பாராளுமன்ற தேர்தல்: கட்சிகளின் நிலை

Saturday, February 8th, 2014 @ 1:36PM

தமிழக அரசியல் கட்சிகள் தேசிய பிரச்சனைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் என்பது சமீபகால பாராளுமன்ற தேர்தல்களில் நடந்ததில்லை. எனினும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தேசியத் தீர்வுகள் பல.
1) தமிழக மீனவர்களின் மீன்பிடி சுதந்திரம் மற்றும் கடலில் பாதுகாப்பு.
2) அண்டை மாநிலங்களுடனான நீர்ப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு.
3) சென்னை – கன்னியாகுமரி இடையிலான இரயில் பாதையை இருவழிபாதையாக மாற்றுவது.
4) மின் பற்றாக்குறை.
5) இலங்கைப் போரில் பாதிப்படைந்த மக்கள் மீதான தமிழ் மக்களின் நியாயமான மனித உணர்வு.
6) சேது சமுத்திரம் திட்டம் பற்றிய தெளிவான அணுகுமுறை.
7) தமிழக துறைமுகங்களை மேம்படுத்துதல்.ஆண்டுக்கு 50,000 மேற்பட்ட பொறியாளர்களை உருவாக்கும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு துறைமுகங்களின் பாராளுமன்ற தேர்தல் வளர்ச்சி மிகவும் முக்கியம்.

பாராளுமன்ற தேர்தல் கட்சிகளின் நிலை
தேசிய கட்சிகள்
திரு.மோடி அவர்களை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பது பி.ஜே.பி.யின் கொள்கை. சில வாரங்களுக்கு முன் மோடி மற்றும் பி.ஜே.பி. பற்றிய கலைஞரின் கருத்து அரசியல் முக்கியத்துவமானது. கர்நாடகாவில் எடியூரப்பாவை ஏற்றுக் கொண்டது போல் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது எளிதன்று. பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தாலும் 3 – 4 இடங்களுக்கு மேல் வெல்ல முடியாது. தேர்தலுக்கு பின்பு கட்சிகள் வெல்லும் இடங்களை பொருத்தே திராவிட கட்சிகளுடனான உறவு தெரியும். பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் பா.ம.க. கட்சிகள் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.
காங்கிரஸை பொருத்தவரை 1971ம் ஆண்டிற்கு பிறகு தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயம். அனைத்து தலைவர்களுக்கும் போட்டி போட வாய்ப்பளித்து அவர்களின் சொந்த செல்வாக்கை பரிசோதிக்க நல்ல தருணம்.
மாற்று அரசியலை முன் வைக்கும் லோக்சத்தா மற்றும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சிகள் தமிழகத்தில் எண்ணிக்கையைத் தொடங்க நல்ல வாய்ப்பு. இவ்விரு கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் மாற்று அரசியலை எதிர்நோக்கும் தமிழக மக்களுக்கு நல்லதோர் தருணம்.

மாநில கட்சிகள்
நாற்பதும் நமதே என்ற கோசத்துடன் பிரதமர் பதவி கனவில் ஜெயலலிதா தேர்தலை சந்திக்கின்றார். கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4-5 இடம் தர வாய்ப்புள்ளது. தா. பாண்டியன் நிம்மதியடைவார். நாடாளுமன்ற தேர்தலில் இராஜ்யசபை கூட்டணி குறித்து பேசுவது தமிழக கட்சிகளின் மரபு 2004ல் பா.ம.க.வின் அன்புமணி. 2014ல் தே.மு.தி.க.வின் சுதிஸ்க்கு இராஜ்யசபை சீட்டை விட்டுக் கொடுப்பதின் மூலம் அதனுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. முயலும். அவ்வாறு தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமையும் பட்சத்தில் ஜெயலலிதாவிற்கு நல்ல போட்டியைத் தர முடியும்.
பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி. ஆரை மீண்டும் நினைத்துப் பார்க்க அரசியல் கட்சிகளுக்கு ஓர் வாய்ப்பு. மக்களுக்குத் தேவை தமிழக பிரச்சனைகளை டெல்லியில் போராடிப் பெருவதற்கு 40 நல்ல உறுப்பினர்களே.

– நாகராஜ் –

Categories: Uncategorized
Tags: , , , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: