முன்னேற்றத்தின் முன்னோடி எம்.எஸ். உதயமூர்த்தி

Thursday, February 20th, 2014 @ 12:47PM

மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்றால் ரொம்ப பேருக்கு தெரியாது. அதே நேரம் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்றால் எல்லோருக்குமே தெரியும். அவர் இறந்து (21.01.13) ஓராண்டாகிறது. சென்னை திருவான்மியூரில் கடந்த வருடம் அவர் இறந்த போது அவருக்கு வயது 80. ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர். செம்பனார் கோயில் பகுதிகளில் வற்றிய நீர்நிலைகளில் தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர்.

MSU_1தன் மூலம் சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள்  அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர். ரோட்டை சீரமைத்துக் கொண்டனர். கோவையில் வற்றிப்போய் பிளாஸ்டிக் எனும் விஷக்கிடங்காக மாறியிருந்த குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து தூர்வாரியதெல்லாம் இந்த மக்கள் சக்தி இயக்குனரின் கனவு மெய்ப்படலே.

எண்ணங்கள், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி, உயர் மனிதனை உருவாக்கும் சிந்தனைகள் , உன்னால் முடியும் தம்பி என்பது உள் ளிட்ட எத்தனையோ நூல்கள் எழுதி இளைஞர்களை நல்வழிப்படுத்தியவர். 25 ஆண்டு கால அமெரிக்க தொழில் அதிபர் வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு நாட்டு பற்று காரணமாக தாயகம் திரும்பியவர், நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்க செய்யலாம் என்று விரும்பியவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு கெஜ்ரிவால் போலவும், அன்னா ஹசாரே போலவும் தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர். ஆனால் இங்கு உள்ள அரசியல்வியாதிகளின் நரிதந்திரத்தின் காரணமாகவும், மூளை மழுங்கடிக்கப்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டார். இன்று உள்ள இந்த விழிப்புணர்வு அன்று இருந்திருந்தால் இவருக்குப் பின்னால் தமிழகம் அணி திரண்டிருக்கும். நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று நம்பியவர். இளைஞர்களை தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த எழுத்து மூலமும், பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள்  பாராட்டுக்குரியவை. பல சுயமுன்னேற்ற நூலாசிரியர்களுக்கு சந்தேகமே இல்லாமல் இவரே முன்னோடியாவார். “ஐயாவின் நூல்தான் என்னை வழிநடத்தியவை’ என்று இன்றைக்கும் பலர் நெஞ்சார கூறுவதை கேட்க முடியும்.

இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால் உன்னால் முடியும் தம்பி என்கிற படத்தை எடுத்ததுடன் படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றும் பெயரிட்டார். எம்.ஜி.ஆரால் அழைத்து பாராட்டப் பெற்றவர். தமிழக அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.

அன்பானவர், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர். மதுரை மத்திய தொகுதியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் வேட்பாளராக நின்ற போது இவரது தேர்தல் பிரச்சாரத்தை பற்றிய செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அப்போது அவரது ஜீப்பிலேயே என்னையும் ஏற்றிக் கொண்டு ஒரு நாள்  முழுவதும் பயணித்தவர். “என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆகவே மக்கள் பணத்தை தொடமாட்டேன், என்னிடம் உள்ள ஆற்றலை அறிவை உங்களுக்கு செலவிட சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் தேவை. என்னைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற குரலை வலுப்படுத்துகிறீர்கள். என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம் இந்த நாட்டிற்கு பல நல்ல இளைஞர்கள் வருவதற்கான பாதையை அமைத்து தருகிறீர்கள்” என்று இயல்பாக பேசினார். ஒரு நல்லவர், வல்லவர் அரசியலில் கலந்து கெட்டு போய்விடக் கூடாது என்று மக்கள் நினைத்ததாலோ என்னவோ அவரால் அந்த தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை.

ஆனாலும் தோற்ற பின் முதல் ஆளாக தொகுதியில் வலம் வந்து நன்றி கூறினார். இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது சிந்தனைகளும், எழுத்துக்களும் நம்மோடுதான் இருக்கிறது. இயக்குகிறது. டாக்டர் எஸ்.எம். உதயமூர்த்தியின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் இன்றைக்கும், என்றைக்கும்.

– எல்.முருகராஜ், நன்றி : தினமலர்.

Categories: Article, January 2014, Whistle
Tags: , , ,

2 Comments to "முன்னேற்றத்தின் முன்னோடி எம்.எஸ். உதயமூர்த்தி" add comment
sendhil
February 20, 2014 at 1:10 pm

how you are all connected with Dr.MS

M.Madan Mohan
June 21, 2014 at 3:38 pm

He is not Su initial he is See iniital please change sir.

Leave a Reply

%d bloggers like this: