ரேடியாலஜிஸ்ட் இல்லாததால் அலைக்கழிக்கப்படும் கர்ப்பிணிகள்

Wednesday, February 19th, 2014 @ 12:49PM

ராயபுரம், வண்ணாரப்பேட்டை சிமிட்ரி சாலையில் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு, சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கர்ப்பிணிகள் கருத்தடை, கர்ப்பப்பை கட்டி சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர். சுமார் 300 பேர் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 4 ஸ்கேன் கருவி உள்ளது. அப்படியிருந்தும், இங்கு குழந்தை பெற்ற பெண்கள், சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்ட பெண்கள் ஸ்கேன் எடுப்பதற்காக, ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கே அவர்களை விட்டுவிட்டு, ஆம்புலன்ஸ் மீண்டும் திரும்பி வந்துவிடும்.

அங்கு, மற்ற நோய்களுக்காக ஸ்கேன் எடுக்க வருபவர்களுடன் சேர்ந்து இந்த பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு செல்ல எல்லோரும் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை 8 மணிக்கு செல்பவர்கள் 11 மணி வரை அங்கே காத்திருப்பார்கள். இந்த பெண்களை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் 12 மணியளவில் சென்று அவர்களை அழைத்து வருகிறது. குழந்தை பெற்ற பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும் வெயிலில் ஆம்புலன்சுக்காக வெளியே காத்திருக்கின்றனர். இதில் அவர்கள் சோர்வடைகின்றனர். சிலர் மருத்துவமனை வளாகத்தில் மயங்கி விழும் அவல நிலையும் ஏற்படுகிறது. ஸ்கேன் எடுக்கும் பெண்கள் எதுவும் சாப்பிடாமல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற சமயத்தில் கர்ப்பிணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இது குறித்து ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, ரேடியாலஜிஸ்ட் பதவிக்கு ஆட்களை நியமிக்கவில்லை. இதனால், இங்குள்ள கருவி அப்படியே உள்ளது. இது குறித்து மேலிடத்துக்கு பலமுறை தெரிவித்துவிட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றார். எனவே ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்ட் பதவிக்கு ஊழியரை நியமிக்க மாநில சுகாதாரத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவ காப்பீட்டுத்திட்டம் வழங்குகிற அரசு மருத்துவமனைக்கு போதுமான அளவு பணியாளர்களை நியமிக்காதது ஏனோ?

Categories: Uncategorized
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: