திருச்செங்கோட்டு தலித் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலையை சிபிஐ விசாரிக்கவேண்டும் – லோக் சத்தா கட்சி வலியுறுத்தல்

Monday, September 21st, 2015 @ 7:31PM

காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு லோக்சத்தா கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. ஒரு நேர்மையான இளம் அதிகாரியை நாம் இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

திருச்செங்கோட்டுக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா, கோகுல்ராஜின் கொலைவழக்கைத் தீவிரமாக விசாரித்து வந்துள்ளார். சாதிப்பின்புலம் சார்ந்த இந்தக் கொலை பற்றிய விசாரணையில், உயரதிகாரிகளின் தலையீடே அவரது தற்கொலைக்கு காரணமென்று, அவரது அவருடன் பணிபுருந்த அதிகாரிகள் குற்றம் சாற்றுகின்றனர். எந்தப் புலனாய்வுத் துறையும் தன் ஊழியர்களையே விசாரணை செய்யும்போது பக்கச்சார்பு இல்லாமல் அதைச் செய்யாது. டி.எஸ்.பி தற்கொலை விசாரணையை சிபிஐ மேற்கொண்டு நடத்தவேண்டும் என்று லோக்சத்தா கட்சி வற்புறுத்திக் கேட்கின்றது.

உயரதிகாரிகள் இந்தக் கொலைவிசாரணையில் தலையிடுவதாகவும், அவரது தற்கொலை ‘வாக்குமூலத்தையும்’ செல்பேசி தரவுகளையும் இடைமறித்து மாற்றியிருப்பதாகவும், அவரது உடனூழியர்களே குற்றஞ்சாட்டியிருப்பது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. டி.எஸ்.பி தற்கொலை வழக்கோடு, கோகுல்ராஜ் கொலைவழக்கையும் சிபிஐ யே ஏற்று நடத்தவேண்டும் என்று லோக்சத்தா அழுத்தமாகக் கோரிக்கை விடுக்கிறது. மேலும், மேற்கொண்டு எந்த இடையூறுகளும் நடக்காமலிருக்க, அவரது உடனடி மேலதிகாரிகளுக்கு பணிவிடுப்பு அல்லது பணிமாற்றம் அளித்து தள்ளிவைக்க வேண்டும் என்றும் கேட்கிறது.

காவல் துறையில் பணிபுரியும் பெண்ணதிகாரிகளை அவர்களுடன் பணிபுரியும் ஆணதிகாரிகளே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது வெளிப்படையான ஒன்று. டி.எஸ்.பி விஷ்ணுபிரியா போன்ற பிற பெண் உயரதிகாரிகளும் இத்தகையக் கொடுமைகள் காரணமாக, பணி ஒய்வு பெற்றுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. காவல் துறை அதிகரிகளுக்கு எதிரான கொடுமைகளை விசாரிக்க துறைசாரா தனிக்குழு அமைக்கவேண்டும் என்று தமிழக அரசிடம் லோக்சத்தா வலியுறுத்துகிறது.

வழக்கில் குற்றம்செய்யாதவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய, உயரதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார் என்றும் அவரது உடனலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வழக்கு விசாரணையே இல்லாமல், பல நாட்களுக்கு மக்களைச் சிறைவைக்க உரிமை வழங்கும் கொடூரச் சட்டமான குண்டர்ச்சட்டத்தைத் திரும்பப்பெறுமாறு லோக் சத்தா கட்சி அழுத்தத்துடன் கோரிக்கை விடுக்கின்றது. இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் நேரெதிரானதாக இச்சட்டம் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: