செய்து விடுதலையின் வேறு முகத்தை நாம் அனுபவிக்கிறோம். உள்நாட்டிலேயே நாம் அடிமை ஆனோம்.

சுதந்திரம் பெற்ற போதே இந்து – முஸ்லீம் கலவரம், சமுதாய சீர்கேட்டை விதைத்தது. ஆட்சியின் நம்பகத்தன்மை பக்ராநங்கல் அணை கட்டிய போதும், இராணுவ ஜீப்களை வாங்கிய போதும், ஊழல் நடந்துவிட்டதாக கேள்விப்பட்டோம், பின் முத்திரா ஊழல் என்றார்கள், மக்கள் பயந்து போய்விட்டார்கள். அது மட்டுமல்ல அரசியல் என்பதும், ஆட்சி என்பதும் சாதாரண மனிதர் தனக்கு சம்பந்தமே இல்லா ஒன்று என்று நினைத்து ஒதுங்கிக் கொண்டான். இவர்கள் வாழ, மனிதனிடம் வரி எனும் கொடுங்கோலனை ஏவினார்கள். அதனிடம் இருந்து தப்பிக்க ஒளிந்து கொண்ட மனிதனை வெளியே வர விடாமல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டாக நாட்டை சுரண்டத் தொடங்கினார்கள்.

protest

சகோதரா நாம் சோர்ந்து போகும் அளவிற்கு தினம் தினம் ஒரு ஊழல் தகவல் வெளிவந்தது இனி இது நான் நிலையோ என்று கூட நாம் முடிவுகட்டி விட்டோம். எத்தனை விதவிதமான ஊழல்கள்… 1) ஊறுகாய் ஊழல், 2) பத்திரப் பதிவு முத்திரைத்தாள் ஊழல், 3) பங்கு சந்தை ஊழல், 4) ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், 5) அலைக்கற்றை ஊழல், 6) நிலக்கரி ஊழல், 7) போஸ்கோ ஆலை வர ஊழல், 8) வால்மார்ட் கடைபோக ஊழல்.
இவை எல்லாம் தேசிய அளவில் இந்தியர் அனைவிற்கும் பொதுவானது, இது தவிர மாநில அளவு ஊழல் தனியானது.

சகோதரா, இன்று வந்து இருக்கும் இந்த சட்டம் ஒரு பலம். இதை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சட்டத்தின் மிக பெரிய பலம் ஒவ்வொரு விசாரணைக்கும் காலக்கெடு உள்ளது. அந்த குறித்த நாட்களுக்குள் விசாரணை முடித்துவைக்க வேண்டும். தண்டனை என்பது இனி குறித்த காலத்துக்குள் கிடைத்தாக வேண்டும். மேலும் குற்றம் சுமத்தப்பட்டவரின் சொத்துக்கள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும். மேலும் அவருடைய உறவுகாரர்களின் சொத்துக்களும் முடக்கப்படலாம். இது ஒன்று போதும், இதை வலுவாக நம்பி மிகப்பெரிய அளவில் எல்லார்க்கும் அறிமுகப்படுத்தி சாதாரண மக்கள் சந்தோஷமாய் வாழ வழி செய்து கொடுக்க வேண்டும். ஊழல் ஒரு தேசிய அவமானம், அதை பொறுத்துக் கொள்வது ஒரு ஈன செயல். கிடைத்த ஒரு வாய்ப்பை தவற விடக்கூடாது. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சாதாரண மக்கள்தான் மேல் அதிகாரி என்பதை புரிய வைப்போம். லோக்பால் ஒரு ‘காலக் கட்டாயம்’. வரவேற்று வாழ்வை ஒளியேற்றுவோம்.

– நெமோ –

Categories: Article, January 2014, கடிதம்
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: