உலக கழிவறை நாள் – திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராமத்திற்கு ஊக்கத் தொகை

Wednesday, November 19th, 2014 @ 9:50PM

2001 ஆம் ஆண்டு முதல் உலக கழிவறை தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டில் சுகாதார குறைபாடுகளால் மட்டும் ஒரு தினத்தில் உலகம் முழுக்க 1000 குழந்தைகள் வரை இறந்ததாக உலக கழிவறை அமைப்பு தெரிவிக்கிறது. பெண் குழந்தைகளின் பள்ளி வருகை குறைவதற்கு முக்கிய காரணமாக சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிவறை இல்லாதது ஒரு முக்கிய காரணமாகிறது. நிர்ணயிக்கப்பட்ட “புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளில்” சுகாதாரத் துறையில் நாம் இதுவரை அறவே முன்னேற்றம் காணாமல் இருக்கிறோம். உலகத்தில் 15% மக்கள் இன்னும் திறந்தவெளியில்தான் கழிக்கிறார்கள். சுகாதாரத்திற்கு நாம் செலவு செய்யும் 1 டாலர் நமக்கு 8$ அளவுக்கான நன்மைகளை பயக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

WTD_logo_En1

இந்தியாவை பொறுத்தவரை, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில், கிராமப்புற சுகாதாரம் குறித்த அறிக்கையில், “கழிப்பறைகள் இல்லாத வீடுகளையும், பொது இடங்களில் இருக்கும் குப்பைகளையும் நாம் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. சுகாதாரம், கழிவு மேலாண்மை மற்றும் துப்புரவு ஆகியவற்றை நாடு முழுதும் உறுதிப்படுத்த, “ஸ்வாச் பாரத் மிஷன்” தொடங்கப்படும். 2019 ல் கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்திற்கு நமது அஞ்சலியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனை வரவேற்று பேசிய அன்றைய தமிழக முதல்வர், “2015 ஆண்டிற்குள் தமிழகத்தில் திறந்த வெளி கழிப்பிடமே இருக்காது என்ற எங்களின் சவாலான இலக்கை அடைய, எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க இந்திய அரசின் ஆதரவை எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

“சேவை பெறும் உரிமை சட்டத்தை” வலியுறுத்தி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகம் முழுக்க பைக் பயணம் சென்ற லோக்சத்தா கட்சியின் தலைவர்கள் ஜெகதீஸ் மற்றும் ஜெய்கணேஷ் ஒவ்வொரு இரவும் ஏதாவது ஒரு கிராமத்தில் தங்கி அந்த கிராமத்து பிரச்சனைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உறுதிபூண்டனர்.

இது பற்றி திரு. ஜெகதீஸ் அவர்கள் கூறுகையில் “கிராமங்களில் நாங்கள் கண்ட சுகாதார சீர்கேடு அதிர்ச்சிதரக் கூடியதாக இருந்தது. சென்னையிலிருந்து வெறும் 60 கி.மீல் காஞ்சிபுரத்தில் இருக்கும் புதுப்பாக்கம் என்னும் கிராமத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இருந்தாலும் துளியளவு கூட பராமரிப்பு இன்றி அது உபயோகிக்கும் படியாக இல்லை. கிராமத்தில் உள்ள அனைவரும் திறந்தவெளியில்தான் மலம் கழித்தனர். அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் தாலுக்காவில் இருந்த வள்ளிபுரம் என்னும் கிராமத்திலும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இருந்தாலும் தண்ணீர் குழாய்கள் இன்றியும் கழிப்பிடம் பயன்படுத்த சிரமமாக மிகச் சிறிய இடத்துடனும் அதுவும் உபயோகிக்கும் படியாக இல்லை. நாங்கள் அடுத்து சென்றது விழுப்புரம் மாவட்டம் கிள்ளியூர் கிராமம். அங்கே இருந்த கழிப்பிடம் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும் யாரும் உபயோக படுத்த முடியாதவாறு பூட்டி இருந்தது. அடுத்து நாங்கள் சென்ற கடலூர் மாவட்டம் கிள்ளை என்ற மீனவ கிராமத்தில் கழிப்பிடமே கிடையாது. நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமத்திலும் அதே நிலைமைதான்.”

மேலும் எங்கள் பயணத்தின் போது நாங்கள் சென்ற கிராமங்களில் மக்கள் திறந்த வெளியிலேயே மலம் கழித்தனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என்ற பாகுபாடே இல்லை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் அரசாங்கம் கழிப்பிட பாராமரிப்பை மேற்கொள்வதே இல்லை, கழிப்பிட கட்டுவதில் பெருமளவு ஊழல் மற்றும் தண்ணீர் பஞ்சம் பிரச்னை ஆகியன.” இவ்வாறு திரு, ஜெகதீஸ் கூறினார்.

அரசாங்க புள்ளிவிவரப்படி அரசு கழிப்பிடம் கட்டுதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இதுவரை ரூபாய் 500 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது.

உண்மை நிலைமை இப்படி இருக்கும் போது 2015-குள் திறந்த வெளி மலம் கழித்தலே இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே குறிக்கோள் என்பது நடக்காத காரியம்.

கடைசியாக நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் 53.2% வீடுகளில் செல்ஃபோன் இருப்பதும், வெறும் 46.9% மக்கள் வீட்டில் மட்டுமே கழிப்பிடம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் 49.8% மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதும், வெறும் 3.2% மக்களே பொது கழிப்பிடம் பயன் படுத்துவதும் தெரியவந்துள்ளது.

பொது கழிப்பிடங்களை இவ்வளவு குறைவான மக்கள் பயன்படுத்துவதற்கு இரண்டு விதமான அணுகுமுறைகளை லோக்சத்தா கட்சி பரிந்துரைக்கிறது – ஒன்று, ஒருங்கிணைந்த சுகாதார திட்டங்களை ஊழலில்லாமல் நடத்த அதிகார பரவலாக்க​ல்​, மாவட்ட அரசாங்கம் மூலம் அவற்றை திறம்பட செயல்படுத்துவது. மீண்டும் அங்கேயும் தண்ணீர் பிரச்சனை வரலாம். அதற்கு மாற்றாக தண்ணீர் தேவையற்ற “உரப்படுத்தல் மலசலகூடங்களை” அரசு ஏற்படுத்த முன் வர வேண்டும். இது தண்ணீரை மிச்சப்படுத்துவதோடு அல்லாமல் கழிவு எருவாக பயன்படுவதையும் உறுதி செய்யும். அதே நேரம் அரசாங்கம், கழிவறைகளை பயன்படுத்துங்கள் என்ற சித்திரம் வரைவதோடு நின்றுவிடாமல், அரசு அதிகாரத்தை பரவலாக்கி திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக தங்கள் கிராமங்களை மாற்றுதல் அவர்களின் கடமை என்பதை கிராம பஞ்சாயத்துகளுக்கு உணரவைக்க வேண்டும். திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமங்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும்.

மற்றொன்று பொது கழிப்பிடங்களுக்கு பதிலாக தனியாக வீடுகளிலேயே கழிப்பிடம் அமைப்பது. இதுவே நீண்ட கால தீர்வாக அமையும். இதன் மூலம் மக்கள் கழிப்பிடங்களை பயன்படுத்துவது அதிகரிக்கும் மற்றும் அதன் பராமரிப்பு எளிதாகும்.

​இந்நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் கட்டாமாக இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை நினைவுகூர்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை சென்ற வருடத்திற்கான அசெர் கணக்கெடுப்பு (ASER survey) 77.6% பள்ளிகளில் மட்டுமே கழிவறை பயன்படுத்தும் நிலையில் உள்ளதையும், பெண்களுக்கான கழிவறை மொத்தம் 67% பள்ளிகளில் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளதையும் சுட்டிக்காட்டியது. தமிழக அரசு பள்ளிகளில் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து இதை 100% சதவீதமாக உயர்த்தி தமிழகத்தில் கழிவறை இல்லாத பள்ளியே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என லோக் சத்தா கட்சி கோருகிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: