லோக்சத்தாவின் பயணம்…

Tuesday, February 18th, 2014 @ 9:56AM

3 ஜனவரி 2014 அன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து லோக்சத்தா கட்சி (தமிழக கிளை) மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கு முன்னர் மக்கள் சக்தி என்ற பெயரில் இயங்கி தேர்தல்களில் பங்கெடுத்திருந்தாலும், லோக்சத்தா கட்சியாக செயல்பட துவங்கியது ஜனவரி 3, 2012 முதல்தான்.

முதல் வருடம் முழுக்க கட்சி கட்டமைப்பிற்காக உழைத்தோம். அணியினரை புரிந்து கொண்டோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் சந்தித்தோம். அந்த ஆண்டிற்கான தொலைநோக்கு திட்டம் உருவாக்கினோம். கோவை, திருப்பூர், சென்னை என மூன்று மாவட்டங்களையும் உருவாக்கினோம். விசில் இதழ் துவக்கி இணைய வெளியீடாக கொண்டு வந்தோம். சட்டமன்ற நேரடி ஒளிபரப்பிற்கு போராடினோம். ஆட்டோ மீட்டர் பிரச்சனையை கையிலெடுத்து கால்கடுக்க நின்றோம். நிதி ஆதாரம் உருவாக்கி சொந்த கால்களில் நின்றோம்.

இரண்டாம் ஆண்டு கட்சியின் முக்கிய கொள்கையான உட்கட்சி தேர்தலை நடத்தினோம். சென்ற வருடத்திற்கான தொலைநோக்குத் திட்டம் நான்கு அம்சங்களை கொண்டது.

1) மக்கள் சேவை முகாம்கள், 2) சேவை பெறும் உரிமை, லோக் ஆயுக்தா, 3) தீவிர மதுக்கட்டுப்பாடு, 4) ஏழு மாவட்டங்களில் கட்டமைத்தல்.
இதுவரை சென்னையில் மட்டும் 15 மக்கள் சேவை முகாம்கள் பல்வேறு பகுதிகளின் நடத்தியுள்ளோம். சேவை பெறும் உரிமைக்கு நாங்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை சிறப்பான பலன் தந்துள்ளது. (வலிமையான) லோக் ஆயுக்தாவிற்கான வேலைகளும் சரியாக நடைபெற்று வருகிறது. மைலாப்பூர், ஊரப்பாக்கம் கடைகளில் எங்களுடைய பங்களிப்பு தீவிர மதுக்கட்டுப்பாட்டிற்கான சாட்சிகள். (அதே சமயம் இன்னும் நிறைய இது போன்ற கடைகளை நாங்கள் ஒழிக்க வேண்டும்). பெரும் களப்பணிகளில் இருந்திருக்கிறோம் என்ற நிறைவு நிச்சயம் உள்ளது.

உறுப்பினர் சேர்க்கையும், மாவட்ட கட்டமைப்பும் இந்த வருடம் சவால் நிறைந்ததாக இருந்து வருகிறது. இரண்டிற்கும் ஒரு நேர்மையான முயற்சி தொடர்ந்து நடந்துவருகிறது.

பெரும்பான்மையான ஊடகங்கள் லோக்சத்தாவின் கருத்துக்களை கேட்க துவங்கியுள்ளனர். ஊடகங்கள் மத்தியில் நம்மை பற்றிய புரிதல் துவங்கியுள்ளது.

இவையாவும் நடைபெற்று லோக்சத்தா கட்சி தொடர்ந்து பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட, பலர் உழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து உழைக்கின்றனர். தன்னுடைய பணத்தையும் நன்கொடையாக வழங்கி, தன்னுடைய நேரத்தையும் தாராளமாக தந்து உறுப்பினர் சேர்க்கை குறைவாக இருப்பதற்கு தான் மட்டுமே காரணம் என்று சொல்லும் 70 வயது இளைஞர் ஒரு பக்கம் என்றால், எவ்வளவு வேலைக்கு இடையிலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியாக கருத்து சொல்லும் (கட்சி செயல்பாடு பற்றியதாக இருக்கட்டும், ஒரு பிரச்னைக்காக நிலைப்பாடாக இருக்கட்டும்) மற்றொரு 25 வயது பக்குவப்பட்ட ‘மூத்தவர்’ இன்னொரு பக்கம்.

இவர்களைத் தாண்டி எத்தனையோ ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டர்கள், தலைவர்கள், ஊடக நண்பர்கள், பணியளார்கள் என்று பலர் எங்களை தொடர்ந்து வாழ்த்தி வாழ வைக்கிறார்கள். அவர்கள் யாவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. நன்றி – நல்ல அரசியலுக்கு விதை தூவியவர்கள் நாம். நாளை விருட்சமாவோம்.

Loksatta Payanam

 

ஆம் ஆத்மி வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து முன் வைக்கப்படும் கேள்வி இது. “உங்களால் ஏன் அவர்கள் போல் ஜெயிக்க முடியவில்லை?”. கேட்பவர்களில் பலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகட்டும் இல்லை அன்னா ஹசாரே ஆகட்டும் இவர்கள் இருவரும் ஒரே இரவில் வெற்றி பெற்றவர்களாக நினைத்துக் கொள்கிறோம். அவர்கள் இருவருக்கும் பின்னால் இருக்கும் உழைப்பை வசதியாக மறந்து விடுகிறோம்.

ஒவ்வொரு வெற்றிக்கும் பின் ஒரு மாபெரும் உழைப்பு, ஒரு படிப்பினை, ஒரு அனுபவம், ஒரு அறிவு என பல ‘ஒரு’க்கள் உள்ளன. ஒவ்வொரு தேசிய, மாநில சமூக பிரச்னைக்கும் ஒரு புரிதல் தேவை. களப்பணி செய்யவும் ஒரு புரிதல் தேவை. இரண்டிற்குமான அறிவும் மிக அவசியம்.

இன்று லோக் சத்தா கட்சியில் 90% மக்கள் பிரச்னைகளுக்கு தேசிய, மாநில பிரச்னைகளுக்கு மட்டும் நம்மிடம் ஒரு நிலைப்பாடு உள்ளது. சில பிரச்னைகளைப் பற்றி எங்களுக்குள் பெரிதாக விவாதம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் லோக்சத்தா தொண்டனாக அதற்கான நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற ஒரு அலைவரிசை எங்களுக்குள் உள்ளது. (கடந்த 2 ஆண்டுகளின் அனுபவம் இது).

இதைத் தாண்டி எழுச்சிமிக்க தலைவர்கள் ஒரு கட்சிக்கு நிறைய தேவை. தமிழகத்தை பொறுத்த வரை அதற்கான நேர்மையும், உழைப்பும் உள்ளது. இன்னுமொரு 3,4 வருடங்களில் இன்றைய பொறுப்பாளர்கள் பலரும், தமிழகத்தின் தலைவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

முதல் இரண்டு ஆண்டுகளில் எங்களுடைய தொலைநோக்கு திட்டத்தை செவ்வனே நிறைவேற்றியுள்ளோம். வரும் நாட்களில் எங்களுடைய திட்டம் இதனை நோக்கியே இருக்கும். புதிய அரசியலுக்கு தேவை உள்ளூர் சாதனையாளன். இதுவே பெரும்பான்மையான மக்கள் விரும்பும் வெற்றியை தரும் என எண்ணுகிறோம். தொடர்ந்து உழைப்போம் நாட்டிற்கும், கட்சிக்கும்.

– தெ.ஜெகதீஸ்வரன் –

Categories: Article, January 2014, Whistle
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: