திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் – நாளை மதுபான கடைகளை மூட லோக்சத்தா கட்சி கோரிக்கை

Wednesday, July 29th, 2015 @ 1:30PM

Dr. APJ Abdul Kalamமுன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என லோக்சத்தா கட்சி கோருகிறது.

இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்ற பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்பு. இனி இப்படி ஒரு தலைவரை பார்ப்போமா என்ற ஏக்கத்தை நம்மிடையே ஏற்படுத்திய திரு கலாம் தன் கடைசி நிமிடம் வரை மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் ஈடுபட்டு நாட்டுக்காக தன்னையே அர்பணித்துக் கொண்ட தலைவர். மக்கள் அணு உலைகள், ​நியூட்ரினோ போன்றவற்றுக்கு அச்சம் கொண்ட போது அந்த அச்சத்தை போக்க மக்களுக்கு அதை எளிதாக புரிய வைத்த விஞ்ஞானி, பள்ளி மாணவ மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் ஆசிரியர், இளைய தலைமுறையினருக்கு எதிர்காலம் பற்றி சிந்திக்க, கனவு காண, அவர்களை அக்கினிக் குஞ்சுகளாய் மாற்ற எழுச்சியை அளித்த நாயகன் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை திரு. கலாம்.

அவரின் கனவுகளான இந்தியா 2020, பொருளாதார வளர்ச்சியடைந்த இந்தியா, அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தி பாதுகாப்பான அணு உலைகள் பலவற்றை நாடு முழுவதும் நிறுவுவது, அரசியல் மாற்றம் ஆகியவற்றை நிறைவேற்றுவது நம் கடமையாகும். அவர் கனவுகளை நிறைவேற்ற லோக்சத்தா கட்சி பாடுபடும் என உறுதி அளிக்கிறது.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை அரசு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு வார காலம் இரங்கல் அனுசரிக்கும் என்றும், ஒரு வார காலத்திற்கு எந்த ஒரு அரசு கேளிக்கை நிகழ்சிகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை நல்லடக்கம் செய்யும் தினமான 30-07-2015 (நாளை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டுமென லோக்சத்தா கட்சி கோருகிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: