செல்வி ஜெயலலிதாவிற்கு ஆடம்பர வரவேற்பு – லோக் சத்தா கட்சி கண்டனம்
Tuesday, October 21st, 2014 @ 10:54AM
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக முதலவர், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் ஆகியோர் அளித்த ஆடம்பர வரவேற்பு மற்றும் மத்திய அமைச்சர் திருமதி.மேனகா காந்தியின் வரவேற்புச் செய்தி ஆகியவற்றை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது.
இதே போல் 2ஜி அலைக்கற்றை மோசடி வழக்கில் திரு. ஆ. ராசா மற்றும் திருமதி. கனிமொழி ஆகியோர் ஜாமீனில் வெளி வந்த போது அளிக்கப்பட்ட ஆடம்பர வரவேற்பை இங்கே நினைவுகூற விரும்புகிறோம். இது போன்ற சூழ்நிலைகளில் கட்சித் தொண்டர்கள் உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கட்சித் தலைவர்கள் நாட்டுக்காக பாடுபட்டு சிறை செல்லவில்லை, தங்கள் சுயலாபத்துக்காக குற்றம் புரிந்து சிறை சென்றிருக்கிறார்கள் என்பதை தொண்டர்கள் உணரவேண்டும்.
மேலும் இது போல குற்றவாளிகளை கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தின் தார்மீக விழுமியங்களை வெகுவாக பாதிக்கும். நம் அடுத்த தலைமுறையினருக்கு தேசத்துக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர்களை முன்னுதாரணம் காட்டாமல் இது போன்ற குற்றவாளித் தலைவர்களை முன்னுதாரணம் காட்ட வேண்டிய சூழல் உருவாகும்.
மேலும் செல்வி. ஜெயலலிதாவை சிறையிலிருந்து விடிவிக்கக்கோரி தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்திற்கு பகிரங்கமாக நிவாரணம் அளித்தது தவறான முன்னுதாரணம். பரிதாபத்தின் காரணமாக இழப்பீடு வழங்குவதாக இருந்தால் ஊடகங்களுக்கு அறிவிக்காமல், பிறருக்கு தெரியாத வண்ணம் கொடுத்திருக்கலாம். இவ்வாறு வெளிப்படையாக நிவாரணம் அளிப்பது பிற்காலத்தில் இது போன்ற சூழ்நிலைகளில் தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வதை தூண்டுவதாக அமையும்.
நியாயமான கோரிக்கைகளுக்கு மனித சங்கிலி போன்ற அகிம்சை முறையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யும் காவல்துறை, இது போல பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாறு நேற்று கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தது. காவல்துறையின் இந்தப் போக்கை கண்டிப்பதுடன், நேற்று அனுமதியின்றி நகரின் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவுகளில் வரவேற்பு பதாகைகள் வைத்தோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லோக் சத்தா கட்சி கோருகிறது.
Categories: Press Releases
Tags: ADMK, corruption, jayalalitha, JayaVerdict