லோக்சத்தா கட்சி திருப்பூர் அலுவலக திறப்பு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Sunday, February 15th, 2015 @ 10:32AM

திருப்பூர் மாவட்ட லோக்சத்தா அணி லஞ்ச ஊழல் ஒழிப்பு செயல்பாடுகளில் மிகத் தீவிரமாக செயல்படுவது அனைவரும்அறிந்ததே.இது போன்ற மக்கள் பணிகளில் மேலும் சிறப்பாக செயல்பட வசதியாக திருப்பூர் லோக்சத்தா கட்சிக்கு அங்கேரிப்பாளையத்தில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் திரு.சுரேந்திரா ஸ்ரீவத்சவா தலைமை தாங்கினார். இதைத் தொடர்ந்து நடந்த செயல்வீரர்கள் சந்திப்பில் மாநில தலைவர் திரு.பழனிகுமார், திருப்பூர் மாவட்ட தலைவர் திரு.பால்பாண்டி மற்றும் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

லோக் சத்தா கட்சியின் 5 முக்கிய குறிக்கோள்கள்

சேவை உரிமை சட்டம் மூலம் லஞ்சத்தை ஒழித்தல்

அரசு அலுவலகங்களில் அரசு சேவைகளுக்கு கால நிர்ணயம் செய்து, காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு குடிமக்களுக்கு நஷ்டஈடு வழங்க வழிசெய்தல்.

அனைவருக்கும் தரமானகல்வி

கல்வியின் தரத்தை உயர்த்த பொதுவான தேர்வு ஆணையங்களை உருவாக்குதல். இந்த தேர்வு ஆணையங்களின் மூலம் பள்ளிகளின் கல்வி தரத்தை மதிப்பீடு செய்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி இதன் மூலம் கல்வியின் தரத்தை அதிகரித்தல். அரசு பள்ளிகளுக்கு நிதி அளிக்காமல் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக நிதி அளித்தால்.இதன் மூலம் மாணவர்/பெற்றோருக்கு விருப்பமான பள்ளியை அவர்களே தேர்ந்தெடுத்து அதில் சேர வாய்ப்பளித்தல்.
(உலக அளவில் 74 நாடுகள் பங்கெடுத்த பள்ளிகளுக்கான தரமதிப்பீட்டில் இந்தியா 73-ஆவது இடத்தை பிடித்தது மற்றும் ஒவ்வொரு வருடமும் அசெர் சார்பில் வெளியிடப்படும் ஆய்வறிக்கை மொழிப்பாடம் மற்றும் கணிதத்தில் மாணவர்களின் திறன் மிக மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டுவதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்).

அனைவருக்கும் தரமான மருத்துவவசதி

அரசு மற்றும் தனியார் மருத்துவ சேவைகளின் கூட்டு முயற்சியின் மூலம் அனைவருக்கும் அதிக செலவின்றி தரமான மருத்துவ வசதி ஏற்படுத்துதல். இது இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘தேசிய மருத்துவ சேவைகள்’ திட்டத்தை போன்று இருக்கும்.

உள்ளூர் அரசாங்கத்தை அதிகாரப்படுத்துதல்

ஒவ்வொரு குடிமக்களுக்கும் தலா 1000 என்ற வீதம் நேரடியாகவே உள்ளூர் அரசாங்களுக்கு (பஞ்சாயத்து/நகராட்சி/மாநகராட்சி) நிதி அளித்து அதன் மூலம் பகுதி திட்டங்களை நிறைவேற்றுதல்.

உள்ளூர் நீதிமன்றங்கள் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல்

சிறு குற்ற வழக்குகள் மற்றும் சிறு சிவில் வழக்குகளை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் பாரத்தை குறைத்து, காவல்துறை மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்களின் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல்.

இன்றைய கூட்டத்தில் சேவை பெறும் உரிமைக்கான போராட்டத்தை திருப்பூரில் வலுப்படுத்துவது என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நபருக்கு 1000 ரூபாய் விகிதம் தனித்தொகையாக அரசாங்கம் வழங்க வலியுறுத்துவோம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

 
Close
14-Feb-2015 09:53
Close
14-Feb-2015 11:37
 

Categories: Activities, District News

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: