சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்

Friday, December 26th, 2014 @ 6:30PM

​சமையல் எரிவாயுவிற்கான நேரடி மானிய திட்டத்தில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் இருப்பதையும் இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாவதையும் லோக் சத்தா கட்சியின் உறுப்பினர்கள் சேலம் மாவட்டத்தில் மேற்கொண்ட நேரடி கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நேரடி மானிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு வங்கிகளிலேயே ​நேரடியாக மானிய பணத்தை அரசு செலுத்தும். இதனால் நிதி மேலாண்மை எளிதாகவும், தேவையில்லாமல் கசியாவண்ணம் பணம் மக்களுக்கு மட்டுமே செல்லும் எனவும் சொல்லப்பட்டது. எனினும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. இவற்றை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இந்த திட்டத்தை பயன்படுத்தி எரிவாயு நிறுவன முகவர்கள் மக்களிடம் அதிக பணம் வசூலிப்பதும் தர மறுப்பவர்களை அலைக்கழிப்பதும் நடந்து வருகிறது.

உதாரணமாக வங்கி கணக்கில் உள்ள பெயருக்கும் எரிவாயு இணைப்பு அட்டையில் உள்ள பெயருக்கும் சிறு வித்தியாசம் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதற்கென வக்கீலிடம் உறுதிச் சான்று (அஃபிடவிட்) வாங்கிவர வற்புறுத்துகின்றனர். மேலும் இதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதனால் விண்ணப்பங்களை சரிவர நிறப்ப முடியாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். போதிய விண்ணப்பப் படிவங்கள் இல்லாமல் பொதுமக்களே அவற்றை மின்நகல் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெயரில் சிறு வித்தியாசம் இருந்தால் கூட முன்பு உள்ள எரிவாயு இணைப்பை துண்டித்து புதிய இணைப்பை எடுக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது பாதுகாப்பு வைப்புத் தொகை அதிகம் என்பதால் தேவை இல்லாமல் பொதுமக்கள் அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து யாரேனும் புகார் அளித்தால் அவருக்கு மாத எரிவாயு உருளைகளை வழங்குவதை தாமதப்படுத்தவும் செய்கின்றனர்.

இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய அரசு இதன் விதிமுறைகளை எளிமையாக்கி இதில் கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் லோக் சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: