“அம்மா உப்பு” திட்டத்தை லோக்சத்தா கண்டிக்கிறது – அரசாங்கம் தொழில் நடத்துவதிலிருந்து ஒதுங்கி சுதந்திர சந்தையை ஊக்கப்படுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும்

Thursday, June 12th, 2014 @ 3:09PM

மலிவு விலை உப்பு விற்பனை என்னும் தமிழக அரசின் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது. அரசாங்கமே தொடர்ந்து இதுபோன்று தொழில்களில் ஈடுபடுவதால், அரசாங்கம் தனது அடிப்படை பணியான அரசு நிர்வாகத்திலிருந்து விலகிச் செல்வதாக லோக்சத்தா கருதுகிறது.

Image courtesy: Indian Express

மலிவுவிலை உணவகம், திரையரங்கு, காய்கறியை தொடர்ந்து தற்போது உப்பு விற்பனையில் ஆளும் அ.தி.மு.க அரசு இறங்கியிருப்பது தொழில்களை, சந்தையை அழிக்கும் முயற்சியாகும். ஏற்கனவே ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்காக அரசே கேபிள் டிவி ஒளிபரப்பு மற்றும் பகிர்மான உரிமையை தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்மாதிரியான திட்டங்கள் ஏழைகளுக்கு உண்மையில் பயனளிக்காது. மாறாக வெறும் அர்த்தமற்ற மேலோட்டமான திட்டங்களேயாகும். இம்மாதிரியான ‘அம்மா’ திட்டங்கள் இலவசங்கள் போலவே தேர்தலை மனதில் கொண்டு செயல்படுத்தும் வெறும் கவன ஈர்ப்பு திட்டங்களே ஆகும். இத்திட்டங்களினால் மிகக்குறைந்த அளவிலான ஏழை மக்களே பயன்பெற்றுள்ள நிலையில் ஏழை அல்லாத பெரும்பாண்மை மக்களே இதன் பயன்களை அனுபவித்து வருகின்றனர். உண்மையில் ஊழல், அரசு சேவைகளுக்கு லஞ்சம், திறனற்ற காவல் மற்றும் நீதித்துறை, சுகாதாரம் மற்றும் கழிப்பிட வசதிகள் குறைபாடு, தரமற்ற கல்வி மற்றும் மருத்துவம், மோசமான பொதுப்போக்குவரத்து வசதிகள், தண்ணீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு, உள்ளிட்டவையே ஏழைகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஆகும். இம்மாதியான குறைபாடுகளை வார்த்தை ஜாலங்களை கொண்டு மூடிவிட்டு அதை மறைப்பதற்காக மட்டுமே இம்மாதிரியான கவர்ச்சி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவருவதாக லோக்சத்தா கட்சி கருதுகிறது.

இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக மட்டும் தமிழக அரசு ஆண்டொன்றுக்கு ரூ.45,000 கோடி செலவழித்து வருகிறது. இதில் தேவையில்லாமல் செலவிடப்படும் தொகையைக் கொண்டு அரசு நிர்வாகத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். ‘சுதந்திர சந்தை’ கொள்கைக்கு எதிரான இந்த மானியங்களால் அரசே நடத்தும் தொழில்ககளைக் காட்டிலும் தனியார்களால் இன்னும் சிறப்பாக இதை செய்ய இயலும். விலையேற்றத்திற்கும், பணவீக்கதிற்கும் காரணம் இன்று வர்த்தகத்தில் இருக்கும் அரசியல் தலையீடுகள், அதிகமான கட்டுப்பாடுகள், திறனில்லாத சட்ட அமலாக்கல், காலாவதியான சட்டதிட்டங்கள், சட்டத்திற்கு புறம்பான ஏகபோகங்கள், சிபாரிசுகள் மற்றும் சிக்கலான அதிகாரத்துவ தடைகள் முதலியவையே ஆகும்.

அரசாங்கம் திறமையாக ஒழுங்குப்படுத்தும் வேலைகளில் மட்டும் ஈடுபட்டு, வர்த்தகதிலிருந்து விலகி அரசு நிர்வகாத்தில் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை, நீதித்துறை சீர்திருத்தங்கள் மூலம் திறம்பட சட்டங்களை அமல்படுத்தியும், ‘சேவை பெறும் உரிமை’ சட்டமியற்றி அனைத்து மட்டத்திலும் அரசு அலுவலக நடைமுறைகளை எளிதாக்கி சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்க தமிழக அரசு முற்பட வேண்டும் என லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: