இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து லோக்சத்தாவின் பார்வை

Wednesday, August 26th, 2015 @ 5:18PM

  1. மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா என்பது வரவேற்க வேண்டிய விசயம்தான் என்றாலும் சென்னை மாநகரத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை (3000) மிகக் குறைவாக இருப்பதும், அந்த பேருந்துகளும் தினம் 300க்கும் அதிகமாக பேருந்துகள் பணிமனையில் இருப்பதும் குறித்து அரசு கவலைகொள்வதாக தெரியவில்லை. அதேபோல் இன்று ஓடும் ஏ.சி பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகளின் உள்கட்டமைப்பு – இருக்கை, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மிக மோசமாகவே இருக்கிறது. மேலும் முன்னர் GPRS தொழில்நுட்பம் கொண்டு ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பேருந்து எத்தனை மணிக்கு வரும் என்று அறியும் வசதி இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்யாதது ஒரு புறம் இருக்க கண்காணிப்பு கேமராக்களுக்கும் இதே நிலைமை வராது என்பது என்ன நிச்சயம்? இவை யாவும் சரியாக பராமரிக்கும் போது கண்காணிப்பு கேமரா பேருந்துகளில் மட்டுமல்லாமல் பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் பொறுத்தப்பட வேண்டும்.

  2. 31 கல்லூரிகளுக்கு இடம் கையகப்படுத்தும் பணிகள் – இன்று தமிழ்நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக ‘வேலைவாய்ப்பு’ பெருகி வருகிறது. அதே சமயம் ஃபிட்டர், எலெக்டீரீசியன் போன்ற சில பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலையும் இருக்கிறது. சீனா போன்ற நாடுகளில் கலை, பொறியியல் கல்லூரிகளை விட அதிகமான பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் எல்லா இடங்களும் நிறையாமல் இருப்பதும், கலைக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இல்லாததையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம் இருக்கும் வேலையில்லாமல் திண்டாடும் பொறியியல், கலைக் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பணியிடங்களை பெருக்குவதும் அரசின் தலையாய கடமை.

  3. தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையே இல்லை – ஒரு பொய்யை மறுபடி மறுபடி சொல்வதால் அது உண்மையாகிவிடும் என்று அரசு நினைப்பது கண்டனத்திற்குரியது.

  4. சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் – வரவேற்க வேண்டிய விசயம். அதே சமயம் அவர் எந்த கட்சியில் இருந்தார் என்ற தேவையற்ற விவாதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற மணிமண்டபங்கள் கட்டுவது ஒரு அரசாங்கம் எடுக்கும் முடிவென்றாலும், அதற்கு மக்களின் வரிப்பணம்தான் பயன்படுத்தபடுகிறதே தவிர ஆளும் கட்சியின் நிதியிலிருந்து கட்டப்படுவதில்லை என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

இன்றும் எல்லா எதிர்கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளார்கள். மேகதாது அணைப் பிரச்னை, சேஷசமுத்திரம் கலவரம், ஆம்பூர் கலவரம், ஆந்திர வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், என்.எல்.சி போன்ற பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கைகள் நிராகரிக்கப்பட அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள்.

மிகக் குறைந்த நாட்களே சட்டமன்றம் கூடுவதால் வருகின்ற அடிப்படை பிரச்சனை இது. இந்த கூட்டத்தொடருக்கு முன் இந்த வருடம் வெறும் 9 நாட்களே சட்டப்பேரவை நடந்திருக்கிறது. ஆரோக்யமான ஜனநாயகம் உருவாக ஒரு வருடத்தில் 120 நாட்களாவது சட்டமன்றம் கூட வேண்டும்.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: