தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களையும் தொடர்ந்து நசுக்கும் ​தகவல் ஆணையத்தை வன்மையாக கண்டிக்கிறோம்

Wednesday, January 7th, 2015 @ 8:25PM

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களையும் தொடர்ந்து நசுக்கும் வேலையை செய்து வரும் மாநில தகவல் ஆணையத்தை லோக்சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

​தமிழகத்தில் இருக்கும் தகவல் ஆணையம், ஒரு ஆணையம் எவ்வாறு மிக மோசமாக செயல்படலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். மனுதாரர்கள் விண்ணப்பிக்கும் தகவலை சரியாக வழங்காது, மேல்முறையீட்டு மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, இரண்டாம் மேல் முறையீட்டிற்காக ஆணையத்திற்கு விண்ணப்பித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காது, மீறி விசாரிக்கப்படும் குறைந்தபட்ச மனுக்களுக்கும் சரியான நிவாரணமோ, தகவல் வழங்காத அலுவலருக்கு அபராதமோ போடாத ஒருஆணையம் தமிழ்நாடு தகவல் ஆணையம். மேலும் ஆணையத்திற்கு செல்லும் விண்ணப்பதாரர்களை தரக்குறைவாக பேசுதல், மரியாதையின்றி நடத்துதல் ஆகியவை குறித்த புகார்கள் நம் கட்சிக்கு தொடர்ந்து வருகிறது. இந்த எல்லா பிரச்சனைகளையும் லோக்சத்தா கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் சந்தித்து வந்துள்ளார்கள். கடந்த வருடம் நம் மாநிலத் தலைவர் திரு.பழனிகுமாரும் இது போல் அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நாம் கொடுத்த புகாரும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

உச்சபட்சமாக இன்று மாநில தகவல் ஆணையர் முன் இருக்கையில் அமர்ந்ததற்காக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் திரு சிவ.இளங்கோ அவர்கள் கைது செய்யப்பட்டதை லோக்சத்தா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தகவல் ஆணையத்தின் இந்த நிலைமை மாற தொடர்ந்து பல போராட்டங்களை சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று அவரை அவமதித்து அவரை கைது செய்ததற்கு கூட உள் நோக்கம் இருப்பதாக லோக்சத்தா கட்சி கருதுகிறது.

இதற்கு முன்னர் இளங்கோ அவர்கள் மாநில தகவல் ஆணையத்தினுள் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தியதால் இரண்டு டயர்களும் குத்தி கிழிக்கப்பட்ட சிறுபிள்ளைத்தனமான செயல்களும் அரங்கேறியுள்ளன.

ஆணையத்திற்கு வரும் மனுதாரரான பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் நிற்க வைத்தும், குற்றம் சாட்டப்பட்ட அரசு அலுவலர்களை இருக்கையில் அமர வைத்தும் விசாரணை செய்யும் நடைமுறையையும், மாநில தகவல் ஆணையரையும் லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது. மேலும் கைது செய்யப்பட்ட திரு சிவ.இளங்கோ அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறது. வெளிப்படத்தன்மைக்காக உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தை காக்க தகவல் அறியும் உரிமை ஆர்வலகளும், பொது மக்களும் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையயும் வைக்கிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: