ஜெயலலிதாவின் விடுதலை, ஊழல் ஒழிப்பின் சிக்கலை வெளிக்காட்டியுள்ளது. நேரடி முதல்வர் தேர்தலுக்கான நேரம் நெருங்கிவிட்டது

Tuesday, May 12th, 2015 @ 10:31PM

நம் நாட்டின் சட்டம் மற்றும் ஆட்சித் துறைகள் செயலிழந்து நிற்கும்போது, பொது மக்கள் தம் ஒரே கடைசி நம்பிக்கையாகக் கொள்வது நீதித்துறையையே ஆகும். நம் நாட்டில் ஊழல் மிகப்பரவலான, பொதுவான நடப்பாக மாறியபோது, நீதித் துறை ஒப்பற்ற வகையில் செய்லாற்றி, பல ஊழல் உறுப்பினர்களைச் சிறைக்கனுப்பியது. மேலும் அவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாதவாறும் செய்தது.

லாலுவும் சௌட்டாலாவும் சிறைக்குச் சென்றபின்னர், சென்ற ஆண்டு செப்டம்பர் 27 இன் நிகழ்வு, வரலாற்றுச் சிறப்புமிக்கது. அப்போதைய ஆளும் முதல்வரான செல்வி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப் பெற்று, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். மேலும் அவர் முதல்வர் பொறுப்பினின்றும் நீக்கப்பட்டார். இந்தியா முழுவதுமுள்ள மக்கள், இதனை ஒரு தலைச்சிறந்த, முன்னோடியான தீர்ப்பாகக் கருதினர். இது அவர்களுக்கு நீதித் துறையின் மீதிருந்த நம்பிக்கையை பன்மடங்காக உயர்த்தியது. எனினும், குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து, இப்போது விடுதலையும் பெற்றுள்ளனர். 

இத்தீர்ப்பினால் மிகவும் அதிர்ச்சிகுள்ளாகி இருப்பதாகத் தெரிவித்த லோக் சத்தா கட்சித் தலைவர் டாக்டர் . ஜே.பி, “வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகி இருப்பதும் அதனை மக்கள் கொண்டாடுவதும், நாட்டில் எவ்வளவு தூரம் தனிநபர் சார்ந்த, நிலப்பிரபுத்துவ அரசியல் ஓங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த அரசியல் போக்கையும் ஊழலையும் ஒழிப்பது, எவ்வளவு சிக்கலான நடவடிக்கை என்பதையும் தெளிவாக்கியுள்ளது. இது பல விசைகளின் கூட்டியக்கமாக உள்ளது. சொந்த இலாபத்திற்கும் தற்புகழ்ச்சிக்குமே அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பது நடைமுறையாகி விட்டது. பரந்துபட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படாவிட்டால், நம் நாட்டின் எதிர்காலமே மூச்சுத்திணறி நிற்க வேண்டிவரும்.” என்று கூறினார். 

தமிழ்நாடு லோக் சத்தா கட்சியின் தலைவர் திரு. பழனி குமார் அவர்கள் “சல்மான் கானின் தண்டனை நிறுத்திவைக்கப் பட்டதும், ஜெயலலிதாவின் இன்றைய விடுதலையும், நீதித் துறையின்பால் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அசைத்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் மீது இன்னும் ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த ஊழல் தலைவர்கள் நாளை எந்தத் தடையுமில்லாமல் வெளிவரக்கூடுமென்று மக்கள் எண்ணத் தொடங்கிவிடுவர்.” என்று தெரிவித்தார். 

இதன்மேல் கருத்துத் தெரிவித்த லோக் சத்தா கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெகதீஸ்வரன், “அரசியலுக்குள் ஆகச்சிறந்த, செயலூக்கமான உள்ளங்களை நாம் வரவேற்கும்போது, இத்தகைய தீர்ப்பு, ஊழல் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்ற சித்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஊழல் சக்திகளை தண்டிக்காமல் விடுவது, அச் சக்திகளை ஊக்குவிப்பதற்குச் சமமே. அவர்கள் தொடர்ந்து மக்கள் பணத்தைச் சுருட்டியபடியே இருப்பார்கள்.” என்று கூறினார்.

லோக் சத்தா கட்சி எப்போதுமே, ஒரு சட்டம் அதன் கடமையை முழுவதாக ஆற்றவேண்டுமென்று சொல்லி வருகிறது. அது, அச்சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்படுவதன் முலமே நிகழ முடியும். ஊழல் தலைவர்களும், ஆட்சித் துறையினரும் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றால் தான், லோக்பால் போன்ற சட்டங்களால் பயன் ஏதும் நிகழும். சட்டங்களை அமலாக்குவதிலும் சிக்கல்கள் உண்டு எனில், எத்தனை சட்டங்கள் இயற்றியும் பயனேதுமில்லை. 

இதிலுள்ள அடிப்படைச் சிக்கலே, மக்கள் ஊழல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது தான். பல ஊழல் வழக்குகள் நிலுவையிலுள்ள எத்தனையோ தலைவர்கள் சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் சென்று அமர்ந்துள்ளனர். ஒவ்வொருமுறையும் உறுப்பினர்களை மாற்றுவதன் மூலம் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்று, வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது. உண்மையான மாற்றம், நமது அரசு அமைப்பில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் முலமே அடையக்கூடிய ஒன்று. நமது நீதித் துறையும், காவல் துறையும் சீர்திருத்தப்பட வேண்டும். முதல்வர்களை நேரடியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுடைய ஆட்சிக் காலமும், தொடர் தேர்தல்களும் வரம்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். லோக் சத்தா கட்சி அரசமைப்பின் மாற்றங்களுக்கும் சீர்திருத்தங்களுக்கும் தொடர்ந்து போராடியபடியே இருக்கும். ஒரு நாளும் தொய்வில்லாமல் முயன்றபடியே இருக்கும். இத்தருணத்தை ஒரு வாய்ப்பாகக் கருதி போராட்டத்தை முன்னெடுக்கும்.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: