பொய் வழக்கில் லோக் சத்தா கட்சி தலைவர்கள் கைது. கோவை சிறையிலும், திருப்பூர் கட்சி அலுவலகத்திலும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்

Wednesday, August 5th, 2015 @ 4:00PM

நேற்று (4-ஆகஸ்ட்) அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த லோக்சத்தா தலைவர்கள் திரு.பழனி குமார், திரு.செல்வராஜ் மற்றும் திரு.நாகராஜ் ஆகியோரை அனுப்பர்பாளையம் (திருப்பூர்) இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கை என காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மேல் திருப்பூரிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையை உடைக்க திட்டம் தீட்டினார்கள் என 151, 7(1)(a) ஆகிய பிரிவுகளில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

நேற்று காலை 7 மணிக்கு அவர்கள் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நீதியதி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். செல்லும் வழியில் கடமை தவறிய காவல் ஆய்வாளர், ‘நீதிபதி உங்களிடம் போயம்பாளையம் டாஸ்மாக கடையை உடைத்தீர்களா என கேட்டால், ஆம் உடைத்தோம் என சொல்லுங்கள்’ என்று கூசாமல் பொய்யுரைக்க சொல்கிறார். இதற்கு லோக் சத்தா கட்சியின் தலைவர்கள் மறுத்தனர். பின்பு நீதிபதியை சந்திக்காமல் மூவரும் மறுபடியும் காவல் நிலையத்திற்கே அழைத்து வரப்பட்டனர்.

நாம் எவ்வளவோ முறை முதல் தகவல் அறிக்கை கேட்டும் நமக்கு மறுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டு அங்கு நீதியரசர் முன் நிறுத்தப்பட, “காவல்துறை நீங்கள் மூவரும் அதிகாலை 1 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன் இருக்கும் கடையை தகர்க்க சதித்திட்டம் தீட்டினீர்கள்” என்று தெரிவித்துள்ளார்கள் என்று சொல்ல, லோக்சத்தா தலைவர்கள் அதை மறுத்தனர். நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க ஆணையிட்டார் . அவர்கள் மூவர் மீதும் பிணையில் வெளி வர முடியாத அளவுக்கு 151, 7(1)(a) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திரு.பழனிக்குமார் சிறையிலேயே தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் காவல்துறையின் பொய் வழக்கை கண்டித்து லோக் சத்தா கட்சியினர் திருப்பூர் அலுவலகத்தில் இன்று (5-ஆகஸ்ட்) காலை முதல் கட்சியின் தேசிய, மாநில, மாநகர பொறுப்பாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம். தலைவர்களை விடுவிக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். இந்நிலையில் லோக்சத்தா கட்சியின் மாநில தலைவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததை தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஊடக நண்பர்கள் இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு: 9791050512​

Categories: Activities, Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: