தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

Friday, February 7th, 2014 @ 1:23PM

தமிழகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைப் பார்க்கையில் ‘ஆட்சியாளர்கள்’ என்பவர்கள் எதற்காக என்கிற கேள்வி எழுகிறது? அதிலும் அரசியல்வாதிகள் எதற்காக என்கிற கேள்வி மிக பலமாக எழுகிறது. காரணம், அரசியல்வாதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டில் அரசு இயந்திரங்கள் சரியாக செயல்பட்டாலே போதும், எல்லாம் சரியாக அல்லது தானாக நடந்துவிடும்.

அதைவிடுத்து ஆட்சிமுறை என்கிற ஒன்று எழுந்து, அதற்காக தேர்தல் வைத்து மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்து அவர்கள் மூலம் அந்தந்த தொகுதிகளுக்கு நலத்திட்ட பணிகள், வளர்ச்சிப் பணிகள் என கிடைத்து சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாகுபாடற்ற முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அனைத்திற்கும் அடிப்படை. ஆனால் நடப்பது என்ன?

மக்களை காக்க வேண்டிய அரசு, மதுபானக் கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து அதன் மூலம் வருடம் ஒன்றுக்கு 25,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெற்று, அதன் மூலம் மக்களுக்கு பல நலத்திட்டட உதவிகளை வழங்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு எது வாய்ப்பு ஏற்படுத்துமோ அதை(அந்த முறையற்ற செயலை – மது விற்பனை) ஒரு அரசாங்கமே செய்கிறது என்றால் எப்படி சரியாக இருக்கும். இதுதவிர பல துறைகளில் அதற்குண்டான முறையான வேலைகள் எதுவும் சரியானபடி நடப்பதில்லை. கல்வி, தொழில், விவசாயம், சாலை பராமரிப்பு, மின்சாரம், குடிநீர் வினியோகம் என எதை எடுத்தாலும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல்களும் என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முந்தைய காலங்களில் ஒரு நல்ல அரசன் இரவு நேரங்களில் மாறுவேடமிட்டு நகர்வலம் வந்து ஆங்காங்கே மக்கள் என்னென்ன பேசிக் கொள்கிறார்கள், தனது ஆட்சியில் நடைபெறும் திட்டங்கள் மக்களை எப்படி சென்றடைகிறது, மக்கள் எப்படி நலமுடன் வாழ்கிறார்கள் என பலவித வழிகளில் கண்டறிந்து அதன்படி சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். அவர்களின் ஆட்சியை தான் நாம் பொற்காலம் என்றெல்லாம் வரலாற்றில் படிக்கிறோம். ஆனால், இங்கே இடித்துரைக்கப் பலர் இருந்தும் காது கேளாதவர்கள் போல் இருந்து ஆட்சி செய்தால் எப்படி ஒரு நல்லாட்சி தர முடியும் என்பது கேள்விக்குறிதான்.

இருப்பவனுக்கு ஒன்று இல்லாதவனுக்கு ஒன்றுமாகத்தான் நடக்கிறது. குறிப்பாக சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இங்கே நடப்பதில்லை. நாம் கண்கூடாக பார்க்கிறோம். என்ன செய்ய முடியும்? நீதித்துறை மீது கேள்வி எழுப்பினால் நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு தொடுப்பார்கள். சாதாரண குற்றம் செய்தவன் தப்பிக்க வழியின்றி அல்லது தனக்கான தகுந்த வழக்கறிஞர் கிடைக்காமல் மாட்டிக்கொண்டு தண்டனை பெற்று அனுபவிக்கிறான். ஆனால், வசதி படைத்தவர்களுக்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. முடிந்தால் குற்றவாளி அல்ல என்கிற தீர்ப்பு பெறும் அளவிற்கு பணபலம் தன் வேலை செய்கிறது. இதெல்லாம் நாம் அன்றாடம் பார்க்கின்ற, கேட்கின்ற செய்திகள்தான்.

பிறகு எங்கே நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது சரியாக இருக்கும். மேலும் ஆட்சி அதிகாரம் என அரசியல் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் படுத்தும்பாடு அரசு அதிகாரிகளை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் தனக்கு இருக்கும் கௌரவம், மக்களுக்கான பணி அனைத்தையும் மறந்து, அரசியல்வாதிகளின் இழுத்த இழுப்பிற்கு செல்லும் அதிகாரிகளைத்தான் நாம் பார்க்கிறோம்.யாரும் மக்களுக்கான அதிகாரிகளாக இல்லை.

காரணம் தனது வேலைக்கு பாதிப்பு அல்லது பணி இடமாற்றம் என அரசியல்வாதிகள் மூலம் நிகழ வாய்ப்பு இருப்பதால்தான் இந்த நிலை. நாமும் இப்போது பார்க்கிறோம். எத்தனையோ நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்புப்பட்டியலும், ஏதோ ஒரு மக்களுக்கு அதிகம் தொடர்பில்லாத துறையிலும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் அவர்கள் அரசியல்வாதிகளோடு ஒத்துழைக்காத காரணம்.

இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டிற்காக சொல்லப்பட்டவை. இன்னும் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. அப்படி நடக்கின்ற அனைத்து சட்டம் ஒழுங்கு மீறல்களையும் எழுதுவதென்றால் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் போட வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பக்க கட்டுரை கூட போதாது. இருந்தும் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது தனக்கு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு மக்களுக்கு சேவை செய்யத்தான் என்பதை உணர வேண்டும். அதற்காக அவர்களுக்குப் போதுமான ஊதியங்களும் சலுகைகளும் தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. அதையும் மீறி முறைகேடான வழியில் செயல்படுவது நாகரீகத்தின் அடையாளம் ஆகாது. சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக…

  • எஸ்.ஏ.முத்துபாரதி, திருப்பூர் –

Categories: Article, January 2014, Whistle
Tags: ,

1 Comment to "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு" add comment
Anna University
January 22, 2016 at 11:38 pm

naan anna university maanavan. andradam nadapadhai paarkum podhu verupaga irruku. en iipadi pandranga

Leave a Reply

%d bloggers like this: