தமிழக அரசியல் 2013

Tuesday, February 4th, 2014 @ 12:39PM

தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்கியே தீருவோம் என்ற 2012 சோகம் சென்ற வருடமும் தொடர்ந்து, மின் வெட்டுகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ‘விஸ்வரூப’ அரசியலில் தமிழக முதல்வர் தவறான காரணங்களுக்கு நாடு முழுவதும் பிரபலமானார். அதிமுக அரசாங்கம் வந்தாலே சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் பக்கத்து மாநிலத்திற்கு பறந்துவிடுவார்கள் என்ற பந்தாவெல்லாம் பறந்து போக, எல்லா மாநிலத்தில் இருந்தும் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் இன்று தமிழகத்தில்.

முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன் என்று 2012ல் வடிவமைத்த ‘விஷன்’ காற்றில் பறக்க, தமிழக அரசு கொண்டு வந்ததோ அம்மா உணவகமும், அம்மா தண்ணீர் பாட்டிலும்தான். மீனவர்கள் பிரச்னையில் கச்சத் தீவை மீட்பது மட்டுமே ஒரே வழி என்ற பொய்யை தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருவது உச்சபட்ச சோகம்.

கனிம வளங்கள் பல ஆண்டுகளாக கொள்ளை போக, திடீர் என கண்விழித்த தமிழக அரசு ஒரு குழுவை நியமித்ததும், அந்த குழு அறிக்கையை பரிசீலிப்பதும் என காட்டியது பெரிய நாடகம். காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்து, உண்மையிலேயே சாதனை புரிந்திருந்தாலும், அதனை செயல்படுத்த அரசாங்கம் எடுத்த முயற்சி மிகப் பெரிய கேள்விக்குறியே.

முதல்வரின் புகழ் பாடும் ‘சினிமா 100’ விழா, நடந்த இடைத் தேர்தல்களில் வாக்குகளுக்கு வாரி இறைத்த பணம், அடிக்கடி அமைச்சரவை மாற்றம், கட்டாயக் கல்வி உரிமை குளறுபடிகள் என ‘மக்கள் சேவை’யாவும் மறைக்கப்பட்ட ஆண்டு சென்ற வருடம்.

சுப்ரீம் கோர்ட் சூடு தாங்காமல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அறிவித்தவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகரவேயில்லை. எல்லாவற்றிருக்கும் முத்தாய்ப்பாக தொடரும் ‘குடி’ சாவுகள் தமிழகத்தின் மானத்தை தொடர்ந்து கப்பல் ஏற்றுகிறது.

விபத்துக்களிலும், தற்கொலைகளிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடிப்பது குறித்து இங்கு யாருக்கும் கவலையோ, அக்கறையோ இல்லை.

தமிழக முதல்வராக தன் கடமைகளை சரிவர செய்யாத ஒருவர் அடுத்த பிரதமர் தான்தான் என ஊர் முழுவதும் விளம்பர தட்டிகள் வைத்துக் கொள்வது சமூக அக்கறை கொண்டவர்களுக்கு வேதனையை தரலாம். அந்த வேதனை ‘மாற்று அரசியல்’ நோக்கி நம்மை நகர்த்தாதவரை இந்த‘சோகம்’ தொடரத்தான் செய்யும்.

Categories: Article, January 2014, Whistle, தலையங்கம்
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: