​​அதிமுக அரசின் நான்காண்டு ஆட்சி – அராஜகம், ஊழல், குறைபாடு

Saturday, May 16th, 2015 @ 8:58PM

தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக அரசின் ஆட்சி இன்று நான்காண்டு முடிந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நான்காண்டுகளில் முக்கிய துறைகளில் அரசின் செயல்பாடுகளை பற்றிய ஒரு மதிப்பீட்டை பார்ப்போம்.

கல்வி

கல்விக்காக வருடா வருடம் ஒதுக்கப்படும் தொகை அதிக அளவில் இருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை. இந்தியா முழுக்க பள்ளி கல்விக்காக நடத்தப்படும் அசர் அறிக்கை (ASER Report) 5ம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவனால் ஒரு வாக்கியத்தை படிக்க முடியாத நிலையையும், சாதாரண கூட்டல், கழித்தல் கணக்குகள் செய்ய முடியாத நிலையையும் காட்டுகிறது. மேலும் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிவறைகள் வெறும் 68 சதவிகிதமே இருக்கிறது என்று அசெர் அறிக்கை தெரிவிக்கும் நிலையில் தமிழக அரசோ அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள் இருப்பதாக பொய் உரைத்துள்ளது​. ​​கல்வி பெறும் உரிமை சட்டத்தை செயல்படுவத்துவதற்கு தமிழக அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் மிக குறைந்த அளவே செலவானாலும் இதுவரை ஆன தொகையை தனியார் பள்ளிகளுக்கு தராமல் இருப்பது இந்த சட்டத்தை அரசு முடக்குவது மட்டுமன்றி ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியையும் கொடுக்க மறுக்கின்றது.​

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை

அரசு நிர்வாகம் திறம்பட இயங்க அதிகார பரவலாக்கலும் வெளிப்பட தன்மையும் முக்கியம். தமிழகத்தை பொறுத்த வரையில் தகவல் பெறும் உரிமை சட்டம் பயன் படுத்தப்படுவதை முடக்க அரசும் மாநில தகவல் ஆணையமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தகவல் கோரி விண்ணபிக்க படும் மனுக்களை கால தாமத படுத்துவதும் தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தால் அவர்கள் முடிந்தவரை தகவல் தரப்படுவதை தடுப்பதும் தகவல் உரிமை போராளிகளை அவமதிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகின்றன. கட்சி சார்பற்று இருக்க வேண்டிய தகவல் ஆணையர் பொறுப்புக்கு அதிமுக உறுப்பினர்களை நியமிக்கும் போக்கும் இருக்கிறது.

மக்களுக்கு அடிப்படை அரசு சேவைகள்

மக்களுக்கு அடிப்படை அரசு சேவைகளை வழங்குவதில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்னரும் எந்த மாறுதலும் இல்லை. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கட்டுப்படுத்தப்படாமல் சாதாரண சேவைகளை வழங்குவதிலும் காலதாமதம் இருக்கிறது. தமிழகம் முழுதும் ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்திற்காக விழிப்புணர்வு பைக் பிரச்சாரம் செய்த லோக் சத்தா தலைவர்கள் திரு. ஜெகதீஸ்வரன் அவர்களும், திரு. ஜெய் கணேஷ் அவர்களும் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ததில் லஞ்சம் மற்றும் காலதாமதம் ஆகிய பிரச்சனைகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் அம்மா திட்டம் போன்ற கண்துடைப்பு திட்டங்கள் எந்த வித பயனையும் தரவில்லை என்பதே நிதர்சனம். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தில் அரசு சேவைகள் எந்தவித குறைபாடும் இன்றி வழங்கப்படுவதாக இந்த அரசு பொய் உரைத்துள்ளது.

ஊழல் / நிர்வாக சீர்கேடு

​​தமிழகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் ஊழலை களைய ‘லோக் ஆயுக்தா’ மாதிரியான அமைப்பு ரீதியான ஏற்பாடுகளும் இல்லை. இதனால் ஊழல் தொடர்ந்து அதிகரிப்பதோடு அது மாநில வளர்ச்சியையும் பாதிக்கிறது. நேர்மையான அதிகாரிகள் செயல்பட முடியாமல் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆவின் ஊழல், முட்டை கொள்முதல் ஊழல், உடன்குடி மின்திட்ட ஊழல், பொதுப்பணித்துறை ஊழல், அரசு வேலைக்கு நியமனம் மற்றும் பணியிட மாற்றத்தில் ஊழல் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியன பெரிதும் பொதுமக்களால் பேசப்பட்டும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லோக் ஆயுக்தா இல்லாத வெகுசில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று.

தொழில்துறை/ வேலைவாய்ப்பு

தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்க ஏதுவான சூழ்நிலையை உருவாக்க இந்த அரசு தவறிவிட்டது. இதற்கு ஊழல், கட்டமைப்பு வசதியின்மை ஆகியன காரணங்கள். கிட்டதிட்ட 15,000 மெகாவாட் மின்சார தேவை இருக்கும் தமிழகத்தில் வெறும் 12,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மே 2011 முதல் 31 ஆயிரம் கோடிகளுக்கு மேல் முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், இது வரை வெறும் 14 ஆயிரம் கோடிகள் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொழில்துறை உற்பத்தியில் 60% சென்னையை சுற்றிய 150 கி.மீ உள்ளாகவே நடந்து பிற மாவட்டங்கள் பெரிதும் புறக்கணிக்கப் படுகின்றன. தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மிகக் குறைந்த அளவில் இருப்பதாலேயே அங்குள்ளவர்கள் உயிரையும் பணையம் வைத்து செம்மரம் வெட்டும் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
வேலைவாய்ப்பை பெருக்க நடக்கவிருந்த முதலீட்டார்கள் மாநாடு ஆளும் கட்சியின் அரசியல் லாபத்துக்காக ஒத்திவைக்கப்பட்டது.

பொதுவாகவே அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து நிலவும். அந்தக் கருத்து கடந்த நான்காண்டுகளில் வலுவிழந்துவிட்டது. முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் கைதின் போது அதிமுக ரவுடிகள் நடத்திய அராஜகத்தை காவல்துறை வேடிக்கை பார்த்தது. மேலும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போடுவது போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து நடத்தி வந்தது. அரசு கேபிள் மூலம் ஊடக சுதந்திரத்தை அடக்கும் போக்கும் இருந்தது.

இது தவிர அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் போன்ற கண்துடைப்பு திட்டங்கள் மூலம் அவர்களின் தோல்வியை மறைப்பதும், சுதந்திர சந்தைக்கு எதிரான முயற்சிகளும் நடந்தே வந்தன. அரசின் செலவில் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ போன்ற பொய்யான விளம்பரங்கள் மூலம் தனிநபர் துதிபாடல் நடந்தது. சுருங்கச்சொன்னால் இந்த நான்காண்டு ஆட்சியை அராஜகம், ஊழல், குறைபாடு என்றே லோக்சத்தா கட்சி கருதுகிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: