கல்வி உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு – தேர்தல் நடத்தை விதிமுறை தடையல்ல
Tuesday, May 6th, 2014 @ 9:32PM
கல்வி உரிமை சட்டத்தை பற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டாமல் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டுமென்று லோக்சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

Image courtesy: http://www.youspeakindia.org/
முன்னதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதா அவர்களை சந்தித்து, கல்வி உரிமை சட்டத்தில் உள்ள பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் திரு. ‘பாடம்’ நாராயணன் அவர்கள் தலைமயிலான சமூக ஆர்வலர் குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சிறப்பு தேர்தல் ஆணையர் திரு. கார்த்திக் அவர்களை தமிழக லோக்சத்தாவின் மாநில தலைவர் திரு. பழனிகுமார் அவர்களும் பொதுச் செயலாளர் திரு. ஜெகதீஸ்வரன் அவர்களும் இன்று சந்தித்தனர். சிறப்பு தேர்தல் ஆணையர் தமிழத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டு விட்டதென்றும், கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தடை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டாமல் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டுமென்று லோக்சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.
அதே போல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை அரசாங்கம் இன்னும் அந்த பள்ளிகளுக்கு வழங்காததால், தனியார் பள்ளிகள் இந்த வருடம் 25% இடஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கின்றன. இது குறித்து அரசிடமிருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை இல்லை. இரண்டு ஆண்டுகளாக அரசு இதை கண்டுகொள்ளாதது அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள நிலுவைத் தொகை 25 கோடி ரூபாய் ஆகும். இலவசங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்யும் அரசு, மக்களின் அடிப்படை தேவையான கல்விக்கு இந்த தொகையை செலவு செய்யாமல் இருப்பது இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது.
இனியும் காலம் தாமதிக்காமல் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென்று லோக்சத்தா கட்சி கோருகிறது. கல்வி அளவீடுகளில் உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மோசமான நிலையில் இருக்கும் தமிழகத்தின் நிலையுணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இத்துடன் தேர்தல் ஆணையருக்கு கொடுத்த மனுவை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
Categories: Press Releases
Tags: election, RTE, Tamil Nadu