​தமிழக அரசு – முதலீட்டாளர்களின் மாநாடு ஒத்திவைப்பு: லோக்சத்தா கட்சி விளக்கம் கோருகிறது

Friday, April 24th, 2015 @ 7:55AM

தமிழக அரசு அதன் ஏப்ரல் 21 தேதியிட்ட செய்தி வெளியீட்டில், “உலக முதலீட்டாளர்களின் மாநாடு (உ. மு. மா) வரும் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும்” என அறிவித்துள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள், பெரும் முதலீடுகளுக்கு ஒப்புக்கொள்வதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாலும், கோடை காலத்திற்குப் பிறகு மாநாட்டை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாலும் மாநாட்டின் தேதிகள் தள்ளிவைக்கப் பட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த ஒத்திவைப்பின் பின்னணியைப் பற்றி லோக்சத்தா கட்சி தமிழக மக்களின் சார்பாக விளக்கம் கேட்கின்றது. இவ்வாண்டு பிப்ரவரி 14 அன்று நடந்த உ. மு. மா. திறப்பு விழாவில் “இந்த நிகழ்ச்சியின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் முதலீடு உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமுடைய நிறுவனங்களின் பட்டியலைக்கூட தொழிற்துறை அமைச்சர் வெளியிட்டார். முதலீடு செய்ய ஆர்வமுடைய பல பெரு நிறுவனங்கள் திறப்பு விழாவில் பங்கெடுக்கவும் செய்தன.

2011 ஆண்டு மே மாதம் தொடங்கி 31,706 கோடி ரூபாய் மதிப்பான முதலீட்டை அரசு கொணர்ந்துள்ளது என்றும் 1992 இன் தமிழ்நாடு அரசு தொழில் சார் கொள்கை, நம் மாநிலத்தை தானியங்கி தொழிற்சாலைகளின் மையப்புள்ளியாக ஆக்குவதற்கு வழி செய்துள்ளது என்றும், தொழிற்துறை கூடுதல் தலைமைச் செயலர் சி. வி. சங்கர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அந்நிய முதலீட்டாளர்களை வரவேற்கும் முகமாக பிரான்சு, இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா , சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் தமிழக அரசு கண்காட்சிகளை நடத்தியது. இது மட்டுமின்றி உள்நாட்டு கண்காட்சிகளும் பெங்களூர், ஹைதராபாத், புது தில்லி, அஹமதாபாத் மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் நடத்தியுள்ளது. மேலும் பல கண்காட்சிகள் மற்ற நாடுகளிலும் நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இவ்வளவும் நடந்தேறியபின்னும், உ. மு. மா. ஏன் தள்ளிப்போடப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் ஐயப்படுவதுபோல, தனி ஒருவர் வழக்கில் குற்றவாளியானதற்கும் தமிழகத்தின் முதலீடுகள் தள்ளிப்போனதற்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தவர்களில் யார்யார்க்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. மேலோட்டமான காரணங்களைக் கூறி மழுப்புவதாய்த் தெரிகிறது. உண்மையிலேயெ நிறுவனகள் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தனவா, அன்றி நம் அரசு தனிப்பட்ட காரணங்களால் பொன்னான வாய்ப்பை நழுவ விடுகின்றதா என்பது பொது மக்களுக்கு விளங்கவில்லை. இதனால் தொழில்களுக்கு ஏதுவான சுழ்நிலையைத் தமிழ்நாடு அளிக்க மறுப்பதாகக் கொள்ளப்படலாம்.

இந்த விவகாரத்தில் முழுமையான விளக்கம் அளிக்க அரசை லோக் சத்தா கட்சி கோருகிறது. தடைகளைப் பரிசீலனை செய்து அவற்றைத் தாண்ட ஆவன செய்ய வேண்டுமென்றும், தமிழகத்தில் தொழில் வளத்தையும், அதன் மூலம் வேலைவைப்பையும் பொருளாதார நிலையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் லோக் சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது. தேர்தல் வரவிருப்பதால் இவற்றை உடனடியாகச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கையில், கூட்டத்தை ஒத்திப்போடுவது முதலீட்டாளர் மனதில் மேலும் மனக்குறைகளை ஏற்படுத்த வழி உள்ளது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: