மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும்

Monday, December 15th, 2014 @ 12:46PM

பார்வையற்றோருக்கான கிரிகெட் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே வீரர் திரு. ரமேஷ் அவர்களை பாராட்டுகிறோம். அவரின் இந்த சாதனை அளப்பரியது. மதுரையை சேர்ந்த திரு. ரமேஷ் அவர்கள் ஒரு மாற்றுத்திறனாளி. அவரின் குடும்பம் அவர் தந்தையை இழந்து பொருளாதார இக்கட்டில் சிக்கி இருப்பினும், அவர் ஒரு தினக்கூலியாக வேலை பார்க்கும் ​சூழ்நிலையிலும் கிரிகெட் விளையாட்டின் மீது உள்ள பேரார்வத்தால் அவராகவே பயிற்சி எடுத்து இந்த விளையாட்டில் சாதனை புரிந்துள்ளார். அவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த​ ​பார்வையற்றோருக்கான T20 கிரிகெட் போட்டியில் சிறந்த ஃபீல்டர் என்ற விருதை பெற்றார். அதே போல் இப்போது நடந்து முடிந்த உலகக் கோப்பையில் திறம்பட விளையாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

Loksatta members welcoming Mr.Ramesh at Chennai airport on Dec 14

Loksatta members welcoming Mr.Ramesh at Chennai airport on Dec 14

இந்த நேரத்தில் தமிழகத்தில் இந்த விளையாட்டை ஊக்குவிக்க பின்வரும் கோரிக்கைகளை ​தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிகெட் கூட்டமைப்​பு மற்றும் லோக் சத்தா கட்சி சார்பில் கோருகிறோம்:

  1. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையும், அதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் பங்கேற்றதையும் அனைத்து ஊடகங்களிலும் அரசு விளம்பரப்படுத்த வேண்டும்.
  2. மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு கூட்டமைப்பு ஏற்படுத்த அரசாங்கம் நிதி உதவி செய்ய வேண்டும். இதை அரசே நேரடியாக நடத்தாமல், ஏற்கனவே இதற்காக இயங்கும் அமைப்புகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இதை நடத்தலாம்.
  3. மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்த, வரும் 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் ​​பார்வையற்றோருக்கான ​T20 கிரிகெட் போட்டியை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். சதுரங்க போட்டியை பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்த ​2013 ​உலக சதுரங்க சாம்பியன் போட்டியை தமிழகத்தில் நடத்தியதை இப்போது நினைவு கூற விழைகிறோம்.
  4. தற்போது தமிழகத்திலிருந்து ஒரே ஒரு வீரர் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ரமேஷை போல திறமை வாய்ந்த பல வீரர்கள் தமிழகத்கில் இருந்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்கள் தொடர்ந்து பயிற்சியோ, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு சென்று விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவரை போன்ற அனைத்து வீரர்களுக்கும் தமிழக அரசு நிதி உதவி செய்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
  5. இப்போது ​​மாற்றுத்திறனாளி ​​விளையாட்டு வீரர்களு​க்கு என ​தனியாக இட ஒதுக்கீடு இல்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ​விளையாட்டு வீரர்களு​க்கு என இட ஒதுக்கீடு இருப்பதை போல் ​மாற்றுத்திறனாளி ​​விளையாட்டு வீரர்களு​க்கும் இட ஒதுக்கீடு​ கொடுக்க வேண்டும்.​

ரமேஷ் போன்ற ஒரு திறமையான விளையாட்டு வீரரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு இவரை பயிற்சியாளராக நியமித்து அவர் வேறு வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து இந்த விளையாட்டிலேயே அவரின் திறமையை பயன்படுத்த அரசு அவருக்கு நிதி உதவியும், இது சார்ந்த வேலையையும் கொடுக்க வேண்டும். கேரள அரசு கேரளாவை சேர்ந்த உலகக் கோப்பையை வென்ற இரு வீரர்களுக்கு வேலை உத்தரவாதம் அளித்துள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அணைத்து வீரர்களையும் சந்தித்து அவர் வாழ்த்துக்களை தெரிவித்து அனைத்து வீரர்களுக்கும் ​தலா 5 லட்ச ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். ​​இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமாய் தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.​

​தமிழ்நாடு ​விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு பாரபட்சம் காட்டுவதை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது. கோவையில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவில்லான விளையாட்டுப் போட்டிகளுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு தலா ரூபாய் 70, 50 மற்றம் 30 கொடுத்து அவர்களை அவமானப் படுத்திய நிகழ்வு மிகவும் வேதனை அளிக்கிறது. இது போல் இனி நிகழாமல் இருக்க மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும்.​

மேலும் இதுவரை திரு. ரமேஷ் அவர்களுக்கு ஆதரவளித்த தேசிய பார்வையற்றோர் இயக்கம், திருஷ்டி 3230 அமைப்பு, நியு விஷன் ஃபிரெண்ட்ஷிப் கிளப், அறியாமை விழிப்புணர்வு இயக்கம், தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்பு​ ​ஆகிய அனைவருக்கும் எங்கள் ​பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.​

உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பும் திரு. ரமேஷ் அவர்களை ​சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வின் புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: