தமிழக நிதி நிலை அறிக்கை – லோக் சத்தா கட்சி அறிக்கை

Wednesday, March 25th, 2015 @ 6:14PM

தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான திரு.பன்னீர் செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததுபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழாரங்களோடு, மத்திய அரசு தன் நிதியை குறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டோடு நிதிநிலையை தாக்கல் செய்தார். இன்னொரு கவர்ச்சி திட்டங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையாகத்தான் இது இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 9% கணக்கிடப்பட்டுள்ளது. அது எவ்வாறு சாத்தியப்படும் என்ற விளக்கங்கள் இல்லை.

கல்வி

பள்ளிக் கல்வித்துறை – 20926 கோடி

இந்த ஆண்டும் பள்ளி கல்வித்துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை உண்மையிலேயே பயனளிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியா முழுக்க பள்ளி கல்விக்காக நடத்தப்படும் அசர் அறிக்கை (ASER Report) 5ம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவனால் ஒரு வாக்கியத்தை படிக்க முடியாத நிலையையும், சாதாரண கூட்டல், கழித்தல் கணக்குகள் செய்ய முடியாத நிலையையும் காட்டுகிறது. இதே போன்று உலகம் முழுக்க கல்வியின் தரம் குறித்து நடத்தப்பட்ட பிசா அளவீடு (PISA Survey) இந்தியா இந்த ஆய்வு நடத்தப்பட்ட 74 நாடுகளில் 73-வது இடத்தில் இருப்பதை காட்டுகிறது. இந்தியா சார்பாக கலந்துகொண்டவர்கள் தமிழகத்தையும் , ஹிமாச்சல பிரதேசத்தையும் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வி கட்டமைப்புகள் குறித்து பெருமிதம் அடைந்த முதல்வர், அரசு பள்ளிகள் அனைத்திலும் 100% கழிப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இது எவ்வளவு பெரிய பொய்யுரை என்று சொல்லத் தேவையில்லை.

உயர்கல்வித் துறை – 3696 கோடி

தமிழகத்தில் உயர்கல்வித் துறை எந்த நிலைமையில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். கோவை அரசு மருத்துவ கல்லூரியில் 200 இடங்களுக்கு கூடுதலாக தமிழகம் விண்ணப்பிக்க, மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்புகளை ஆய்வு செய்த மருத்துவ கவுன்சில் (MCI), 200 இடங்களை மறுத்தது.

பள்ளிக் கல்வியை உண்மையிலேயே தரம் உயர்த்த இந்த அரசாங்கம் எண்ணினால், முதலில் பள்ளிகளை அவர்களின் வெளிப்பாடுகள் (அசர் அறிக்கை போல்) கொண்டு வரிசைப்படுத்த வேண்டும். அது பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்.

வேளாண்துறை – 6613.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

மற்ற ஆண்டுகளை விட அதிகம் என்றாலும், விவசாயிகள் இதை விட அதிகமாக எதிர்ப்பார்த்தனர். அந்நிய முதலீட்டை எதிர்க்கும் அரசு, அதே சமயம் சேமிப்பு கிடங்குகள் குறித்தும் பேசவில்லை. 5500 கோடி – பயிர்க் கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பீட்டு பார்த்தால் இது அதிகமாக தோன்றினாலும், பயிர் செய்ய தேவையான பொருட்களின் விலைவாசி உயர்வினால், சென்ற ஆண்டு எவ்வளவு நிலத்திற்கு கொடுக்கப்பட்டதோ, அதே நில அளவிற்கு மட்டுமே வழங்க முடியும். நதிகள் இணைப்பிற்கு ஒதுக்கீடு 250 கோடி என்பது ஆண்டா ஆண்டாக சொல்லப்பட்டு வரும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

நீதித்துறை – நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.809 கோடி நிதி

புதிதாக 169 நீதிமன்றங்கள் அமைக்க 134 கோடி ஒப்புதல். இதே 134 கோடி கொண்டு சுமார் 1500 உள்ளூர் நீதிமன்றங்கள் அமைக்க முடிவெடுத்திருந்தால், அதன் மூலம் பல லட்சக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்பட்டு உண்மையிலேயே நீதிக்காக பல வருடங்கள் போராடும் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்திருக்கும். உள்ளூர் நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து ஆட்சியளர்களுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

உள்ளாட்சிகளுக்கு நிதி

3ம் அரசாங்கமாக இருக்கும் உள்ளாட்சிகளுக்கான நிதி மீண்டும் குறைவாகவே உள்ளது. அதிகார பரவலாக்கத்தை மத்திய அரசிடம் கூடுதலாக எதிர்ப்பார்க்கும் மாநில அரசு, உள்ளாட்சிகளுக்கு அதனை செயலபடுத்த விரும்புவதேயில்லை.

மீனவர்நல மேம்பாட்டுக்கு மீனவ துறைக்கு ரூ.728 .68 கோடி

தொடர்ந்து நடந்து வரும் இந்தியா இலங்கை மீனவர் பிரச்சனைக்கு ஒரு முக்கியமாக நிரந்தர தீர்வு – ஆழ்கடல் மீன்பிடிப்பு என்பதை லோக்சத்தா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆழ்கடல் மீன் பிடிப்புக்கான படகு சுமார் 60 முதல் 75 லட்சம் வரை ஆகும். மீனவர்களுக்கு மானிய விலையில் இந்த படகுகளை கொடுப்பதற்கான திட்டம் இல்லாத்து மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

சுகாதாரத் துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லை.

காவல்துறை – 5568 கோடி

தமிழக காவல்துறை மிகச் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்த முதல்வர், காவல்துறைக்கு 5568 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இந்த ஒதுக்கீடு காவல்துறையின் தொழில்நுட்பத்தை முன்னேற்ற பயன்பட வேண்டும். அதே சமயம் குற்றவாளிகளை விசாரணையை காட்சி பதிவு செய்யவும், காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தவும் இவை பயன்பட வேண்டும்.

மின்துறை

நம் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின் துறை சரியாக செயல்படாததால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிப்படையும். தமிழகத்தின் தற்போதைய தேவை 13700 மெகாவாட் உள்ளது. தொடர்ந்து அதிமுகவும், திமுகவும் மின் துறையில் ஒரு பனிப்போர் நடத்தி வருவதே வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு பக்கம் புதிய திட்டங்கள் ஏற்படுத்தாது, இருக்கும் திட்டங்களையும் (உடன்குடி உட்பட) தொடங்காத வண்ணமே நம் மின்துறை செயல்பட்டு வருகிறது. மின்துறையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் சொல்கின்றன. மின்துறையில் முதலீடு செய்யும் முன் முதலில் மின்துறை குறித்த ஒரு ‘வெள்ளை அறிக்கை’ மக்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மின்துறையில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துவிட்டதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் இன்றைய நிலவரப்படி சென்னை உட்பட பல ஊர்களில் 1 முதல் 4 மணிநேரம் மின் துண்டிப்பு துவங்கிவிட்டது.

பொதுச் சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம் தேவை நிரந்தரமான “சேவை பெறும் உரிமை சட்டம்தானே” ‪ தவிர இது போன்ற தற்காலிக ஏமாற்று வேலைகள் அல்ல. அதே போன்று லோக ஆயுக்தா நீதிமன்றங்கள் குறித்த அறிவிப்பும் இல்லை.

எந்த விதத்திலும் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லாத நிதிநிலை அறிக்கை. மொத்த உள்நாட்டு உற்பத்தி எப்படி 9% அடையும் என்பது மிகப் பெரிய புதிர். வரப் போகும் மின் பிரச்சனை, பெரும்பாலான துறைகளில் தலைவிரித்தாடும் ஊழல் – தமிழகத்தின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக தோன்றவில்லை.

Categories: Press Releases
Tags: , ,

1 Comment to "தமிழக நிதி நிலை அறிக்கை - லோக் சத்தா கட்சி அறிக்கை" add comment
kalvi
March 29, 2015 at 12:40 pm

kalvi thuraiku innum koodudhalana nithi udhavi thevai.

Leave a Reply

%d bloggers like this: