சேவை பெறும் உரிமை சட்டம் கோரி கரூரில் உண்ணாநிலைப் போராட்டம்

Friday, February 13th, 2015 @ 10:12PM

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா கட்சி இன்று கரூரில் உண்ணாநிலை போராட்டம் நடத்தியது.
இந்த சட்டத்திற்காக லோக் சத்தா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆகஸ்ட் 2013 இதற்கான பணியை துவக்கி இதுவரை சேவை பெறும் உரிமை சட்டத்திற்காக மாவட்டங்களில் கையெழுத்து முகாம்கள், விழுப்புணர்வு நடைபயணம், தமிழகம் முழுவதும் 52 நாட்கள் சுமார் 7000 கி.மீ பைக் யாத்திரை, ஆர்ப்பாட்டம், சென்னை மற்றும் திருப்பூரில் உண்ணாவிரதம் ஆகியவற்றை தொடர்ந்து இப்போது கரூரில் உண்ணாநிலைப் போராட்டம். கடந்த ஜனவரி 2014 இதற்காக கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கக்கூடும்.

rts-hunger-strike-karur

சேவை பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன?
அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து (உதாரணமாக ரேஷன் கார்டு 60 நாட்கள்,புதிய மின் இணைப்பு 7 நாட்கள்), அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சேவை வழங்கப்படாவிடில்அதை செய்யத் தவறிய அரசு அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்தத் தொகை பாதிக்கப்பட்டவிண்ணப்பதாரருக்கு நிவாரணமாக வழங்கப்படும். இதனால் அரசு சேவைகள் விரைந்துகிடைப்பதோடு லஞ்சமும் பெருமளவில் குறையும்.

​லோக் சத்தாவின் கோரிக்கைகைகள்

  1. குடிமக்கள் சாசனம் ஏற்கனவே இருக்கும் அரசு துறைகளின் அலுவலகங்களில் அவைபொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
  2. குடிமக்கள் சாசனம் ஏற்படுத்தப்படாத அரசு சேவைகளுக்கு படிப்படியாக குடிமக்கள் சாசனம்ஏற்படுத்தப்பட வேண்டும்.
  3. குடிமக்கள் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘கால நிர்ணயம்’ பின்பற்றப்பட வேண்டும்.
  4. சட்டத்திற்கு உட்பட்டு, மக்களுக்கு உரிமையாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் அரசிதழில்வெளியிடப்பட வேண்டும்
  5. அவை பின்பற்றப்படாத பட்சத்தில், நிர்ணயித்த காலத்திற்குள் சேவை வழங்காத அதிகாரியின் மீதுபுகார் தெரிவிக்க மேல் முறையீட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  6. வழங்கப்பட்ட புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு, சே​​வை குறைபாடுஏற்படும்பொழுது, அதற்கு தக்க இழப்பீட்டை பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
  7. சிறப்பாக செயல்படும் அரசு அதிகாரிக்கு பரிசு, பாராட்டு வழங்கப்பட வேண்டும்.
  8. அரசு சேவைகள் யாவும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  9. பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு தரப்படும் இழப்பீடு அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக, உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  10. இவற்றை வலியுறுத்தும், 19 மாநிலங்களில் அமுலில் இருக்கும் சேவை பெறும் உரிமைசட்டத்தை தமிழ்நாட்டிலும் அமுல்படுத்த வேண்டும்.

இந்த போராட்டத்தில் வடிவேலன் (ஏ.ஐ.டி.யூ.சி ), வி.கே.தங்கவேல் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), வாசுதேவன் (கரூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி) மற்றும் பல இயக்கங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்திற்கு லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. சுரேந்திரா ஸ்ரீவத்சவா அவர்கள் தலைமை தாங்கினார்.

இது குறித்து கூறிய அவர், “சேவை பெறும் உரிமை சட்டத்தை அமுல்படுத்துவதில் லோக்சத்தா மிகுந்த முனைப்போடு செயல்பட்டுவருகிறது. நாட்டில் நடைபெறும் ‘சில்லறை ஊழலையும்’ (Retail Corruption) மக்கள்படும் இன்னல்களையும் தீர்க்கவல்ல சட்டம் சேவை பெறும் உரிமை சட்டம் மட்டுமே’ என்றார்.
லோக் சத்தாவின் தமிழக தலைவர் திரு. பழனி குமார் அவர்கள் “இந்த உண்ணாநிலை போராட்டம் ஒரு ஆரம்பம் தான். எங்கள் கட்சி தலைவர்கள் திரு. ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர் தமிழகம் முழுதும் பைக் பயணம் செய்து இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். சென்னை, திருப்பூரை தொடர்ந்து இப்போது கரூரில் இந்த உண்ணாவிரதம் நடத்துகிறோம். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இது போன்று சேவை பெறும் உரிமை சட்டத்திற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.” என்று கூறினார்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்:

Categories: Activities, Right to Services

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: