தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி உண்ணாநிலைப் போராட்டம்

Monday, November 17th, 2014 @ 12:10PM

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா கட்சி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தியது.

RTS fast 4

இந்த சட்டத்திற்காக லோக் சத்தா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதுவரை அதற்காக கையெழுத்து முகாம்கள், விழுப்புணர்வு நடைபயணம், தமிழகம் முழுவதும் பைக் யாத்திரை, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை தொடர்ந்து இப்போது உண்ணாநிலைப் போராட்டம்.

சேவை பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன?

அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து (உதாரணமாக ரேஷன் கார்டு 30 நாட்கள், புதிய மின் இணைப்பு 7 நாட்கள்), அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சேவை வழங்கப்படாவிடில் அதை செய்யத் தவறிய அரசு அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு நிவாரணமாக வழங்கப்படும். இதனால் அரசு சேவைகள் விரைந்து கிடைப்பதோடு லஞ்சமும் பெருமளவில் குறையும்.

​லோக் சத்தாவின் கோரிக்கைகைகள்

  1. குடிமக்கள் சாசனம் ஏற்கனவே இருக்கும் அரசு துறைகளின் அலுவலகங்களில் அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
  2. குடிமக்கள் சாசனம் ஏற்படுத்தப்படாத அரசு சேவைகளுக்கு படிப்படியாக குடிமக்கள் சாசனம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  3. குடிமக்கள் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘கால நிர்ணயம்’ பின்பற்றப்பட வேண்டும்.
  4. சட்டத்திற்கு உட்பட்டு, மக்களுக்கு உரிமையாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்
  5. அவை பின்பற்றப்படாத பட்சத்தில், நிர்ணயித்த காலத்திற்குள் சேவை வழங்காத அதிகாரியின் மீது புகார் தெரிவிக்க மேல் முறையீட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  6. வழங்கப்பட்ட புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு, சேவை குறைபாடு ஏற்படும்பொழுது, அதற்கு தக்க இழப்பீட்டை பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
  7. சிறப்பாக செயல்படும் அரசு அதிகாரிக்கு பரிசு, பாராட்டு வழங்கப்பட வேண்டும்.
  8. அரசு சேவைகள் யாவும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  9. இவற்றை வலியுறுத்தும், 16 மாநிலங்களில் அமுலில் இருக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமுல்படுத்த வேண்டும்.

இந்த போராட்டத்தில் ஊழல் ஒழிப்பு இயக்கம் திரு. S.M. அரசு, சட்ட பஞ்சாயத்து இயக்கம் தலைவர் திரு. சிவ இளங்கோ மற்றும் திரு. செந்தில் ஆறுமுகம், நல்லோர் வட்டம் திரு. பாலு, திரைப்பட இயக்குனர் திரு. மனுக்கண்ணன், கூடங்குளம் போராட்ட குழு உறுப்பினர் திரு. முகிலன், சென்செய் திரு. மோகன், ​ஆம் ஆத்மி கட்சியின் திரு. ஜெயராம், திரு. ‘பாடம்’ நாராயணன் மற்றும் லோக்பால் கூட்டமைப்பை சேர்ந்த திரு. நட்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்திற்கு லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. சுரேந்திரா ஸ்ரீவத்சவா அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்த லோக் சத்தாவின் நிறுவனர் தலைவர்
டாக்டர் ஜே. பி “லோக் சத்தாவின் தமிழக கிளைக்கு என் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வருடம் முன்பு இதற்காக சென்னையில் நடந்த கூட்டம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.

வருமான வரி செலுத்தும் சாமானிய மனிதர்களான நமக்கு அரசின் சேவைகளை லஞ்சம் கொடுக்காமல் தாமதம் இல்லாமல் பெற உரிமை உள்ளது.

பெரும்பாலான நாடுகளில் தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு, குப்பையை அப்புறப்படுத்தல் போன்ற சாதாரண சேவைகள் கூட மிக எளிதாக கிடைக்கிறது. இந்தியாவில் நாம் இவற்றுக்கே பெறும் பாடுபட வேண்டியுள்ளது.

ஆந்திராவின் நகராட்சிகளில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் குடிமக்கள் சாசனத்தை பதிப்பித்த சாதனையை லோக் சத்தா செய்தது. இப்போது நாம் தயார் செய்திருக்கும் சட்ட வரைவை அனைத்து மாநிலங்களிலும் அமலாக்க வேண்டும்.

அரசு சேவைகள் எந்தத் தடையும் இன்றி கிடைத்தால், மக்களின் வாழ்வு மேன்மை அடையும், ஊழல் குறையும், அரசியல் சீரடையும்” என்று தெரிவித்தார்.

லோக் சத்தாவின் தமிழக தலைவர் திரு. பழனி குமார் அவர்கள் “இந்த உண்ணாநிலை போராட்டம் ஒரு ஆரம்பம் தான். எங்கள் கட்சி தலைவர்கள் திரு. ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர் தமிழகம் முழுதும் பைக் பயணம் செய்து இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இது போன்று சேவை பெறும் உரிமை சட்டத்திற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.” என்று கூறினார்.

புகைப்படங்கள்: https://www.facebook.com/media/set/?set=a.809402672450279.1073741861.150786351645251&type=1

Categories: Press Releases
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: