இணையச் சேவை வணிகத்தில் அரசு நுழைவதற்கு லோக் சத்தா கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது – இன்றியமையாத திட்டங்களில் கவனம் வேண்டும்

Thursday, September 17th, 2015 @ 11:59AM

அரசு கேபிள் டி.வி கழகம் மூலமாக மலிவான இணையச் சேவை வழங்கும் அரசின் முடிவிற்கு லோக் சத்தா கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. அரசே இவ்வணிகத்தில் நேரடியாக இறங்குவது, திறனற்றச் சேவைக்கும், மக்களின் வரிப்பணம் வீணாவதற்கும் வழிவகுக்கும் என கட்சி கருதுகிறது.

லோக் சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. பழனிக்குமார், அவரது அறிக்கையில், “முன்னதாக கேபிள் டி. வி. சேவையை மலிவாகவும் தரமாகவும் வழங்கப்போவதாகக் கூறி, அவ்வணிகத்தைத் அரசு தானே மேற்கொண்டது. ஆனால் உண்மை நிலைமையோ நேர்மாறாக உள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதை ஒரு காரணமாகப் பயன்படுத்தி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பணம் பறித்து வருகின்றனர். அவர்களே உள்ளூர் தொலைக்காட்சிச் சேவைகளை உரிமம் ஏதும் பெறாமல் பின்னின்று நடத்தி வருகின்றனர். இதன்மூலமாக அரசே மறைமுகமாக ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றது. இத்துறையின் முதன்மையான சேவையான கேபிள் டி.வியே இவ்வாறு செயலற்று இருக்கும்போது, இணையச் சேவையைச் சிறப்பாக வழங்கும் என எதிர்பார்க்க முடியாது.” என்று கூறினார்.

“இணையச் சேவை அளிப்பதில், பொதுத்துறை நிறுவனங்களே பெரும்பாடு பட்டும் இழப்பில் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், தமிழக அரசு இச்சேவையை ஏற்பது மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் முடிவாகும். அரசிற்கு ஏற்கனவெ இருக்கும் இழப்பை இது மேலும் பெருக்கும். ஆக, இது வரப்போகும் தேர்தலை மனதிற்கொண்டு வாக்கு வங்கியைப் பெருக்கும் திட்டம் மட்டுமே.”, என்றும் கூறினார்.

லோக் சத்தா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் திரு. ஜெகதீஸ்வரன் கூறுகையில் “தூய்மையான குடிநீர், கழிப்பறை வசதி, மின்சார வசதி ஆகியவற்றை வழங்கத் தவறியுள்ள அரசு, அதன் தோல்வியை மறைக்க இத்தகையச் சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்து வேடமிடுகிறது.

தமிழகத்தின் இணையப் பரவலாக்க விழுக்காடு வெறும் 5 சதவிகிதத்திற்கு குறைவு. மேலும், எளிதாகத் தொழில் நடத்தும் பட்டியலில் அதற்கு 12ஆம் இடமே கிடைத்துள்ளது. இவ்விரு தரவுகளையும் நாம் ஒப்புநோக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இணையத்தைப் பரவலாக்குவதற்கு அத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்கவேண்டும். தொழில் நடத்தும் சூழலை எளிமைப்படுத்த வேண்டும். அதே நேரம் அவர்கள் மீது கண்காணிப்பும் இருக்க வேண்டும். அப்போது, கூடுதல் முதலீடுகள் மூலமாக இணையம் தானாகவே பரவலாகி, போட்டி மூலம் தரம் மேம்பட்டு கட்டணம் குறையும். இவை எவற்றையுமே செய்யாமல், அரசே இவ்வணிகத்தில் நேரடியாக இறங்குவது, தேவையில்லாத இழப்புகளுக்கு அதனை இட்டுச்செல்லும். இதில் செய்யப்படும் கவர்ச்சியான முதலீட்டை, இன்றியமையாத மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றி ஆவன செய்வது அரசின் கடமையாகும். அதை உடனடியாகச் செய்யுமாறு அரசை லோக் சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

Categories: Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: