வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து – தமிழகத்திற்கு அடுத்து என்ன?

Friday, May 16th, 2014 @ 8:53PM

​நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாரதீய ஜனதா கட்சிக்கும், தமிழக அளவில் அதிக இடங்களில் வென்ற அதிமுகவிற்கும், நேர்மையான அரசியல் மூலம் பாராளுமன்றத்தில் தடம் பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து வேர்பாளர்களுக்கும் லோக்சத்தா கட்சி தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

தமிழகத்தில் அதிக இடங்களில் அதிமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில், மாநிலம் மற்றும் உள்ளாட்சி ஆகிய மூன்று இடங்களிலும் அதிக பெரும்பான்மையோடு மக்கள் தங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இதனை நல்ல முறையில் பயன்படுத்தி சில முக்கிய தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வாய்ப்பாக அதிமுக இதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

முதலாவதாக தண்ணீர் பிரச்சனை. தமிழகத்தின் பல மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்ட நிலமாக மாறிவருகிறது. மத்திய ஆட்சி அமைக்கும் புதிய அரசோடு பேசி காவிரி பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதே சமயம் தமிழகத்தில் வெகு காலமாக தூர் வாராமல் இருக்கும் நீர்நிலைகளை தூர்வாருவதும், தேவைக்கு ஏற்ப ஆற்று மணலை பயன்படுத்தி, அதிக அளவில் அது கொள்ளை போவதையும் தடுக்க வேண்டும்.

அடுத்ததாக தமிழக மீனவர் பிரச்சனைக்கும் ஒரு நிரந்தர தீர்வு காண தக்க சமயம் இது. இந்திய இலங்கை மீனவர்கள் சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. எல்லை தாண்டி சென்று நம்மவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க, ஆழ் கடல் மீன் பிடிப்பிற்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு பங்கு நிதியும், மாநில அரசு ஒரு பங்கு நிதியும் கொண்டு மீனவர்களுக்கு மானிய விலையில் ஆழ் கடல் மீன்பிடிப்பிற்கான விசை படகுகள் வழங்கலாம். லோக்சத்தா தன்னுடைய தேர்தல் அறிக்கையிலும் இதை முக்கிய வாக்குறுதியாக தந்தது.

மூன்றாவதாக தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை தீர்க தென்னிந்தியாவிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்குமான மின்தடத்தை வலுப்படுத்தி அதன் திறனை அதிகரிக்க வேண்டும். சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள தமிழகத்தின் நிலக்கரி சுரங்கங்களை வெட்டி எடுக்கும் பணிகளை துரிதமாக்கி, வெளி நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை துவங்க வேண்டும்.

மிக முக்கியமாக அரசு அலுவலகங்களில் மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்காக அல்லல்படும் நிலை மாற ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை நம் மாநிலத்திலும் , இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரவும் குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பான ஒரு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே போல் ஊழலை ஒழிக்க வலுவான லோக்ஆயுக்தாவையும் விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.​

Categories: Elections, MP election 2014, Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: