லோக்சத்தா கட்சியின் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு வழக்கில் தேமுதிக தன்னை இணைத்துக்கொள்ள மனு

Tuesday, July 21st, 2015 @ 8:16PM

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான திரு.விஜயகாந்த லோக்சத்தா கட்சி தொடுத்த ‘தமிழக சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு’ பொது நல வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ள மனு செய்துள்ளார்.

தமிழக அரசு ஜூலை 1ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு நிதிச்சுமையில் இருப்பதாக தெரிவித்தது. இது குறித்து திரு.விஜயகாந்த் அவருடைய மனுவில், “தமிழ்நாடு செய்தி பிரிவு அர்சு விளம்பரத்திற்கும், பிரச்சாரத்திற்கும் கடந்த 3 ஆண்டுகளில் 55 கோடி ரூ செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.”

மேலும் சட்டமன்றத்தை மக்களுக்கு அருகில் எடுத்துச்செல்லும் வண்ணம் இதற்கென 24 மணி நேர சேவை செய்யும் தொலைக்காட்சி வேண்டும் என்றும் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்தில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் ஆட்சி குறித்து மிகுந்த அக்கறை கொள்வதால், தனியார் தொலைக்காட்சிகள் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், ஆந்திரா, கர்நாடக சட்டமன்றத்தில் இது பழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால தமிழக அரசு பணம் இல்லை என்ற காரணத்தால் இதை மறுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் எந்தவித கட்டணமும் இல்லாமல் ‘கேப்டன் தொலைக்காட்சி’ மூலம் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தயாராக இருப்பதாகவும் தன் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 1 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு 2 காரணங்களை காரணம் சொல்லி சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை மறுத்தது.

  1. தமிழக அரசின் நிதிச்சுமை.
  2. மற்ற மாநிலங்களில் அந்தந்த சட்டமன்றங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை.

இந்த இரண்டையும் எழுத்துப்பூர்வமாக (Counter Affidavit) தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. கூடுதல் பதில் மனு தமிழக அரசால் தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதில் மனுவில் அரசு தரப்பு வாதங்கள் :

  1. மக்களவையை பொறுத்தவரை முதலில் தூர்தர்சனில் தேவையான நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டு 2006 ‘லோக்சபா தொலைக்காட்சி’ மக்களவையால் துவக்கப்பட்டது. அந்த தொலைக்காட்சியில் மக்களவை நடக்காதபோது பல்வேறு செய்திகள், கல்வி சார்ந்த, பாரம்பரியம் சார்ந்த நிகழ்ச்சிகள், விவாதங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த தொலைக்காட்சிக்கு நேரடி ஒளிபரப்பு வழங்க ஒரு நிர்வாக இயக்குனரும், பத்திரிகையாளர்களும், ஊடகத்தினரும் இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடக்கும் அதே நேரம் இணையத்திலும் மக்களவை நடவடிக்கைகள் ஒளிபரப்பப்படுகின்றன. மாநிலங்களவையும் மேற்சொன்னது போலவே நேரடி ஒளிபரப்பு செய்துவருகிறது. மாநிலங்களவையில் தலைமை நிர்வாக அதிகாரியின் கீழ் இரண்டு நிர்வாக இயக்குனர்களும், நிர்வாக ஆசிரியரும் இன்ன பிறரும் பணி செய்கிறார்கள்.

  2. மக்களவை, மாநிலங்களவை போல தமிழக சட்டமன்றத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய எவ்வளவு செலவாகும் என இந்த நீதிமன்றம் கேட்டுள்ளது. சமீபத்திய தொழில்நுட்பங்கள் கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்ப செலவாக 60 கோடி ரூ செலவாகும். 10 உயர் ரக பதிவு கருவிகள் வாங்க 20 கோடி ரூபாயும், மற்ற உபகரணங்களுக்கு 40 கோடியும் என மொத்தம் 60 கோடி செலவாகும். இது தவிர மாத செலவுகள் (பணி செய்ய 82 பேர்) 20, 60, 000/- ரூ ஆகும். தமிழக அரசாங்கம் ஒரு வருடத்தில் 50 முதல் 60 நாட்கள் மட்டுமே நடக்கிறது. அப்படி இருக்கையில் மனித வளம் வீணடிக்கப்படும்.

  3. மக்களவை, மாநிலங்களவை தாண்டி 80% மாநில அரசாங்கங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. ஆந்திரா – சபாநாயகர் தேர்ந்தெடுத்த ஒரு நிறுவனம் பதிவு செய்து மற்ற தொலைக்காட்சிகளுக்கு நேரடி ஒளிபரப்பிற்கு அனுப்புகிறது. சபாநாயகர் எந்த பகுதிகள் ஒளிபரப்படலாம் என நினைக்கிறாரோ அது மட்டுமே ஒளிபரப்பப்படும். ஆகையால் அதனை முழு நேரடி ஒளிபரப்பு என்று அழைக்க முடியாது. பதிவு செய்யும் நிறுவனத்திற்கு 6 மணி நேரத்திற்கு 70,000 ரூ வழங்கப்படுகிறது. மகாராஷ்ட்ராவிலும் ஆந்திரா போலவே நடைபெறுகிறது. ஒரு தினத்திற்கு 1 லட்ச ரூ நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. பீகாரிலும் ஆந்திரா போலவே நடக்கிறது. மிசோரமில் நேரடி ஒளிபரப்பு உள்ளூர் நிறுவனம்கொண்டு ஒளிபரப்படுகிறது. கோவாவில் தனியார் தொலைக்காட்சிகளுக்கு சபாநாயகர் முடிவு செய்யும் பகுதிகள் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பஞ்சாபில் இது முயற்சிக்கப்பட்டு கடைசி நிதிநிலை அறிக்கையோடு நிறுத்தப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் நிதிநிலை அறிக்கையும், கேள்வி நேரமும் முன்னர் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, பிறகு நிதிச் சுமையால் அவை கைவிடப்பட்டன. அசாம், சட்டீஸ்கார், டெல்லி, குஜராத், ஹிமாசல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மனிப்பூர், மேகாலயா, புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்திர பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் முழு நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. இதில் கேரளா,சட்டீஸ்கார், நாகலாந்து மற்றும் ஒரிசாவில் ‘கேள்வி நேரம்’ மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. ஜார்க்கண்டில் தூர்தர்சன் துணையோடு பகுதிகள் மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. கேரளா மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் காலை நடந்த சட்டமன்ற நிகழ்வுகள் இரவில் இணையம் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. டில்லியில் இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் காணொளி பதிவுகள் இணையத்தில் சட்டமன்றம் நடந்த மறு தினம் கிடைக்கிறது. தமிழகத்தில் கவர்னர் உரையும், நிதிநிலை அறிக்கையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் பதிவு செய்யப்பட்டு, திருத்தப்பட்டு (Edited) 34 தொலைக்காட்சிகளுக்கு சில மணி நேரங்களில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அரசின் பதில் மனுவில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.

Categories: Court Cases, Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: