புதுமையான பட்ஜெட் – இருந்தும் சில வாய்ப்புகள் நழுவிவிட்டது

Sunday, March 1st, 2015 @ 12:00AM

இன்றைய பட்ஜெட் குறித்து லோக் சத்தா கட்சியின் அறிக்கை:

இன்று மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜெய்ட்லி அவர்கள் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புதுமையாகவும், புரட்சிகரமாகவும் உள்ளது. மேலும் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை சரியான திசையில் செலுத்தும் விதமாகவும் உள்ளது. எனினும் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் குறைவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் – அனைவருக்கும் ஓய்வூதிய திட்டம், சமூக பாதுகாப்பு மற்றும் தனிநபர் காப்பீடு; முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி; மற்றும் வரிகளை ஒழுங்கு செய்தல் ஆகியன. பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் – விபத்துக் காப்பீடு, ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீடு, முதியோர் நல நிதி ஆகிய அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் முறைசாரா தொழிலாளர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இத்துடன் முறை சார் தொழிலாளர்களுக்கு இருக்கும் EPF மற்றும் ESI ஆகியவற்றில் அதிக வாய்ப்புகளை உருவாக்கினால் மேலும் பல குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

​​இந்த பட்ஜெட்டில் முதலீடுகளை அதிகரிக்க பல முக்கிய திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு தொழில்களுக்கு நிதியளித்து ஊக்குவிக்க முத்ரா வங்கி, விரிவான திவால் கொள்கை, உள்கட்டமைப்பு செலவீனங்களுக்கு நிதியளித்து ஊக்கம், தேசிய உள்கட்டமைப்பு நிதி உருவாக்கல், உள்கட்டமைப்பு சார்ந்த கடன் பத்திரங்களுக்கு வரிவிலக்கு, தங்க பத்திரத் திட்டம், தொழில் நடத்துவதை எளிதாக்குதல் மற்றும் கடன் பத்திர சந்தையை விரிவுபடுத்தல் ஆகிய திட்டங்கள் முதலீட்டை அதிகரித்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

இந்த பட்ஜெட்டில் வரிகளை ஒழுங்கு படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படிப்படியாக நிறுவனங்களுக்கான வரியை 25%-மாக குறைத்தல், பல வரிவிலக்குகளை நீக்குதல், மிக அதிக சொத்து உள்ளவர்களுக்கு 2% வரி, சொத்து வரி நீக்கம், ஏப்ரல் 2016 முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துதல் ஆகியன வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள்.

கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கவும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன. வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர புதிய விரிவான திட்டம், உள்நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க பினாமி சொத்துகளுக்கு புதிய சட்டம், பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதிகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

நிதிப் பற்றாக்குறை அளவை 3%-மாக ஆக்கும் இலக்கை 2017-18 ஆண்டுக்கு மாற்றியது உள்கட்டமைப்பு முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கும் ஒரு நல்ல முடிவு. அதே போல் நேரடி மானிய திட்டங்களும் பயனளிக்கும் நல்ல கொள்கைகளே.

​​இந்த பட்ஜெட் பல விதங்களில் நல்லதாக இருந்தாலும் இதில் பல முக்கிய விஷயங்கள் தவறவிடப்பட்டுவிட்டன. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை 32%-இல் இருந்து 42% ஆக்க முடிவு செய்தது நல்ல விஷயமாக இருந்தாலும் உள்ளூர் அரசாங்கங்கள் கூட்டாட்சி தத்துவத்தின் மூன்றாம் நிலையாக அங்கீகரிக்கப் படவில்லை. மாநிலங்களுக்கு நிதி அளிப்பதை போல உள்ளூர் அரசாங்கங்களுக்கும் நேரடியாக நிதி அளிக்கும் ஒரு அருமையான வாய்ப்பை நிதியமைச்சர் தவற விட்டுவிட்டார். உள்ளூர் அரசாங்கங்களுக்கு நேரடி நிதி அளித்தால் மட்டுமே சுத்தமான இந்தியா திட்டம் மற்றும் பொது சேவை வழங்கல் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்த முடியும். குடிமகனின் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் பொது சேவைகள் அவர்களுக்கு சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. நாம் வளங்களை சேவை வழங்குதலுடனும், அதிகாரத்தை பொறுப்புணர்வுடனும் இணைக்க வேண்டும். அதை இந்த பட்ஜெட்டில் தவற விட்டுவிட்டோம். அதே போல் கல்வி மற்றும் மருத்துவ வசதி ஆகியவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இது ஏழை எளிய மக்களை மிகவும் பாதித்து அவர்களின் ஏழ்மையை அதிகரிக்கும். இந்த இரு முக்கிய துறைகளை விருப்பத் தேர்வு, ஆரோக்கியமான போட்டி, அரசு-தனியார் கூட்டு முயற்சி, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் பொறுப்புடைமையை அதிகரித்தல் ஆகியன மூலம் சீர்தூக்க வேண்டும். இந்த குறைகள் இல்லாமல் இருந்திருந்தால் இது மிகச்சிறந்த பட்ஜெட்டாக இருந்திருக்கும்.

​​
நாம் தற்போது இருக்கும் குறுகிய கால மானிய கொள்கைகளிலிருந்து விலகி விளைவு சார்ந்த மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் கொள்கைகளை நோக்கி நகர வேண்டும். இந்த பட்ஜெட்டில் விடுபட்ட அம்சங்கள் அனைத்தும் விரைவிலேயே கவனத்தில் கொண்டு வரப்பட்டு சரி செய்யப்படும் என நம்புவோம்.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: