நேற்று தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை லோக் சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது

Monday, September 29th, 2014 @ 9:23AM

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு பெங்களுரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் தண்டனை காரணமாக தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை லோக் சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அதை தடுக்கத் தவறிய காவல்துறையை கண்டிப்பதோடு, இனியும் தாமதிக்காமல் கலவரத்தில் ஈடுபட்டோரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் கோருகிறது.

மேலும் இது குறித்து லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் திரு.பழனி குமார் அவர்கள் கூறியதாவது:

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற தண்டனைக்காக மக்களை துன்பப்படுத்துதல் கூடாது.

  1. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கோப்புகள் மற்றும் அரசின் திட்டங்கள், அரசின் இலவச பொருட்கள் அனைத்திலிருந்தும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் நீக்கப்பட வேண்டும்.
  2. இந்த வழக்கு முடிவுகளின் சாதக பாதகங்களை உணர்ந்து தமிழக காவல்துறை சனிக்கிழமை மதியமே ரௌடிகளை கைது செய்திருக்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற சமயங்களில் காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஆயத்தமாக இருக்க வேண்டும்.
  3. இது போல் கலவரங்கள் நடக்கும் முன் நடவடிக்கையாக டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்.
  4. ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை விரைந்து விசாரிக்க ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
  5. இது போன்ற பெரும் அளவிலான ஊழல் வழக்குகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் வாதிகளை விசாரிக்க ‘சிறப்பு நீதிமன்றங்கள்’ மற்றும் வழக்குகளை விரைந்து முடிக்க நீதித்துறை சீர்த்திருத்தங்கள் வேண்டும்.
  6. மேலை நாடுகளிலும், இந்தியாவில் இருக்கும் சில தேசிய கட்சிகளிலும் குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்ட உறுப்பினர்களின் மீது நடவடிக்கையும், அவர்களை கட்சியை விட்டு விலக்கும் நடவடிக்கையும் நடைமுறையில் உள்ளது. அதுபோல் இங்கும் ஏற்பட வேண்டும்.
  7. ஊடகங்களில் செல்வி. ஜெயலலிதாவின் வழக்கு குறித்தும், தீர்ப்பு குறித்தும் செய்திகள் வந்தாலே அரசு கேபிளில் அவை நிறுத்தப்படுவது ஊடகத்தின் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். குறிப்பாக தந்தி, புதிய தலைமுறை, சன் நியுஸ் மற்றும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிகள் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றன. இது அரசு கேபிள் எவ்வாறு அரசின் ஏவலாக செயல்படுகிறது என்பதற்கு சாட்சி. ஊடக சுதந்திரத்தை காக்க அரசு கேபிள் தொழிலை கைவிட வேண்டும்.
  8. அதே போல் நேற்று மதியத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. இதற்கு என்ன காரணம் என்று மின்சார வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும்.
  9. நீதித்துறை சரியாக செயல்படும் இந்த நேரத்தில் காவல்துறை தன் கடமையை செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அரசு இயந்திரத்தின் மிக முக்கியமான பணியான சட்ட ஒழுங்கை பாதுகாத்தலை, ஆளுங்கட்சியின் வற்புறுத்தல் உட்பட எந்த காரணத்திற்காகவும், காவல்துறை செய்யத் தவறக்கூடாது.
  10. மேலும் தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை ரவுடிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை தடுக்க சேதமான பொது சொத்துகளுக்கு அவர்களிடமிருந்தே நஷ்ட ஈடு பெறப்பட வேண்டும். மேலும் தனியாக செய்தாலும் சரி கூட்டமாக செய்தாலும் சரி, இது போன்று பொறுக்கித்தனத்தில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் அனைவர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திரு.பழனி குமார் அவர்கள் தெரிவித்தார்.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: