தமிழக காவல்துறை நிலை – காவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிரான தினம்

Sunday, March 15th, 2015 @ 10:23PM

காவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.

உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவதொரு அடக்குமுறை காவல்துறையால் நடத்தப்பட்டு வந்தாலும், தமிழகத்தின் கடந்த 1 வார நிகழ்வுகள் இந்த தினம் குறித்து நம் ஒவ்வொருவரையும் சிந்திக்க தூண்டுகிறது.

கடந்த ஒரு வாரமாக பார்வையற்ற பட்டதாரிகள் தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 2012ல் இதே கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் துவக்கிய இந்த போராட்டம், 2013லும் இதே வடிவத்தில் பல்வேறு இடங்களில் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சென்ற வருடம் மிகவும் கேவலமாக, காட்டுமிரண்டித்தனமாக தமிழக காவல்துறை பார்வையற்றவர்களிடம் நடந்துகொண்டது. பெண் பார்வையற்ற பட்டதாரிகளிடம் சில காவலர்கள் பாலியல் ரீதியான அடக்குமுறையை மேற்கொண்டு ஊடகங்கள் அதனை கண்டித்தது. ஒவ்வொரு தினமும் கைது செய்யப்பட்ட பார்வையற்றவர்கள் நகரத்திற்கு வெளியே இருக்கும் காட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டு தத்தளிக்கவைக்கப்பட்டனர். அதற்கு பிறகு நீதிமன்றம் இதில் தலையீட்டு பார்வையற்றவர்களிடம் தங்களின் அடக்குமுறையை காட்டிய காவல்துறையை கண்டித்ததோடு, அவர்களிடம் நடந்துகொள்ள் வேண்டிய முறையையும் வகுத்து கூறியது.

இவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல சென்ற ஆண்டில் நடத்திய அதே அடக்குமுறையை இந்த ஆண்டும் காவல்துறை நடத்தி வருகிறது. குறிப்பாக திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்றவர்களை காட்டுப் பகுதியில் இறக்கிவிடுவது, அவர்களின் குறைபாட்டை கேலி பேசி அவர்களின் மணம் புண்படும் வகையில் பேசுவது என நடந்துகொண்டதாய் நாம் அறிகிறோம்.

இதே போல சென்ற வாரத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் காவல்துறையின் காட்டுமிரண்டித்தனத்தினால் பெரும் அவதிக்குள்ளானதை இந்த நாடு அறியும்.

காவல்துறை என்பது மக்களுக்கான துறை என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு அடிபணியும் ஆட்களாக மட்டும் காவல்துறை இருப்பது மக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்துகிறது. ஆட்சியாளர்களின் கட்டளையை ஏற்று செய்தாலும், மனிதாபிமானத்தை மறந்து, அடக்குமுறையை மட்டும் கையாளும் துறையாக காவல்துறை இருப்பது எந்த ஒரு தேசத்திற்கும் அழகல்ல.

இந்த அடக்குமுறைகளை ஒழித்து, மக்களுக்காக துறை காவல்துறையை மாற்ற, பிரகாஷ் சிங் மற்றும் இந்திய யூனியனுக்கு நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் எல்லா மாநிலங்களுக்கும் சில பரிந்துரைகளை வழங்கியது. பல முறை குட்டு வாங்கி, சுமார் 7 வருடங்கள் கழித்து 2013 ஆம் ஆண்டு அந்த காவல்துறை சீர்திருத்தங்களை நீர்த்துப்போகச் செய்யும்படியான ஒரு பெயரளவிற்கான சீர்திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டுவந்தது.

காவல்துறையின் இந்த அடக்குமுறைகளை தட்டி கேட்க வேண்டிய அதற்கு பொறுப்பான தமிழக முதலமைச்சரை செயல்படுமாறு லோக்சத்தா கட்சி காவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிரான தினத்தில் கேட்டுக்கொள்கிறது.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: