சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் மற்றும் லோக் ஆயுக்தா வேண்டும்

Wednesday, December 10th, 2014 @ 10:00AM

Nodollarhandshakeசர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான இன்று லோக் சத்தா கட்சி தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம், லோக் ஆயுக்தா மற்றும் திறம்பட செயல்படும் தகவல் ஆணையம் ஆகியவற்றை கோருகிறது.

சர்வதேச அளவில் ஊழல் தரவரிசையில் இந்தியா சென்ற ஆண்டில் இருந்த 94-ஆம் இடத்தில இருந்து 85-ஆம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது. ஊழலின் அளவீடு மதிப்பெண் 2 புள்ளிகள் சென்ற ஆண்டை விட அதிகம் பெற்றுள்ளது. 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் ஊழல் அளவீடு மதிப்பெண் 1 புள்ளி அதிகம் பெற்றால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.13% சதவிகிதப் புள்ளிகள் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ஊழல் குறைந்தால் நேரடியாக நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என தெரியவந்தது. நாட்டில் ஊழல் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றாலும் ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும்.

ஊழலை ஒழிக்க வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் முயற்சியான தகவல் அறியும் உரிமை சட்டம் தமிழகத்தில் மோசமாக செயல்படுத்தப் படுவதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக மாநில தகவல் ஆணையம் இந்தச் சட்டம் மூலம் மக்கள் தகவல் பெற முடியாமல் தடுக்க என்னெவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்கிறது.

அதிகாரிகள் செய்யும் ஊழலை விசாரிக்க தேசிய அளவில் லோக்பால் உள்ளது போல் மாநில அளவில் உள்ள ஊழல்களை விசாரிக்க சுதந்திரமான லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான காலக்கெடு முடிய இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசு இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நேரத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த லோக் சத்தாவின் நீண்ட நாள் கோரிக்கையை நினைவு படுத்த விழைகிறோம். இதற்காக லோக் சத்தா கட்சி கொடுத்த மனுக்களுக்கு இது வரை சரியான பதில் இல்லை. சேவை பெறும் உரிமை சட்டம் மற்றும் லோக் ஆயுக்தா ஆகிய இரண்டும் இல்லாத வெகுசில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

இது போல் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் ஊழலை ஒழித்து நல்லாட்சி நல்க வேண்டுமென லோக் சத்தா கட்சி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

Categories: Press Releases
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: